ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அதனுடைய சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. அதனுடைய முதல் போட்டியில் ஆஸ்திரேலியா வென்ற நிலையில் இரண்டாவது போட்டியில் பாகிஸ்தான் 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அப்போட்டி நவம்பர் 8ஆம் தேதி அடிலெய்ட் நகரில் நடைபெற்றது.
அதில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா மிகவும் சுமாராக விளையாடி 35 ஓவரில் 163 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 35 ரன்கள் எடுத்த நிலையில் பாகிஸ்தானுக்கு அதிகபட்சமாக ஹரிஷ் ரவூப் 5, ஷாஹீன் அப்ரிடி 3 விக்கெட்டுகளை எடுத்தனர். பின்னர் விளையாடிய பாகிஸ்தான் 26.3 ஓவரிலேயே 169-1 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
பாகிஸ்தான் வெற்றி:
அதிகபட்சமாக அப்துல்லா ஷபிக் 64*, சாய்ம் ஆயுப் 82 ரன்கள் குவித்து வெற்றி பெற வைத்தனர். அதனால் 1 – 1* (3) என்ற கணக்கில் தொடரை சமன் செய்து ஆஸ்திரேலிய அணிக்கு பாகிஸ்தான் பதிலடி கொடுத்துள்ளது. அத்துடன் 7 வருடங்கள் கழித்து முதல் முறையாக ஆஸ்திரேலிய மண்ணில் ஒரு சர்வதேச போட்டியில் பாகிஸ்தான் வெற்றியை பதிவு செய்து சாதனை படைத்ததுள்ளது.
கடைசியாக 2017ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் வெற்றியை பதிவு செய்த பாகிஸ்தான் அதன் பின் விளையாடிய 11 போட்டிகளில் தோற்றது. அந்த தொடர் தோல்விகளை தற்போது உடைத்துள்ள பாகிஸ்தான் வெற்றியை பதிவு செய்து அசத்தியுள்ளது. முன்னதாக இந்தப் போட்டியில் 153-9 ரன்கள் என்ற நிலையில் பேட்டிங் செய்து கொண்டிருந்த ஆஸ்திரேலியாவுக்கு ஆடம் ஜாம்பா களத்தில் இருந்தார்.
ஏமாந்த ரிஸ்வான்:
அப்போது நாசீம் ஷா வீசிய 34வது ஓவரின் 3வது பந்தை எதிர்கொண்ட அவர் அடிக்காமல் விட்டார். அது பாகிஸ்தான் கேப்டன் மற்றும் கீப்பர் முகமது ரிஸ்வான் கையில் தஞ்சமடைந்தது. அதைப் பிடித்த முகமது ரிஸ்வான் நடுவரிடம் அவுட் கேட்டும் கொடுக்கவில்லை. அப்போது இது அவுட் தானா? ரிவ்யூ எடுக்கட்டுமா? என்று ஆடம் ஜாம்பாவிடமே அவர் கேட்டார். அவர்கள் பேசிய உரையாடல் பின்வருமாறு.
“ரிஸ்வான்: நீங்கள் ஏதாவது கேட்டீர்களா?
ஜாம்பா: தெரியவில்லை. ஆனால் நீங்கள் அனைத்திற்கும் அவுட் கேட்கிறீர்கள்
ரிஸ்வான்: நாங்கள் ரிவியூ எடுக்கலாமா?
ஜாம்பா: ஆம் கண்டிப்பாக நீங்கள் எடுக்க வேண்டும்” என்று பேசிக்கொண்டது ஸ்டம்ப் மைக்கில் தெளிவாக கேட்டது.
இதையும் படிங்க: பாவங்க கேஎல் ராகுல்.. ஆஸியிடம் மீண்டும் 73/5 என இந்தியா ஏ திணறல்.. கேரியரை முடித்த மேஜிக் பந்து?
அவருடைய பேச்சைக் கேட்டு ரிஸ்வான் ரிவியூ எடுத்ததில் பேட்டுக்கும் பந்துக்கும் பெரிய இடைவெளி இருந்தது நன்றாக தெரிந்ததால் 3வது நடுவரும் அவுட் கொடுக்கவில்லை. அதனால் ரிஸ்வான் ஏமாற்றமடைந்த நிலையில் பாகிஸ்தான் ரிவியூவை இழந்தது. அதைப் பார்த்த ரசிகர்கள் எதிரணி வீரர் உண்மையை சொல்வார் என்ற முட்டாள்தனமான நம்பிக்கையுடன் இப்படியா ஏமாறுவீர்கள் என்று ரிஸ்வானை கலாய்த்து வருகிறார்கள்.