அதுல ரொம்ப குழம்பிருக்கும் இந்தியாவை ஆசிய கோப்பையில் பாகிஸ்தான் ஈஸியா தோற்கடிக்கும் – டேனிஷ் கனேரியா ஓப்பன்டாக்

- Advertisement -

ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் 2023 ஐசிசி உலகக் கோப்பை வரும் அக்டோபர் 5 முதல் இந்தியாவில் கோலாகலமாக நடைபெறுகிறது. அதில் 2011 போல கோப்பையை வென்று கடந்த 10 வருடமாக ஐசிசி தொடர்களில் சந்தித்து வரும் தொடர் தோல்விகளை இந்தியா நிறுத்துமா என்று எதிர்பார்ப்பு காணப்படுகிறது. அதற்கு நிகராக அக்டோபர் 14ஆம் தேதி அகமதாபாத் மைதானத்தில் நடைபெறும் பரம எதிரி பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் வென்று காலம் காலமாக வைத்து வரும் கௌரவத்தை இந்தியா காப்பாற்றுமா என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களிடம் உச்சகட்டமாக இருக்கிறது.

மறுபுறம் கடந்த 30 வருடங்களாக இதுவரை சந்தித்த 7 போட்டிகளிலும் தோற்ற பாகிஸ்தான் உலகக் கோப்பையை வெல்லாவிட்டாலும் அதற்கெல்லாம் ஒட்டுமொத்தமாக இம்முறை இந்தியாவை அவர்களுடைய சொந்த மண்ணில் தோற்கடித்து பழி தீர்க்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அந்நாட்டு ரசிகர்களிடம் நிலவுகிறது. இந்த நிலைமையில் உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் இம்மாத இறுதியில் 2023 ஆசியக் கோப்பை 50 ஓவர் போட்டிகளாக நடைபெற உள்ளது. ஆசிய கண்டத்தின் சாம்பியனை தீர்மானிக்கும் அந்த தொடரில் பல விவாதங்களுக்கு மத்தியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் லீக் சுற்றிலும் சூப்பர் 4 சுற்றிலும் தலா 1 முறை பலப்பரீட்சை நடத்த உள்ளன.

- Advertisement -

பாகிஸ்தான் வெல்லும்:
உலகக் கோப்பைக்கு முன்னோட்டமாக நடைபெறும் இந்த தொடரிலேயே வெற்றி கண்டு கோப்பையை வெல்வதற்கு ஆசிய கண்டத்தை சேர்ந்த அணிகள் தயாராகி வரும் நிலையில் கேப்டன் பாபர் அசாம் தலைமையிலான முழுமையான அணியை பாகிஸ்தான் அறிவித்துள்ளது. ஆனால் கேஎல் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர் போன்ற முக்கிய வீரர்கள் காயமடைந்த காரணத்தால் இந்தியா தங்களுடைய அணியை அறிவிப்பதிலேயே குழப்பமடைந்து தாமதித்து வருகிறது.

இந்நிலையில் தற்சமயத்தில் செட்டிலாகாத சூழ்நிலையையும் அணியையும் கொண்டிருப்பதால் இந்தியாவை இந்த ஆசிய கோப்பையில் பாகிஸ்தான் தோற்கடிக்கும் என்று முன்னாள் வீரர் டேனிஷ் கனேரியா தெரிவித்துள்ளார். குறிப்பாக ராகுல், ஸ்ரேயாஸ் காயத்திலிருந்து குணமடைந்து வந்தாலும் நல்ல ஃபார்மில் இருக்கிறார்களா என்பது தெரியாதது இந்தியாவுக்கு பின்னடைவாக இருக்கும் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“கண்டிப்பாக இத்தொடரில் பாகிஸ்தானுக்கு அதிக வாய்ப்பு இருக்கிறது. ஏனெனில் தற்சமயத்தில் இந்தியா செட்டிலான அணியாக காட்சியளிக்கவில்லை. குறிப்பாக அவர்களுக்கு எந்த வேகப்பந்து வீச்சாளர்கள் விளையாடப் போகிறார்கள் என்பது தெரியவில்லை. அதே போல சுழல் பந்து வீச்சு துறையில் சஹால் தடுமாறுகிறார். எனவே குல்தீப், ஜடேஜா, அக்சர் படேல் ஆகியோர் தான் என்னுடைய 3 ஸ்பின்னர்கள். மேலும் ரவி பிஷ்னோய் ஸ்டேண்ட் பை வீரராக வாய்ப்பு பெற வேண்டும்”

“கேஎல் ராகுல் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் தற்போது என்சிஏவில் பயிற்சிகளை எடுத்து வருவதால் இந்த ஆசிய மற்றும் உலக கோப்பைக்கான அணியில் தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்புள்ளது. ஆனால் காயமடைந்த வீரர்களை நீங்கள் வெறும் பயிற்சியின் அடிப்படையில் மட்டும் தேர்வு செய்து விட முடியாது. மாறாக சில போட்டிகளில் விளையாடி உங்களுடைய ஃபார்மை காண்பித்தால் மட்டுமே அவர்களை இந்த முக்கிய தொடர்களில் தேர்வு செய்வது சிறந்த முடிவாக இருக்கும்” என்று கூறினார்.

முன்னதாக புதிய வீரர்களை சோதிப்பது அடிக்கடி கேப்டன்களை மாற்றுவது போன்ற அம்சங்களால் தங்களை அழித்துக் கொண்டிருக்கும் இந்தியாவை இம்முறை நிச்சயம் பாகிஸ்தான் தோற்கடிக்கும் என்று முன்னாள் வீரர் சர்ப்ராஸ் நவாஸ் இதே போல தெரிவித்திருந்தார். இந்த நிலைமையில் ஜஸ்பிரித் பும்ரா முழுமையாக குணமடைந்து அயர்லாந்து தொடரில் விளையாட உள்ளது இந்தியாவுக்கு பலமாக அமைய உள்ளது. எனவே எப்போதுமே முக்கிய தொடர்களில் பாகிஸ்தானுக்கு எதிராக சிறப்பாக செயல்பட்டு வரும் இந்தியா இம்முறையும் ஆசிய கோப்பை மட்டுமல்லாமல் உலக கோப்பையிலும் பாகிஸ்தானை தோற்கடித்து வெற்றி வாகை சூடும் என்று இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் உறுதியாக நம்பலாம்.

Advertisement