17.3 ஓவரில் 107 ரன்ஸ்.. ஒரு வழியாக கனடாவை திணறலாக வீழ்த்திய பாகிஸ்தான்.. ரோஹித்தின் சாதனை ரிஸ்வான் சமன்

PAK vs CAN
- Advertisement -

ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையில் ஜூன் 11ஆம் தேதி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 22வது லீக் போட்டி நடைபெற்றது. அதில் குரூப் ஏ பிரிவில் இடம் வகிக்கும் பாகிஸ்தான் மற்றும் கனடா அணிகள் மோதின. தங்களுடைய முதலிரண்டு போட்டிகளில் அமெரிக்கா மற்றும் இந்தியாவிடம் தோல்விகளை சந்தித்ததால் இப்போட்டியில் கண்டிப்பாக வென்றாக வேண்டிய கட்டாயத்தில் பாகிஸ்தான் களமிறங்கியது.

அந்த சூழ்நிலையில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய கனடா அணிக்கு ஆரோன் ஜான்சன் துவக்க வீரராக களமிறங்கி நங்கூரமாகவும் அதிரடியாகவும் விளையாடினார். ஆனால் எதிர்ப்புறம் நவ்நீத் 4, பர்க்கட் சிங் 2, நிக்கோலஸ் கிர்டோன் 1, ஸ்ரேயாஸ் மோவா 2, ரவீந்திரபால் சிங் 0 ரன்களில் அவுட்டாகி கனடாவுக்கு கை கொடுக்க தவறினர்.

- Advertisement -

ஒரு வழியாக:
அதனால் ஏற்பட்ட அழுத்தத்தில் மறுபுறம் போராடிய ஜான்சனும் 4 பவுண்டரி 4 சிக்ஸருடன் 52 (44) ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இறுதியில் ஜாபர் 10, கலீம் சனா 13* ரன்கள் எடுத்தும் 20 ஓவரில் கனடா 106/7 ரன்கள் மட்டுமே எடுத்தது. பாகிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக ஹரிஷ் ரவூப் 2, முகமத் அமீர் 2 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்கள். அதைத்தொடர்ந்து 107 ரன்களை துரத்திய பாகிஸ்தானுக்கு சாய்ம் ஆயுப் 6 (12) ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார்.

இருப்பினும் மற்றொரு துவக்க வீரர் முகமது ரிஸ்வான் மீண்டும் நிதானமாக விளையாடினார். அவருடன் ஜோடி சேர்ந்த கேப்டன் பாபர் அசாம் 2வது விக்கெட்டுக்கு 63 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து வெற்றியை உறுதி செய்து 33 (33) ரன்னில் அவுட்டானார். அப்போது வந்த பகார் ஜாமான் 4 ரன்கள் ஆட்டமிழந்தார். ஆனால் எதிர்ப்புறம் தொடர்ந்து நிதானமாக விளையாடிய முகமது ரிஸ்வான் 53* (53) ரன்கள் குவித்தார்.

- Advertisement -

இதையும் சேர்த்து சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக முறை 50க்கும் மேற்பட்ட ரன்கள் அடித்த துவக்க வீரர் என்ற ரோகித் சர்மாவின் உலக சாதனையும் அவர் சமன் செய்தார். இதுவரை ரோகித் சர்மா மற்றும் முகமது ரிஸ்வான் ஆகிய இருவருமே தலா 30 முறை 50க்கும் மேற்பட்ட ரன்கள் அடித்துள்ளனர். அதனால் 17.3 ஓவரில் 107/3 ரன்கள் எடுத்த பாகிஸ்தான் 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

இதையும் படிங்க: ஈஸியான மேட்ச்.. பிட்ச், பேட்டிங் கிடையாது.. இந்தியாவிடம் பாகிஸ்தான் தோற்க இதான் காரணம்.. மைக்கேல் வாகன்

அதன் காரணமாக ஒரு வழியாக முதல் வெற்றியை பதிவு செய்த பாகிஸ்தான் சூப்பர் 8 சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை தற்காலிகமாக வைத்துக் கொண்டது. மறுபுறம் முடிந்தளவுக்கு போராடிய கனடா சார்பில் அதிகபட்சமாக டிலோன் ஹேய்லிகர் 2 விக்கெட்டுகள் எடுத்தும் தோல்வியை தவிர்க்க முடியவில்லை.

Advertisement