92க்கு ஆல் அவுட்.. அசத்திய நியூஸிலாந்து.. 7 – 1 புத்தாண்டில் ஒருவழியாக நிம்மதி பெருமூச்சு விட்ட பாகிஸ்தான்

Nz vs PAK
- Advertisement -

நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பாகிஸ்தான் அங்கு 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடியது. ஜூன் மாதம் நடைபெறும் 2024 டி20 உலகக் கோப்பைக்கு தயாராக நடைபெற்ற அந்த தொடரில் முதல் 4 போட்டிகளிலும் சுமாராக செயல்பட்ட பாகிஸ்தானை அடுத்தடுத்து தோற்கடித்த நியூசிலாந்து ஆரம்பத்திலேயே கோப்பையை கைப்பற்றி தங்களை சொந்த மண்ணில் வலுவான அணி என்பதை காண்பித்தது.

மறுபுறம் 2023 ஆசிய மற்றும் உலகக் கோப்பை தோல்வியால் பதவி விலகிய பாபர் அசாமுக்கு பின் புதிய டி20 கேப்டனாக பொறுப்பேற்ற சாகின் அப்ரிடி தலைமையிலும் எந்த மாற்றத்தை சந்திக்காத பாகிஸ்தான் ஆரம்பத்திலேயே கோப்பையை வெல்லும் வாய்ப்பை நழுவ விட்டது. அந்த நிலையில் இத்தொடரின் சம்பிரதாய கடைசி போட்டி ஜனவரி 21ஆம் தேதி கிறிஸ்ட்சர்ச் நகரில் நடைபெற்றது.

- Advertisement -

ஆறுதல் வெற்றி:
அதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய அந்த அணி மீண்டும் தடுமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 20 ஓவரில் 134/8 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஹசிபுல்லா கான் 0, பாபர் அசாம் 13, முகமது நவாஸ் 1, இப்திகார் அகமது 5 என முக்கிய பேட்ஸ்மேன்கள் குறைந்த ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்த நிலையில் அதிகபட்சமாக முகமது ரிஸ்வான் 38, பஃகார் ஜமான் 33, பார்ஹான் 19, அப்பாஸ் அப்ரிடி 14* ரன்கள் எடுத்தனர்.

நியூசிலாந்து சார்பில் அதிகபட்சமாக மாட் ஹென்றி, டிம் சவுதி, லாக்கி பெர்குசன், இஸ் சோதி தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர். அதைத் தொடர்ந்து 135 என்ற சுலபமான இலக்கை துரத்திய நியூசிலாந்துக்கு ஃபின் ஆலன் 22, ரச்சின் ரவீந்திரா 1, டிம் சைபர்ட் 19, வில் எங் 12, மார்க் சேப்மேன் 1 என முக்கிய பேட்ஸ்மேன்கள் அனைவரையும் ஆரம்பம் முதலே பாகிஸ்தான் பவுலர்கள் சரியாகப் பந்து வீசி சீரான இடைவெளிகளில் குறைந்த ரன்களில் காலி செய்தனர்.

- Advertisement -

அதனால் அதிகபட்சமாக கேப்டன் மிட்சேல் சான்ட்னர் 26 (22) ரன்கள் எடுத்த போதிலும் 17.2 ஓவரிலேயே நியூசிலாந்தை வெறும் 92 ரன்களுக்கு ஆல் அவுட்டாக்கிய பாகிஸ்தான் 42 ரன்கள் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு இப்திகார் அகமது 3, கேப்டன் சாகின் அப்ரிடி 2, முகமது நவாஸ் 2 விக்கெட்களை எடுத்தனர்.

இதையும் படிங்க: காலையில் 3வது திருமணம்.. மாலையில் பேட்டிங்.. டி20 கிரிக்கெட்டில் மாபெரும் சாதனை படைத்த சோயப் மாலிக்

இருப்பினும் 4 – 1 (5) என்ற கணக்கில் இத்தொடரின் கோப்பையை நியூசிலாந்து வென்று அசத்தியது. ஆனாலும் ஒய்ட்வாஷ் அவமான தோல்வியை தவிர்த்த பாகிஸ்தான் சர்வதேச கிரிக்கெட்டில் 8 தொடர் தோல்விகளுக்கு பின் முதல் முறையாக வெற்றியை பதிவு செய்து நிம்மதி பெருமூச்சு விட்டது. குறிப்பாக 2024 புத்தாண்டில் 7 தொடர் தோல்விகளுக்குப் பின் முதல் முறையாக ஆறுதல் வெற்றியை பாகிஸ்தான் பதிவு செய்துள்ளது.

Advertisement