
ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானை தோற்கடித்த இந்தியா 9வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. அத்தொடரில் பாகிஸ்தானை 3 முறை தோற்கடித்த இந்தியா தங்கள் நம்பர் ஒன் அணி என்பதை நிரூபித்தது. அதையும் சேர்த்து கடைசியாக விளையாடிய 8 போட்டிகளில் பாகிஸ்தானை 8 முறை இந்தியா தோற்கடித்து அசத்தியுள்ளது.
மறுபுறம் இந்தியாவை தோற்கடித்து பழி தீர்க்க வேண்டும் என்று வெறித்தனமாக களமிறங்கிய பாகிஸ்தான் ஹாட்ரிக் தோல்விகளை சந்தித்து பரிதாபமாக வெளியேறியது. அதன் காரணமாக பாகிஸ்தான் ரசிகர்கள் மிகப்பெரிய ஏமாற்றத்தை சந்தித்தனர். அதுமட்டுமின்றி அடுத்து நடைபெறும் ஐசிசி 2025 மகளிர் உலகக் கோப்பையில் பாகிஸ்தானை 88 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோற்கடித்தது.
அதையும் சேர்த்து மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடிய 12 போட்டிகளில் இந்தியா 12 வெற்றிகளைப் பெற்று அசத்தியுள்ளது. அதனால் பாகிஸ்தான் ரசிகர்கள் சோகத்தில் மூழ்கினர். இதைத்தொடர்ந்து பாகிஸ்தான் தங்களுடைய சொந்த மண்ணில் உலக டெஸ்ட் சாம்பியன் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.
2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் அத்தொடரின் 2 போட்டிகளும் முறையே லாகூர் மற்றும் ராவல்பிண்டி மைதானத்தில் அக்டோபர் 12, 20 ஆகிய தேதிகளில் துவங்க உள்ளது. இந்நிலையில் அந்த 2 போட்டிகளுக்கான பெரும்பாலான டிக்கெட் விலையை பாகிஸ்தான் வாரியம் இலவசம் என்று அறிவித்துள்ளது. குறிப்பாக முதல் தரம், பிரீமியம், விஐபி ஆகிய 3 பிரிவில் உள்ள அனைத்து டிக்கெட்டுகளும் இலவசமாக கொடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விஐபி இக்பால் மற்றும் ஜின்னா பகுதிகளில் உள்ள டிக்கெட்களின் விலை 350, 400 ரூபாய்களாக குறைக்கப்பட்டுள்ளது. இருப்பதிலேயே உச்சபட்சமான பிளாட்டினம் டிக்கெட் விலை 3520 – 4400 ரூபாய்களாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான காரணம் என்னவெனில் ஆசியக் கோப்பையில் இந்தியாவிடம் சந்தித்த தோல்வியால் தற்சமயத்தில் பாகிஸ்தான் அணி மீது அந்நாட்டு ரசிகர்கள் பெரிய விரக்தியில் உள்ளனர்.
இதையும் படிங்க: அதுல கில்லை விட ஸ்ரேயாஸ் தான் தகுதியான கேப்டன்.. கில் முதலில் இடத்தை பிடிக்கனும்.. உத்தப்பா பேட்டி
அத்துடன் 2024 தொடரில் முதல் முறையாக கத்துக்குட்டியாக கருதப்படும் வங்கதேசத்திடம் தங்கள் சொந்த மண்ணில் பாகிஸ்தான் அவமானத் தோல்வியை சந்தித்தது. அதனால் அடுத்ததாக நடைபெற்ற பாகிஸ்தான் – இங்கிலாந்து தொடரில் மைதானத்தில் 1000 ரசிகர்கள் கூட இல்லை. எனவே இம்முறையும் ஆசியக் கோப்பை தோல்வியால் பாகிஸ்தான் ரசிகர்கள் திரளாக மைதானத்திற்கு வர வாய்ப்பில்லை. அதனாலேயே எப்படியாவது மைதானத்திற்கு வாங்க என்ற வகையில் பாகிஸ்தான் வாரியம் பெரும்பாலான டிக்கெட்டுகளை இலவசமாக அறிவித்து ரசிகர்களை அழைப்பது குறிப்பிடத்தக்கது.