
ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா எளிதாக வென்றது. இருப்பினும் அப்போட்டியின் முடிவில் பாகிஸ்தான் அணிக்கு இந்திய அணியினர் கை கொடுக்காமல் வெளியேறியது சர்ச்சையை உண்டாக்கியது. சில மாதங்களுக்கு முன்பாக பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் நடத்திய தாக்குதலில் 26 இந்தியர்கள் இயற்கை எய்தினார்கள்.
அதற்கு பதிலடி கொடுக்கும் வகையிலேயே பாகிஸ்தான் அணிக்கு சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி கை கொடுக்காமல் வெளியேறினார்கள். இருப்பினும் ஜென்டில்மேன் விளையாட்டான கிரிக்கெட்டில் பாகிஸ்தான் பகையை மறந்து கை கொடுக்க நின்றதாக அந்நாட்டை சேர்ந்தவர்கள். ஆனால் அவர்களுக்கு கை கொடுக்காத இந்தியா ஜென்டில்மேனாக நடந்து கொள்ளவில்லை என்று பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் விமர்சித்து வருகிறார்கள்.
உண்மையில் போட்டி முடிந்தவுடன் கை கொடுப்பது கட்டாயம் என்று ஐசிசி மற்றும் எம்சிசி விதிமுறைகளில் எங்கேயும் குறிப்பிடப்படவில்லை. அதனாலேயே கை கொடுக்காத இந்தியா மீது பாகிஸ்தான் கொடுத்த புகாரை ஐசிசியும் நிராகரித்துள்ளது. அத்துடன் வரலாற்றில் பல தருணங்களில் பல்வேறு காரணங்களுக்காக இப்படி அணிகள் கை கொடுக்காமல் வெளியேறியுள்ளன.
கடைசியாக 2023 உலகக் கோப்பையில் விளையாட்டுணர்வு மற்றும் நேர்மைத் தன்மையைப் பற்றி கவலைப்படாத வங்கதேசம் இலங்கை வீரர் ஏஞ்சலோ மேத்யூஸை டைம்ட் முறையில் அவுட்டாக்கியது. அதனால் போட்டியின் முடிவில் இலங்கை வீரர்கள் யாரும் வங்கதேச அணிக்கு கை கொடுக்கவில்லை. அதை விட இன்று தங்களை ஜென்டில்மேன் என்றழைக்கும் இதே பாகிஸ்தான் அணியினர் 2006ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு கை கொடுக்கவில்லை.
ஆம் 2006ஆம் ஆண்டு ஓவல் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியின் 4வது நாளில் பாகிஸ்தான் அணி பந்தை சேதப்படுத்தியதாக நடுவர் டேரல் ஹேரிடம் இங்கிலாந்து அணியினர் புகார் செய்தனர். அதனால் பந்தை சோதித்த நடுவர் அது சேதமடைந்திருப்பதாக கருதினார். எனவே பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை கொடுக்காத அவர் நேரடியாக 5 ரன்களை பெனால்ட்டியாக வழங்கினார்.
அதனால் அதிருப்தியடைந்த இன்சமாம்-உல்-ஹக் தலைமையிலான பாகிஸ்தான் அணி தேனீர் இடைவெளிக்கு பின் களமிறங்க மறுத்தனர். குறிப்பாக பந்தை சேதப்படுத்தாத தங்கள் மீது நடுவர் ஒருதலைபட்சமாக 5 ரன்கள் தண்டனை வழங்கியுள்ளதாக கருதிய கேப்டன் இன்சமாம் மைதானத்திற்கு செல்ல வேண்டாம் என்று பாகிஸ்தான் வீரர்களுக்கு கட்டளையிட்டார். மறுபுறம் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் பேட்டிங் செய்யத் தயாராக நின்றனர்.
இதையும் படிங்க: அப்படி அடிக்க இந்தியா ஒன்னும் ஓமன் இல்ல.. பாகிஸ்தானை வீழ்த்திய வேற லீக் இந்தியா பற்றி.. அஸ்வின் பேட்டி
அப்போதும் பாகிஸ்தான் அணி களத்திற்கு வரவில்லை. அதனால் விதிமுறையை மீறிய பாகிஸ்தான் வெற்றியை இழந்ததாக அறிவித்த நடுவர் ஹேர் இங்கிலாந்து வெற்றி பெற்றதாக அறிவித்தார். அதன் காரணமாக கோபமடைந்த பாகிஸ்தான் அணி போட்டியின் முடிவில் நடுவர்கள் மற்றும் இங்கிலாந்துக்கு கை குலுக்காமல் வெளியேறினார்கள். அந்த வரலாற்று நிகழ்வை தற்போது இந்திய ரசிகர்கள் சமூக வலைதளங்களில் சுட்டிக்காட்டி வருகின்றனர்.