177/7 டூ 344.. பஸ்பால் இங்கிலாந்தை ஆட்டிப் பார்க்கும் பாகிஸ்தான்.. சாதனை வெற்றியை நோக்கி அசத்தல்

PAK vs ENG
- Advertisement -

இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் பாகிஸ்தான் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. அத்தொடரின் முதல் போட்டியில் வென்ற இங்கிலாந்தை இரண்டாவது போட்டியில் தோற்கடித்த பாகிஸ்தான் தொடரை சமன் செய்தது. அதைத் தொடர்ந்து வெற்றியாளரை தீர்மானிக்கும் மூன்றாவது பகுதி அக்டோபர் 24ஆம் தேதி ராவல்பிண்டியில் துவங்கியது.

அப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்தை அபாரமாக பந்து வீசிய பாகிஸ்தான் 267 ரன்களுக்கு சுருட்டியது. ஜாக் கிராவ்லி 29, ஓலி போப் 3, ஜொ ரூட் 5, ஹரி ப்ரூக் 5, கேப்டன் ஸ்டோக்ஸ் 12 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்த அந்த அணிக்கு அதிகபட்சமாக ஜேமி ஸ்மித் 89, பென் டக்கெட் 52 ரன்கள் எடுத்தனர்.

- Advertisement -

ஆட்டம் காணும் பஸ்பால்:

பாகிஸ்தானுக்கு அதிகபட்சமாக சஜித் கான் 6, நோமன் அலி 3 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினர். பின்னர் விளையாடிய பாகிஸ்தானுக்கு அப்துல்லா சபிக் 4, சாய்ம் ஆயுப் 19, கேப்டன் ஷான் மசூத் 26, கம்ரான் குலாம் 3, முகமத் ரிஸ்வான் 25, ஆகா சல்மான் 1 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். அதனால் 177-7 என பெரிய சரிவை சந்தித்த பாகிஸ்தான் 250 ரன்கள் தாண்டாது என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அப்போது மிடில் ஆர்டரில் நங்கூரமாக விளையாடிய சௌத் ஷாக்கீல் சதமடித்து 134 ரன்கள் விளாசி இங்கிலாந்துக்கு பின்னடைவை ஏற்படுத்தினார். அவருடன் சேர்ந்து அசத்திய டெயில் எண்டர்கள் நோமன் அலி 45, சஜித் கான் 48* ரன்கள் குவித்து பாகிஸ்தானுக்கு முன்னிலை பெற்றுக் கொடுத்தனர். இறுதியில் பாகிஸ்தானை 344 ரன்களுக்கு ஆல் அவுட்டாக்கிய இங்கிலாந்துக்கு அதிகபட்சமாக சோயா பசீர் 3, ரீகன் அகமது 4 விக்கெட்டுகளை எடுத்தனர்.

- Advertisement -

பாகிஸ்தான் வெல்லுமா:

பின்னர் 77 ரன்கள் பின்தங்கிய நிலைமையில் களம் இறங்கிய இங்கிலாந்துக்கு ஜாக் கிராவ்லி 2, ஓலி போப் 1 ரன்களில் நோமன் அலி சுழலில் சிக்கினர். அதே போல மற்றொரு துவக்க வீரர் பென் டக்கெட் 12 ரன்களில் சஜித் கான் சுழலில் அவுட்டானதால் 2வது நாள் முடிவில் 24-3 என இங்கிலாந்து திணறி வருகிறது. தற்சமயத்தில் 53 ரன்கள் முன்னிலையில் இருப்பதால் இப்போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெறுவதற்கே பிரகாச வாய்ப்புள்ளது.

இதையும் படிங்க: எங்க ஊர்ல கூட இது கிடைக்காது.. சுந்தரை பாத்து தான் கோலியையும் இந்தியாவையும் சாய்த்தேன்.. சான்ட்னர் பேட்டி

குறிப்பாக பிட்ச் சுழலுக்கு சாதகமாக மாறி வருவதால் இங்கிலாந்தை 200 ரன்களுக்குள் சுருட்டி பாகிஸ்தான் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் அதிரடியாக விளையாடுவோம் என்று மார்த்தட்டக்கூடிய பஸ்பால் இங்கிலாந்து அணியை பாகிஸ்தான் ஆட்டிப்பார்த்து வருகிறது. அதனால் 2021க்குப்பின் 3 வருடங்கள் கழித்து சொந்த மண்ணில் பாகிஸ்தான் இத்தொடரை வென்று சாதனை படைக்க வாய்ப்பு உருவாகியுள்ளது.

Advertisement