PAK vs NZ : 50 வருடத்தில் இல்லாத உச்சம் – இம்ரான், இன்சமாமை மிஞ்சிய பாபர் – புதிய சரித்திரம் படைத்த பாகிஸ்தான்

PAK vs NZ Pakistan
Advertisement

பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட நியூசிலாந்து முதலில் நடைபெற்ற டி20 கிரிக்கெட் தொடரை மழைக்கு மத்தியில் 2 – 2 (5) என்ற கணக்கில் சமன் செய்து கோப்பையை பகிர்ந்து கொண்டது. பெரும்பாலான முக்கிய வீரர்கள் ஐபிஎல் தொடரில் பங்கேற்பதால் 2வது தர அணியை அனுப்பியதாக நியூசிலாந்தை விமர்சித்த அப்துல் ரசாக் போன்ற முன்னாள் பாகிஸ்தான் வீரர்களுக்கு டாம் லாதம் தலைமையிலான இளம் அணி பதிலடி கொடுத்தது. மறுபுறம் கடந்த வருடம் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற அணிகளுக்கு எதிராக சொந்த மண்ணில் தொடர் தோல்விகளை சந்தித்த பாகிஸ்தான் இளம் நியூசிலாந்து அணியை தோற்கடிக்க தவறியதால் மீண்டும் விமர்சனங்களையும் கிண்டல்களையும் சந்தித்தது.

PAk vs NZ ODI

அந்த நிலையில் வரும் அக்டோபர் மாதம் இந்தியாவில் நடைபெறும் 50 ஓவர் ஐசிசி உலக கோப்பைக்கு தயாராகும் வகையில் மீண்டும் நியூஸிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பாகிஸ்தான் களமிறங்கியது. ஆனால் இம்முறை ஆரம்பம் முதலே சிறப்பாக செயல்பட்ட அந்த அணி முதல் 3 போட்டிகளில் அடுத்தடுத்த ஹாட்ரிக் வெற்றிகளை பதிவு செய்து ஆரம்பத்திலேயே கோப்பையை கைப்பற்றி நீண்ட நாட்கள் கழித்து சொந்த மண்ணில் ஒரு தொடரை வென்று நிம்மதி பெருமூச்சு விட்டது. அந்த நிலையில் இத்தொடரின் சம்பிரதாய 4வது போட்டி மே 5ஆம் தேதி தலைநகர் கராச்சியில் நடைபெற்றது.

- Advertisement -

உச்சத்தை தொட்ட பாகிஸ்தான்:
அதில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய பாகிஸ்தான் 50 ஓவர்களில் அதிரடியாக செயல்பட்டு 334/6 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக சதமடித்து 107 (117) ரன்கள் குவித்த கேப்டன் பாபர் அசாம் ஒருநாள் கிரிக்கெட்டில் ஹாசிம் அம்லா (101), விராட் கோலி மற்றும் விவியின் ரிச்சர்ட்ஸ் (தலா 114) ஆகியோரை முந்தி அதிவேகமாக 5000 ரன்களை (97 இன்னிங்ஸ்) அடித்த பேட்ஸ்மேன் என்ற உலக சாதனை படைத்தார்.

Babar Azam 5000

அவருடன் ஆகா சல்மான் 58, ஷான் மசூட் 44 என இதர வீரர்களும் முக்கிய ரன்களை எடுத்த நிலையில் நியூசிலாந்து சார்பில் அதிகபட்சமாக மாட் ஹென்றி 3 விக்கெட்டுகள் சாய்த்தார். அதை தொடர்ந்து 335 என்ற பெரிய இலக்கை துரத்திய நியூசிலாந்து முந்தைய போட்டிகளை விட மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தி பாகிஸ்தானின் தரமான பந்து வீச்சில் சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்து 43.4 ஓவரில் 232 ரன்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக கேப்டன் டாம் லாதம் 60, மார்க் சேப்மேன் 46 ரன்கள் எடுக்க பாகிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக உசாமா மிர் 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.

- Advertisement -

அதனால் 102 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியை பெற்ற பாகிஸ்தான் 4 – 0* (5) கணக்கில் இந்த தொடரை ஆரம்பத்திலேயே கைப்பற்றி நீண்ட நாட்கள் கழித்து வெற்றி பாதைக்கு திரும்பி தன் மீதான விமர்சனங்கள் மற்றும் கிண்டல்களுக்கு பதிலடி கொடுத்து சொந்த மண்ணில் சொந்த ரசிகர்களுக்கு முன்னிலையில் தலை நிமிர்ந்துள்ளது. அதை விட இந்த 4 தொடர்ச்சியான வெற்றிகளால் ஒருநாள் போட்டிகளுக்கான ஐசிசி தரவரிசையில் ஆஸ்திரேலியாவை முந்தி 113 புள்ளிகளுடன் உலகின் புதிய நம்பர் ஒன் அணியாக முன்னேறி பாகிஸ்தான் சாதனை படைத்துள்ளது.

- Advertisement -

குறிப்பாக 3வது இடத்தில் இருக்கும் இந்தியா 2வது இடத்தில் இருக்கும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகளும் தலா 113 புள்ளிகளை பெற்றுள்ளன. இருப்பினும் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவை விட அந்த புள்ளிகளை குறைந்த போட்டிகளில் பெற்ற காரணத்தால் இந்த புதிய உச்சத்தை பாகிஸ்தான் தொட்டுள்ளது. கடந்த 1973இல் முதல் முறையாக ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாட துவங்கிய பாகிஸ்தானுக்கு கடந்த 50 வருடங்களில் இம்ரான் கான் உலகக் கோப்பையை வென்று கொடுத்த நிலையில் இன்சமாம்-உல்-ஹக் நீண்ட நாட்கள் வெற்றி நடை போடுவதில் முக்கிய பங்காற்றினார்.

இருப்பினும் அவர்களது தலைமையில் ஐசிசி தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தை பெறாத பாகிஸ்தான் பாபர் அசாம் தலைமையில் முதல் முறையாக இந்த புதிய சரித்திரம் படைத்துள்ளது அந்நாட்டு ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

இதையும் படிங்க:CSK vs MI : லெஜெண்டை பாத்த நாங்க அவருக்கு மரியாதை கொடுக்க மாட்டோம் – இளம் சிஎஸ்கே பவுலரை எச்சரித்த இஷான் கிசான்

இதற்கு முன் டெஸ்ட் கிரிக்கெட்டில் மிஸ்பா தலைமையிலும் டி20 கிரிக்கெட்டில் சர்ப்ராஸ் அகமது தலைமையிலும் உலகின் நம்பர் ஒன் அணியாக முன்னேறிய பாகிஸ்தான் தற்போது பாபர் அசாம் தலைமையில் முதல் முறையாக ஒருநாள் கிரிக்கெட்டில் நம்பர் ஒன் இடத்தை பெற்றுள்ளது.

Advertisement