கடந்த சில வாரங்களாகவே கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்ட, அதிகளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த 16-ஆவது ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரானது முல்தான் நகரில் நேற்று ஆகஸ்ட் 30-ஆம் தேதி கோலாகலமாக துவங்கியது. இந்த தொடரின் முதல் போட்டியில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியும், ரோகித் பவுடல் தலைமையிலான நேபாள அணியும் மோதின.
இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணியானது 50 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 342 ரன்களை குவித்தது.
இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி சார்பாக அதிகபட்சமாக அந்த அணியின் கேப்டன் பாபர் அசாம் 131 பந்துகளை சந்தித்து 14 பவுண்டரிகள் மற்றும் நான்கு சிக்ஸர்கள் என 151 ரன்கள் குவித்து அசத்தினார். இதன் மூலம் ஆசிய கோப்பை தொடரில் விராட் கோலியின் மாபெரும் சாதனையை ஒன்றிணையும் அவர் சமன் செய்துள்ளார்.
அந்த வகையில் ஆசிய கோப்பை தொடரில் இதுவரை ஒரு போட்டியில் 150 ரன்களுக்கு மேல் குவித்த ஒரே வீரராக விராட் கோலி இருந்து வந்தார். ஏற்கனவே விராட் கோலி கடந்த 2012-ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக மீர்பூரில் நடந்த போட்டியில் 183 ரன்கள் குவித்து இருந்தார்.
அதனை தொடர்ந்து ஆசிய கோப்பை தொடரில் வேறு எந்த பேட்ஸ்மேனும் 150 ரன்களை தொட்டதில்லை. இந்நிலையில் நேற்றைய இந்த போட்டியில் பாபர் அசாம் அடித்த 151 ரன்கள் மூலம் இந்த சாதனையை அவர் சமன் செய்து இரண்டாவது வீரராக 150+ ரன்கள் அடித்து சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : யுவ்ராஜ் சிங் உட்பட யோயோ டெஸ்டில் தோல்வியை பெற்று தேர்ச்சி பெற தவறிய 4 நட்சத்திர இந்திய வீரர்கள்
நடைபெற்று முடிந்த இந்த பாகிஸ்தான் மற்றும் நேபாள் அணிகளுக்கு இடையேயான போட்டியில் பாகிஸ்தான் அணி 342 ரன்களை குவிக்க பின்னர் 343 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய நேபாள் அணியானது 104 ரன்களுக்கு சுருண்டது. இதனால் பாகிஸ்தான் அணி 238 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.



