7 வருடம் கழிச்சு வந்த எங்களுக்கு இப்படி ஒரு வரவேற்பா.. இந்திய ரசிகர்களுக்கு முதல் நாளே நன்றி சொன்ன பாபர் அசாம்

Babar Azam 2
- Advertisement -

ஐசிசி 2023 உலகக்கோப்பை அக்டோபர் 5 முதல் இந்தியாவின் அகமதாபாத் நகரில் துவங்கி பல்வேறு நகரங்களில் கோலாலமாக நடைபெற உள்ளது. இத்தொடரில் 2011 போல கோப்பையை வெல்லுமா என்று எதிர்பார்க்கப்படும் இந்திய அணி அக்டோபர் 14ஆம் தேதி பரம எதிரி பாகிஸ்தானுக்கு எதிராக அகமதாபாத் மைதானத்தில் நடைபெறும் போட்டியிலும் வெற்றி வாகை சூடுமா என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் காணப்படுகிறது.

முன்னதாக ஒரு காலத்தில் அடிக்கடி இருதரப்பு தொடர்களில் மோதி வந்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் எல்லை பிரச்சினை காரணமாக கடந்த 2012க்குப்பின் ஆசிய மற்றும் உலகக்கோப்பைகளில் மட்டுமே விளையாடி வருகின்றன. அந்த சூழ்நிலையில் இந்த வருடம் நடைபெற்ற 2023 ஆசிய கோப்பையில் பாதுகாப்பு காரணத்திற்காக பாகிஸ்தானுக்கு செல்ல முடியாது என்று இந்தியா அடம் பிடித்தது. அதனால் எங்கள் நாட்டுக்கு வராமல் போனால் உங்கள் நாட்டில் நடைபெறும் 2023 உலகக்கோப்பையை நாங்களும் புறக்கணிப்போம் என்று பாகிஸ்தான் வாரியம் அறிவித்தது.

- Advertisement -

உற்சாக வரவேற்பு:
இருப்பினும் பணத்திலும் அதிகாரத்திலும் ஓங்கிய கையை கொண்டுள்ள இந்தியாவுக்கு எதிராக எதுவும் செய்ய முடியாத பாகிஸ்தான் பெரும்பாலான ஆசிய கோப்பை போட்டிகளை இலங்கையில் விளையாடியதுடன் உலகக்கோப்பையில் பங்கேற்பதற்கும் சம்மதம் தெரிவித்தது. அதைத்தொடர்ந்து நேற்று கராச்சியிலிருந்து துபாய்க்கு புறப்பட்ட பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியினர் அங்கிருந்து இரவு இந்தியாவின் ஹைதராபாத் நகருக்கு விமானம் வாயிலாக வந்தனர்.

கடைசியாக கடந்த 2016ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையில் விளையாடுவதற்காக வந்திருந்த அவர்கள் 7 வருடங்கள் கழித்து தற்போது தான் முதல் முறையாக இந்தியாவில் காலடி வைத்துள்ளனர். அந்த சூழ்நிலையில் பல்வேறு அம்சங்களிலும் தங்களுக்கு எதிராக இருக்கும் இந்திய மண்ணில் பாகிஸ்தான் வீரர்கள் எந்த மாதிரியாக நடத்தப்படுவார்கள் என்று அந்நாட்டை சேர்ந்தவர்கள் சமூக வலைதளங்களில் கவலை தெரிவித்து வந்தனர்.

- Advertisement -

ஆனால் விமான நிலையத்தில் இறங்கியதுமே அங்கு இந்திய அணியினருக்கு நிகராக பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியினருக்கு ஹைதராபாத் ரசிகர்கள் ஆரவாரம் செய்து கூச்சலிட்டு அன்பான வரவேற்பு கொடுத்தனர். குறிப்பாக பாபர், அப்ரிடி ஆகியோரது பெயர்களை வேகமாக சொல்லி ரசிகர்கள் வரவேற்பு கொடுத்தனர். அவர்களுக்கு பாகிஸ்தான் ரசிகர்களும் கை அசைத்து நன்றி தெரிவித்தார்கள்.

அந்த வகையில் விமானத்திலிருந்து இறங்கியது முதல் பேருந்தில் ஏறி ஹோட்டல் செல்லும் வரை பாகிஸ்தான் வீரர்களுக்கு ஹைதராபாத் சேர்ந்த இந்திய ரசிகர்கள் சாலையின் இரு புறமும் நின்று வரவேற்பு கொடுத்தனர். அப்படி சிறப்பான வரவேற்பு கொடுத்த இந்திய ரசிகர்களால் மனமுவந்த பாபர் அசாம் “ஹைதராபாத்தில் உள்ள ரசிகர்களால் அன்பு மற்றும் ஆதரவு நிரம்பி வழிகிறது” என்று இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு நன்றி தெரிவித்துள்ளார். அதே போலவே நிறைய பாகிஸ்தான் வீரர்களும் தங்களுடைய சமூக வலைதளத்தில் இந்திய ரசிகர்களின் ஆதரவுக்கு நன்றியை வெளிப்படுத்துகின்றனர்.

Advertisement