ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அங்கு 3 கோட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. அத்தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலியா வென்ற நிலையில் இரண்டாவது போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பதிலடி கொடுத்தது. அந்த நிலையில் மூன்றாவது போட்டி நவம்பர் பத்தாம் தேதி பெர்த் நகரில் நடைபெற்றது.
அந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதை தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியாவுக்கு ஜேக் பிரேசர் 7 ரன்களில் அவுட்டானார். அடுத்ததாக வந்த ஆரோன் ஹார்டி 13, கேப்டன் ஜோஸ் இங்லீஷ் 7 ரன்களில் அவுட்டாகி பின்னடைவைக் கொடுத்தார்கள். அதனால் 56-3 என ஆஸ்திரேலியா ஆரம்பத்திலேயே தடுமாறியது.
பாகிஸ்தான் மிரட்டல்:
அப்போது மறுபுறம் நிதானமாக விளையாடிய மேத்தியூ ஷார்ட்டை 22 ரன்களில் அவுட்டாக்கிய ஹரிஷ் ரவூப் அடுத்து வந்த மேக்ஸ்வெலை டக் அவுட்டாக்கினார். இறுதியில் சீன் அபௌட் அதிகபட்சமாக 30 ரன்கள் எடுத்தும் 31.5 ஓவரிலேயே ஆஸ்திரேலியாவை வெறும் 140 ரன்களுக்கு பாகிஸ்தான் சுருட்டி வீசியது. அந்தளவுக்கு பட்டாசாக பந்து வீசிய அந்த அணிக்கு அதிகபட்சமாக சாகின் அப்ரிடி 3, நாசிம் சா 3, ஹரிஷ் ரவூப் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.
பின்னர் 141 ரன்களை துரத்திய பாகிஸ்தானுக்கு துவக்க வீரர்கள் அப்துல்லா ஷபிக் 37, சாய்ம் ஆயுப் 42 ரன்கள் எடுத்தார்கள். அடுத்ததாக வந்த பாபர் அசாம் 28*, முகமது ரிஸ்வான் 30* ரன்கள் குவித்தனர். அதனால் 143-2 ரன்கள் எடுத்த பாகிஸ்தான் 8 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வென்றது. அதன் காரணமாக 2 – 1 (3) என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவை அதனுடைய சொந்த மண்ணில் வீழ்த்தி தொடரை பாகிஸ்தான் வென்றது.
சாதனை வெற்றி:
இதன் வாயிலாக ஆஸ்திரேலியாவை அதனுடைய சொந்த மண்ணில் 22 வருடங்கள் கழித்து முதல் முறையாக ஒருநாள் தொடரில் வீழ்த்தி பாகிஸ்தான் சாதனை வெற்றி பெற்றுள்ளது. இதற்கு முன் கடைசியாக 2002ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவை அதனுடைய சொந்த மண்ணில் பாகிஸ்தான் தோற்கடித்திருந்தது. தற்போது 22 வருடங்களுக்குப் பின் மீண்டும் ஆஸ்திரேலியாவில் வென்றுள்ள பாகிஸ்தான் பழைய ஃபார்முக்கு திரும்பியுள்ளது அந்நாட்டு ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதையும் படிங்க: அக்சர் படேலுக்கு பதிலாக இந்திய அணியில் ரமன்தீப் சிங் அறிமுகமாக வாய்ப்பு – என்ன காரணம் தெரியுமா?
சமீபத்திய வருடங்களில் பாகிஸ்தான் அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் அமெரிக்கா, வங்கதேசம் போன்ற கத்துக்குட்டிகளிடம் கூட தோற்றது. ஆனால் சமீபத்தில் இங்கிலாந்தை தங்களுடைய சொந்த மண்ணில் 3 வருடங்கள் கழித்து டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் வீழ்த்தியது. தற்போது ஆஸ்திரேலியாவில் வெற்றி வாகை சூடியுள்ள அந்த அணி மீண்டும் பழைய ஃபார்முக்கு திரும்பியுள்ளது.