பாகிஸ்தானில் பிறந்து சம்பவம் செய்த ஜிம்பாப்வே நாயகன் – விராட் கோலியை முந்தி புதிய உலக சாதனை

Sikandar Raza
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் எதிர்பாராத திருப்பங்களுடன் நடைபெற்று வரும் 2022 ஐசிசி டி20 உலகக் கோப்பையில் அக்டோபர் 27ஆம் தேதியன்று நடைபெற்ற 24வது லீக் போட்டியில் யாருமே எதிர்பாராத வகையில் வலுவான பாகிஸ்தானை கத்துக்குட்டியாக கருதப்படும் ஜிம்பாப்வே வெறும் 1 ரன் வித்தியாசத்தில் தோற்கடித்து வரலாறு படைத்தது. தன்னுடைய முதல் போட்டியில் பரம எதிரியான இந்தியாவிடம் கையிலிருந்த வெற்றியை கோட்டை விட்டு வரலாற்றுத் தோல்வியை சந்தித்த பாகிஸ்தான் இப்போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கிய நிலையில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்பேவை 20 ஓவரில் 130/8 ரன்களுக்கு கட்டுப்படுத்தியது. அந்தளவுக்கு தடுமாற்ற பேட்டிங்கை வெளிப்படுத்திய ஜிம்பாப்பேவுக்கு அதிகபட்சமாக சீன் வில்லியம்ஸ் 31 (28) ரன்கள் எடுக்க பாகிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக முகமது வாசிம் 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.

அதை தொடர்ந்து 131 ரன்களை துரத்திய பாகிஸ்தானுக்கு அதிரடி தொடக்கத்தை கொடுக்க வேண்டிய கேப்டன் பாபர் அசாம் 4 (9) ரன்களில் ஆட்டமிழக்க அடுத்த ஓவரிலேயே உலகின் நம்பர் ஒன் டி20 பேட்ஸ்மேன் முகமது ரிஸ்வான் 14 (16) ரன்களில் நடைய கட்டினார். அதனால் ஆரம்பம் முதலே தடுமாறிய அந்த அணிக்கு மிடில் ஆர்டரில் ஷான் மசூட் வெற்றிக்கு போராடினாலும் 14வது ஓவரை வீசிய சிக்கந்தர் ராசா சடாப் கான் 17 (14) ஹைதர் அலி 0 (1) என 2 முக்கிய வீரர்களை அடுத்தடுத்த பந்துகளில் சொற்ப ரன்களில் அவுட் செய்து போட்டியில் பெரிய திருப்பு முனையை ஏற்படுத்தினார்.

- Advertisement -

ஜிம்பாப்வே நாயகன்:
அப்போது மறுபுறம் போராடிய ஷான் மசூட் 44 (38) ரன்களில் அவுட்டானதால் ஏற்பட்ட பரபரப்பில் பாகிஸ்தானுக்கு கடைசி ஓவரில் வெற்றி பெற 11 ரன்கள் தேவைப்பட்டது. ப்ராட் எவன்ஸ் வீசிய அந்த ஓவரின் முதல் பந்தில் முகமது நவாஸ் 3 ரன்கள் எடுக்க 2வது பந்தில் பவுண்டரி அடித்த முகமது வாசிம் 3வது பந்தில் சிங்கிள் எடுத்தார். ஆனால் 4வது பந்தில் ரன்கள் எடுக்க தவறியதால் ஏற்பட்ட அழுத்தத்தில் 5வது பந்தில் முகமது நவாஸ் 22 (18) ரன்களில் அவுட்டானார். அதனால் கடைசி பந்தில் 3 ரன்கள் தேவைப்பட்டபோது களமிறங்கிய ஷாஹீன் அப்ரிடி 1 ரன் மட்டுமே எடுத்ததால் த்ரில் வெற்றி பெற்ற ஜிம்பாப்வே பாகிஸ்தானுக்கு அதிர்ச்சியளித்து வரலாற்றில் மறக்க முடியாத வெற்றியை பதிவு செய்தது.

இந்த வெற்றியால் 2 போட்டிகளில் 3 புள்ளிகளை பெற்ற ஜிம்பாப்வே புள்ளி பட்டியலில் 3வது இடத்திற்கு முன்னேறியது. மறுபுறம் 2 போட்டிகளில் தோல்வியடைந்த பாகிஸ்தான் தங்களது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்து நாக்-அவுட் செல்லும் வாய்ப்பையும் குறைத்துக் கொண்டுள்ளது. இந்த வெற்றிக்கு பேட்டிங்கில் 9 ரன்கள் எடுத்தாலும் பந்து வீச்சில் 3 முக்கிய விக்கெட்டுகளை எடுத்த சிக்கந்தர் ராசா ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். கடந்த சில வருடங்களாகவே அந்த அணியின் வெற்றிகளில் கருப்பு குதிரையாக செயல்படும் அவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சொந்த மண்ணில் நடந்த வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் இதே போல் செயல்பட்டு அடுத்தடுத்த ஆட்டநாயகன் விருதுகளை வென்று அசத்தினார்.

- Advertisement -

அதை விட இந்தியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடந்த ஒருநாள் தொடரின் கடைசி போட்டியில் தோல்வியடைந்தாலும் சதமடித்து தனி ஒருவனாக வெற்றிக்கு போராடியதை இந்திய ரசிகர்கள் மறக்க முடியாது. அந்த வகையில் இந்த உலகக் கோப்பை போட்டியிலும் சரித்திர வெற்றியை பெற்றுக் கொடுத்த அவர் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாமல் கண்கள் கலங்கி விவரிக்க வார்த்தைகள் இல்லை என்று போட்டியின் முடிவில் நெகிழ்ச்சியாக பேசினார். மேலும் இவர் பாகிஸ்தானில் பிறந்து இன்று அந்நாட்டுக்கு எதிராகவே சம்பவம் செய்து மிரட்டியுள்ளார்.

அதை விட ஜிம்பாப்வேயின் கடைசி 4 வெற்றிகளில் 3 ஆட்டநாயகன் விருதுகளை வென்றுள்ள அவர் இந்த வருடம் மட்டும் டி20 கிரிக்கெட்டில் 7 ஆட்டநாயகன் வென்றுள்ளார். அதன் வாயிலாக சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் ஒரு காலண்டர் வருடத்தில் அதிக ஆட்டநாயகன் விருதுகளை வென்ற வீரர் என்ற விராட் கோலியின் சாதனையை தகர்த்த அவர் புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

இதையும் படிங்க : இனிமே ஜென்ஸ் லேடிஸ்ன்னு எல்லாம் கணக்கில்ல – ஜெய் ஷா அறிவித்த உருப்படியான சலுகை (ரசிகர்கள் வரவேற்பு)

அந்த பட்டியல்:
1. சிக்கந்தர் ராசா : 7* (2022)
2. விராட் கோலி : 6 (2016)
3. சூரியகுமார் யாதவ் : 5 (2022)*
4. முகமது ரிஸ்வான் : 5 (2021)
5. ஷேன் வாட்சன் : 5 (2012)

Advertisement