
இலங்கைக்கு எதிராக நடைபெற்று முடிந்த ஒருநாள் கிரிக்கெட் தொடரில் 27 வருடங்கள் கழித்து இந்தியா அவமான தோல்வியை பதிவு செய்தது. இத்தனைக்கும் இலங்கையை விட தரமான வீரர்களை கொண்டிருக்கும் இந்தியா ஐசிசி தரவரிசையில் நம்பர் ஒன் அணியாக இருக்கிறது. ஆனாலும் சுழலுக்கு சாதகமான கொழும்பு மைதானத்தில் இலங்கை ஸ்பின்னர்களை இந்திய பேட்ஸ்மேன்கள் நன்றாக எதிர்கொள்ளாதது வரலாற்றுத் தோல்விக்கு வித்திட்டது.
அதனால் ஸ்பின்னர்களை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதை இந்திய பேட்ஸ்மேன்கள் மறந்து விட்டார்களா என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளது. அத்துடன் ஜஸ்ப்ரித் பும்ரா இல்லையென்றால் இந்தியாவின் பவுலிங் ஜீரோ என்று முன்னாள் பாகிஸ்தான் வீரர் ஜுனாய்ட் கான் சமீபத்தில் விமர்சித்தார். இந்நிலையில் பாகிஸ்தான் அணிக்கு இந்தியர்கள் யாரும் ஆலோசனை தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை என முன்னாள் வீரர் தன்வீர் அஹ்மத் தெரிவித்துள்ளார்.
ஈஸியா தோற்கடிப்போம்:
அத்துடன் விராட் கோலி, ரோஹித் சர்மா மற்றும் ஜஸ்ப்ரித் பும்ரா ஆகியோர் இல்லையெனில் இந்திய அணியை மிகவும் எளிதாக பாகிஸ்தான் தோற்கடித்து விடும் என்றும் அவர் சவால் விடுத்துள்ளார். இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “இங்கிருந்து வருங்காலத்தில் இந்திய அணியின் பேட்டிங் வரிசை என்னவாகும் என்பதை உங்களால் பார்க்க முடியும்”
“அவர்களின் பவுலிங் வரிசை வேண்டுமானால் வேலை செய்யலாம். ஆனால் பேட்டிங் வரிசை வருங்காலத்தில் அசத்துவது மிகவும் கடினம். ஏனெனில் தற்சமயத்தில் அவர்களின் இளம் பேட்ஸ்மேன்கள் ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோருக்கு பின் இந்திய அணியின் பேட்டிங் வரிசையை வருங்காலத்தை நோக்கி எடுத்துச் செல்லும் அளவுக்கு இல்லை.
“அவர்கள் சொந்த மண்ணில் ஃப்ளாட்டான பிட்ச்களில் அடிப்பார்கள். ஆனால் பந்து சுழலக்கூடிய மற்றும் ஸ்விங் ஆகக்கூடிய பிட்ச்களில் பேட்டிங் செய்யக்கூடிய திறமை இந்திய இளம் பேட்ஸ்மேன்களிடம் இல்லை. இலங்கைக்கு எதிரான முதல் போட்டியில் அவர்கள் ரன்கள் அடித்திருக்கலாம். 2, 3வது போட்டியிலும் அடித்திருக்கக்கூடிய ரன்களே இலக்காக இருந்தன. எனவே முதலில் உங்களுடைய சொந்த செயல்பாடுகளை பற்றி பாருங்கள்”
இதையும் படிங்க: அடுத்த ஒரு மாசத்துக்கு இந்திய அணி எந்த போட்டியிலும் விளையாடப்போவதில்லை – ஏன் தெரியுமா?
“பின்னர் பாகிஸ்தான் அணிக்கு ஆலோசனைகளை கொடுங்கள். ஒருவேளை விராட் கோலி, ரோஹித் சர்மா மற்றும் ஜஸ்ப்ரித் பும்ரா ஆகியோர் எங்களுக்கு எதிராக விளையாடாமல் இருந்தால் இந்திய அணியை பாகிஸ்தான் கையை உயர்த்தி தோற்கடிக்கும்” என்று கூறினார். முன்னதாக 2022, 2023, 2024 ஆண்டுகளில் நடைபெற்ற ஐசிசி தொடர்களில் ஜிம்பாப்வே, ஆப்கானிஸ்தான் மற்றும் அமெரிக்கா போன்ற கத்துக்குட்டி அணிகளை கூட வீழ்த்த முடியாமல் பாகிஸ்தான் மண்ணை கவ்வியது குறிப்பிடத்தக்கது.