பொல்லார்டு அடிக்காம விட்டார்னு சந்தோசப்படுங்க! க்ருனால் பாண்டியாவை விளாசிய முன்னாள் வீரர் – என்ன நடந்தது?

Pollard Krunal Pandya
- Advertisement -

மும்பை நகரில் விறுவிறுப்புடன் நடைபெற்று வரும் ஐபிஎல் 2022 கிரிக்கெட் தொடர் பல பரபரப்பான தருணங்களுடன் வெற்றிகரமான 4-வது வாரத்தை கடந்து ரசிகர்களை மகிழ்வித்து வருகிறது. ஆனால் வெற்றிகரமான ஐபிஎல் அணி என பெயரெடுத்த ரோகித் சர்மா தலைமையிலான மும்பைக்கு மட்டும் இந்த தொடர் ஆரம்பத்திலிருந்தே வெற்றிகரமாக அமையவில்லை. ஏனெனில் இதுவரை பங்கேற்ற 8 போட்டிகளிலும் தொடர்ச்சியாக தோல்வியடைந்த அந்த அணி வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு ஐபிஎல் தொடரின் முதல் 8 போட்டிகளில் தொடர்ந்து தோல்வியை பதிவு செய்த முதல் அணி என்ற பரிதாப சாதனை படைத்துள்ளது.

இதனால் தற்போது புள்ளி பட்டியலில் 10-வது இடத்தில் திண்டாடும் அந்த அணி அடுத்த 6 போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றி பெற்றாலும்கூட பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியாது. கடந்த வருடங்களில் எதிரணிகளை மிரட்டிய அந்த அணிக்கு இந்த வருடம் பேட்டிங் பவுலிங் என எதுவுமே சரிவர அமையவில்லை.

- Advertisement -

கடுப்பேற்றிய க்ருனால் பாண்டியா:
அதிலும் நேற்று முன்தினம் லக்னோவுக்கு எதிரான தனது 8-வது லீக் போட்டியில் அந்த அணி நிர்ணயித்த 169 என்ற இலக்கை துரத்திய மும்பை எவ்வளவோ போராடியும் 20 ஓவர்களில் 132/8 ரன்களை மட்டுமே எடுத்து 36 ரன்கள் வித்தியாசத்தில் பரிதாபமாக தோற்றது. அந்த போட்டியில் கேப்டன் ரோகித் சர்மா அதிரடியாக 39 (31) ரன்கள் எடுக்க இஷான் கிசான் 8 (20), தேவால்டு ப்ரேவிஸ் 3 (5) சூர்யகுமார் யாதவ் 7 (7) போன்ற வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால் 67/4 என தடுமாறிய அந்த அணி ஆரம்பத்திலேயே சரிவை சந்தித்தது.

அப்போது களமிறங்கிய நம்பிக்கை நட்சத்திரம் கைரன் பொல்லார்ட் இளம் வீரர் திலக் வர்மாவுடன் இணைந்து தனது அணியின் வெற்றிக்கு போராடினார். இருப்பினும் பெரிய ரன்கள் எடுக்க முடியாத அவர் லக்னோவின் க்ருனால் பாண்டியா வீசிய கடைசி ஓவரின் முதல் பந்தில் 19 (20) ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனால் அவுட்டானதும் பெவிலியனை நோக்கி நடந்த அவரை பின்புறமாக சென்று தாவி கட்டிப்பிடித்த க்ருனால் பாண்டியா அவரின் மண்டையில் முத்தம் கொடுத்து பெவிலியனுக்கு வழியனுப்பி வைத்தது பார்ப்போரை கடுப்பாக வைத்தது.

- Advertisement -

விளாசும் ரசிகர்கள்:
கடந்த வருடம் வரை மும்பை இந்தியன்ஸ் அணியில் ஒன்றாக விளையாடியதால் தனது நண்பரான பொல்லார்ட்டின் விக்கெட்டை எடுத்த சந்தோசத்தில் அதை கொண்டாடும் வகையில் முத்தம் கொடுத்து அவரை விளையாட்டுக்காக அவ்வாறு க்ருனால் பாண்டியா பெவிலியன் அனுப்பி வைத்தார். இருப்பினும் என்னதான் நண்பர்களாக இருந்தாலும் விளையாட்டாக இருந்தாலும் அதற்கு ஒரு எல்லையும் வரம்பும் வேண்டாமா என்று க்ருனால் பாண்டியாவை முன்னாள் இந்திய வீரர் பார்த்தீவ் பட்டேல் விமர்சித்துள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “க்ருனால் மற்றும் பொல்லார்ட் ஆகியோர் நல்ல நண்பர்கள் என்றாலும் களத்தில் விளையாடும்போது வித்தியாசங்கள் உள்ளது. பொல்லார்ட் ரன்கள் அடிக்கவில்லை. மறுபுறம் மும்பையும் தொடர்ந்து தோல்வியடைந்து வருகிறது. எனவே அதுபோன்ற நேரத்தில் அவரிடம் இடைவெளி விட்டு இருக்க வேண்டும். உடை மாற்றும் அறைக்குள் நீங்கள் இது போன்றவற்றை செய்யலாம். ஆனால் களத்தில் இவ்வாறு செய்தது சரியானதல்ல”

- Advertisement -

“தனது அணியை வெற்றி பெற வைக்க முடியவில்லை என்ற ஏமாற்றத்தில் சென்று கொண்டிருந்த அவரிடம் க்ருனால் பாண்டியா நடந்து கொண்டது அதிகப்படியாக இருந்தது. ஒருவேளை அதற்கு பொல்லார்ட் திருப்பி ரியாக்சன் கொடுத்திருந்தால் என்னவாகியிருக்கும்” என்று விளாசினார்.

ரசிகர்கள் கோபம்:
அவர் கூறுவது போல ஏற்கனவே ரன்கள் அடிக்க முடியாமல் மோசமான பார்மில் இருக்கும் அவர் தனது அணி தொடர் தோல்விகளால் தவிப்பதால் நிச்சயம் ஏமாற்றத்துடன் இருப்பார். அதுபோன்ற சமயத்தில் இவ்வாறு நடந்து கொள்வது வெந்த புண்ணில் அம்பை செய்தது போல் உள்ளது என்று பார்த்தீவ் பட்டேல் விமர்சித்துள்ளார். மேலும் கோபத்தில் இருந்த பொல்லார்ட் பதிலுக்கு ஏதாவது திருப்பி செய்திருந்தால் என்னவாகி இருக்கும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

- Advertisement -

அந்த தருணத்தில் க்ருனால் பாண்டியா அவ்வாறு நடந்து கொண்டதற்காக பொல்லார்டு கடும் கோபமடைந்த போதிலும் அதை அடக்கிக் கொண்டு பெவிலியன் திரும்பினார். ஆனால் அதை பார்த்த ரசிகர்கள் அவர் செய்த வேலைக்கு பொல்லார்ட் அவரை திருப்பி அடித்திருக்க வேண்டும் என்று சமூக வலைதளங்களில் தங்களது கோபத்தை வெளிப்படுத்தினர்.

இதையும் படிங்க : ஐபிஎல் வரலாற்றில் மிக இளம் வயதில் சதம் அடித்த டாப் 5 பேட்ஸ்மேன்களின் – பட்டியல் இதோ

மேலும் பொதுவாகவே முரட்டுத்தனமான மனிதராக காட்சி அளிக்கும் பொல்லார்ட் அந்த சமயத்தில் கோபத்தில் திருப்பி எதுவும் செய்யாமல் விட்டதற்கு சந்தோசப்படுங்க என்று க்ருனால் பாண்டியாவை ரசிகர்கள் எச்சரிக்கின்றனர். ஆனால் இது போன்ற செயலை தனது சகோதரரை போன்ற பொல்லார்ட்டிடம் செய்ததை க்ருனால் பாண்டியா மகிழ்ச்சியுடன் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

Advertisement