அப்படியே போயிடுவோம் நெனச்சீங்களா, இங்கிலாந்துக்கு மாஸ் பதிலடி கொடுக்கும் பாகிஸ்தான் – என்ன நடக்கபோகுதோ

Pak vs ENG Ben Stokes James Anderson Imam Ul Haq Ashad Shafiq
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 2022 டி20 உலக கோப்பையை வென்ற இங்கிலாந்து அடுத்ததாக பாகிஸ்தானுக்கு பயணித்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக பாகிஸ்தான் மண்ணில் 17 வருடங்கள் கழித்து ஒரு டெஸ்ட் தொடரில் களமிறங்கியுள்ள இங்கிலாந்து டிசம்பர் 1ஆம் தேதியன்று துவங்கிய முதல் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. ஆனால் வழக்கத்திற்கு மாறாக இது டெஸ்ட் போட்டி என்பதை மறக்கும் அளவுக்கு முதல் ஓவரிலிருந்தே அதிரடியாக பேட்டிங் செய்த அந்த அணி உலகத்தரம் வாய்ந்த வேகப்பந்து வீச்சு கூட்டணியை கொண்ட பாகிஸ்தான் பவுலர்களை லோக்கல் பவுலர்களை போல் சரமாரியாக வெளுத்து வாங்கினார்கள்.

குறிப்பாக 233 ரன்கள் ஓபனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து அற்புதமான தொடக்கம் கொடுத்த தொடக்க வீரர்கள் பென் டன்கட் 107 (110) ரன்களும் ஜாக் கிராவ்லி 122 (111) ரன்களும் எடுத்து அவுட்டானார்கள். அதை தொடர்ந்து வந்த ஜோ ரூட் 23 ரன்னில் அவுட்டானாலும் ஓலி போப் தனது பங்கிற்கு சதமடித்து 108 ரன்கள் எடுக்க அண்டர்-19 இளம் வீரர் ஹரி ப்ரூக் தமக்கே உரித்தான ஸ்டைலில் இதர வீரர்களை விட அதிரடியாக விளையாடி சதமடித்தார். அதனால் 75 ஓவரிலேயே 506/4 ரன்களை கடந்த இங்கிலாந்து எளிதாக 600 ரன்களை நோக்கி பயணித்த வேளையில் போதிய வெளிச்சமின்மை காரணமாக முதல் நாள் ஆட்டம் முன்கூட்டியே முடித்துக் கொள்ளப்பட்டது.

- Advertisement -

திருப்பி அடிப்போம்:
அதனால் பாகிஸ்தான் தப்பினாலும் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல் நாளிலேயே 500 ரன்கள் கடந்து அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த அணியாக இங்கிலாந்து இரட்டை உலக சாதனைகளை படைத்தது. மேலும் இப்போட்டி நடைபெற்ற ராவல்பிண்டி மைதான பிட்ச் வேகம், பவுன்ஸ், சுழல் என எதற்குமே கை கொடுக்காமல் தார் ரோடு போல இருந்ததால் 2வது நாளில் இங்கிலாந்து இருக்கும் வேகத்துக்கு 1000 ரன்களை அடித்து நொறுக்கும் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். அந்த நிலையில் கடுமையான கிண்டல்களுக்கு மத்தியில் இன்று துவங்கிய 2வது நாள் ஆட்டத்தில் சுதாரித்த பாகிஸ்தான் பவுலர்கள் பென் ஸ்டோக்ஸ் 41, அதிரடி வீரர் லியாம் லிவிங்ஸ்டன் 9 என முக்கிய வீரர்களை ஆரம்பத்திலேயே பெரிய ரன்களை எடுக்க விடாமல் காலி செய்தனர்.

இருப்பினும் 101* (81) ரன்களுடன் தொடர்ந்து விளையாடிய ஹரி ப்ரூக் மட்டும் சிறப்பாக செயல்பட்டு 19 பவுண்டரி 5 சிக்ஸருடன் 153 (116) ரன்களில் அவுட்டாக்கிய பாகிஸ்தான் ஜாக்ஸ் 30, ஓலி ராபின்சன் 37 என டெயில் எண்டர்களையும் பெரிய ரன்களை எடுக்க விடாமல் அவுட்டாக்கியது. அதனால் ஒரு கட்டத்தில் குறைந்தது 700 அதிகபட்சமாக 100 ரன்களை தொடும் என்று எதிர்பார்க்கப்பட்ட இங்கிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் 657 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பாகிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக அறிமுக வீரர் ஜாஹிட் முஹம்மது 4 விக்கெட்களையும் நசீம் ஷா 3 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.

- Advertisement -

அதை தொடர்ந்து களமிறங்கிய பாகிஸ்தான் எங்களது ஊரில் எங்களது பவுலிங்கை அடித்தால் அப்படியே போய் விடாமல் நாங்களும் திருப்பி அடிப்போம் என்ற வகையில் ஊமை பதிலடி கொடுத்தது என்றே சொல்லலாம். ஏனெனில் இங்கிலாந்து வீரர்களாவது அதிரடியாக விளையாடி பாகிஸ்தான் பவுலர்களுக்கு தொல்லை கொடுத்தார்கள். ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கே ஆமை வேக ஆட்டத்தை கையிலெடுத்த பாகிஸ்தான் தொடக்க வீரர்கள் அசாத் சபிக் மற்றும் இமாம்-உல்-ஹக் ஆகியோர் ஆரம்பம் முதலே நங்கூரத்தை போட்டு விக்கெட்டை விடமாட்டோம் என்று அடம் பிடிக்கும் வகையில் இங்கிலாந்துக்கு பதிலடி கொடுத்தார்கள்.

அதனால் சீரான வேகத்தில் சென்ற பாகிஸ்தான் உணவு இடைவேளை முடிந்து தேநீர் இடைவேளை முடிந்து 2வது நாள் ஆட்ட நேரம் முடியும் வரை விக்கெட்டை விடாமல் 180/0 ரன்கள் குவித்து இங்கிலாந்துக்கு பதிலடி கொடுக்க துவங்கியுள்ளது. அதில் இமாம் 90* (148) ரன்களுடனும் ஷபிக் 89* (158) ரன்களுடனும் களத்தில் உள்ளார்கள்.

இருப்பினும் கூட 476 ரன்கள் பின்தங்கியுள்ள அந்த அணி இங்கிலாந்துக்கு முழு பதிலடி கொடுக்க இன்னும் பெரிய வேலை செய்ய வேண்டியுள்ளது. ஆனால் தற்சமயத்தில் மோசமாக செயல்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட பாகிஸ்தான் அதே தார் ரோட் பிட்ச்சை பயன்படுத்தி பதிலடி கொடுக்க துவங்கியுள்ளது அந்நாட்டு ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்களை ஓரளவு மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

Advertisement