
தென்னாபிரிக்காவுக்கு எதிராக தங்களது சொந்த மண்ணில் நடைபெற்ற டி20 தொடரை 2 – 1 (3) என்ற கணக்கில் பாகிஸ்தான் வென்றது. அந்த சுற்றுப்பயணத்தில் அடுத்ததாக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்றது. 2 போட்டிகளின் முடிவில் சமநிலைப் பெற்ற அத்தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் கடைசிப் போட்டி நவம்பர் 8ஆம் தேதி பைசாலாபாத் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.
அந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய தென்னாப்பிரிக்காவை அபாரமாக பந்து வீசிய பாகிஸ்தான் வெறும் 143 ரன்களுக்கு சுருட்டி வீசியது. இத்தனைக்கும் குவிண்டன் டீ காக் 53, டிரே பிரிட்டோரியஸ் 39 ரன்கள் எடுத்து நல்ல துவக்கத்தைக் கொடுத்தனர்.
அதனால் 87/1 என்ற வலுவான நிலையிலிருந்து தென்னாப்பிரிக்கா அதன் பின் சீட்டுக்கட்டு போல சரிந்து 143 ரன்களுக்கு சுருண்டது. பாகிஸ்தானுக்கு அதிகபட்சமாக அப்ரார் அகமது 4, கேப்டன் ஷாகின் அப்ரிடி 2, முகமது நவாஸ் 2, சல்மான் ஆகா 2 விக்கெட்டுகள் எடுத்தனர். அடுத்து விளையாடிய பாகிஸ்தானுக்கு பகார் ஜாமான் டக் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார்.
மறுபுறம் சாய்ம் ஆயுப் அதிரடியாக விளையாடி அரை சதத்தை அடித்தார். எதிர்ப்புறம் நங்கூரமாக விளையாடிய பாபர் அசாம் 27 ரன்னில் ரன் அவுட்டாகி ஏமாற்றத்துடன் சென்றார். விராட் கோலியை விட சிறந்த பேட்ஸ்மேன் என்று பாகிஸ்தான் ரசிகர்கள் தலையில் வைத்து கொண்டாடும் அவர் 2023 ஆசியக் கோப்பைக்குப் பின் இரண்டரை வருடங்களாக சதமடிக்க முடியாமல் திணறி வருகிறார்.
அந்த சூழ்நிலையில் சொந்த மண்ணில் நடைபெற்ற இத்தொடரிலும் சதமடிக்க முடியாததால் மிகப்பெரிய ஏமாற்றத்தைச் சந்தித்த அவர் பெவிலியனில் நொறுங்கிப் போய் அமர்ந்தார். தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் மறுபுறம் அசத்திய ஆயுப் 77 (70) ரன்கள் குவித்து அவுட்டானார். இறுதியில் முகமது நவாஸ் 32* ரன்கள் எடுத்த உதவியுடன் 25.1 ஓவரில் 144/3 ரன்களை எடுத்த பாகிஸ்தான் 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வென்றது.
இதையும் படிங்க: அபிஷேக் புயலில் கில் டேபிள் ஃபேன் மாதிரி.. பவர் கட்டானால் இந்தியாவின் கதை முடிஞ்ச்சு.. ரமேஷ் கவலை
அதனால் 2 – 1 (3) என்ற கணக்கில் பாகிஸ்தான் இத்தொடரை வென்றது. இதன் வாயிலாக ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் முறையாக தெனாப்பிரிக்காவுக்கு எதிராக தங்களது சொந்த மண்ணில் பாகிஸ்தான் ஒரு தொடரை வென்று சாதனை படைத்துள்ளது. இதற்கு முன் 2003/04, 2007/08 தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக தங்களது சொந்த மண்ணில் நடைபெற்ற ஒருநாள் தொடர்களில் பாகிஸ்தான் தோற்றது குறிப்பிடத்தக்கது.