
இங்கிலாந்துக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் பாகிஸ்தான் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. அந்த தொடரின் முதல் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 47 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் படுதோல்வியை சந்தித்தது. மேலும் முதல் இன்னிங்ஸில் 500+ ரன்கள் அடித்தும் இன்னிங்ஸ் தோல்வியை சந்தித்த முதல் அணியாகவும் பாகிஸ்தான் படுமோசமான உலக சாதனையை படைத்தது.
அதன் காரணமாக பாபர் அசாம், சாகின் அப்ரிடி, நசீம் ஷா ஆகிய 3 முக்கிய வீரர்களை பாகிஸ்தான் வாரியம் ஓய்வு என்ற பெயரில் அதிரடியாக கழற்றி விட்டது. அந்த பரபரப்புக்கு மத்தியில் அத்தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி அக்டோபர் 15 ஆம் தேதி அதே முல்தான் மைதானத்தில் துவங்கியது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதைத் தொடர்ந்து களமிறங்கிய பாகிஸ்தானுக்கு அப்துல்லா ஷபிக்கை 7 ரன்களில் காலி செய்த ஜேக் லீச் அடுத்து வந்த கேப்டன் தான் மசூதை 3 ரன்களில் அனுப்பினார். அதனால் 19-2 என ஆரம்பத்திலேயே தடுமாறிய பாகிஸ்தானுக்கு அடுத்ததாக அறிமுக வீரர் கம்ரான் குலாம் களமிறங்கினார். அவருடன் மற்றொரு துவக்க வீரர் சாய்ப் ஆயுப் ஜோடி சேர்ந்து ரன் குவிப்பில் ஈடுபட்டார்.
அந்த வகையில் ஜோடி சேர்ந்து இங்கிலாந்துக்கு சவாலை கொடுத்த அவர்கள் இருவருமே அரை சதமடித்தனர். நேரம் செல்ல நன்றாக விளையாடிய அந்த ஜோடி மூன்றாவது விக்கெட்டுக்கு 149 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த போது ஆயுப் 77 ரன்களில் அவுட்டானார். அடுத்ததாக வந்த சவுத் சாக்கில் 4 ரன்களில் அவுட்டானார்.
ஆனால் மறுபுறம் தொடர்ந்து அசத்திய கம்ரான் குலாம் சதமடித்து 118 (224) ரன்கள் குவித்து அவுட்டானார். இதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் 42 வருடங்களுக்குப் பின் அறிமுகப் போட்டியிலேயே 4வது பேட்டிங் இடத்தில் சதமடித்த பாகிஸ்தான் வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார். இதற்கு முன் 1982ஆம் ஆண்டு தனது அறிமுகப் போட்டியில் சலீம் மாலிக் 4வது இடத்தில் களமிறங்கி சதமடித்தார்.
இதையும் படிங்க: நியூசிலாந்து அணிக்கெதிரான முதல் போட்டிக்கு முன் நட்சத்திர இந்திய வீரருக்கு ஏற்பட்ட காயம் – விவரம் இதோ
தற்போது பாபர் அசாம் விளையாடும் 4வது இடத்தில் வாய்ப்பு பெற்றுள்ள கம்ரான் குலாம் அறிமுகப் போட்டியிலேயே சதமடித்துள்ளார். இத்தனைக்கும் இன்று பாபர் அசாமின் பிறந்த நாளாகும். அப்படிப்பட்ட நாளில் சதமடித்துள்ள கம்ரான் குலாம் மீண்டும் பாபர் அசாம் பாகிஸ்தான் அணியில் கம்பேக் கொடுப்பதற்கான வழியில் இடியை இறக்கியுள்ளார் என்றே சொல்லலாம். இறுதியில் நிறைவுக்கு வந்த முதல் நாள் முடிவில் 259-5 ரன்கள் எடுத்துள்ள பாகிஸ்தானுக்கு களத்தில் முகமது ரிஸ்வான் 37*, ஆகா சல்மான் 5* ரன்களுடன் உள்ளனர்.