பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் கிரிக்கெட் அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி ராவில்பிண்டி நகரில் ஆகஸ்ட் 30ஆம் தேதி துவங்கியது. அத்தொடரின் முதல் போட்டியில் 10 விக்கெட் வென்ற வங்கதேசம் டெஸ்ட் கிரிக்கெட்டில் பாகிஸ்தானுக்கு எதிராக முதல் முறையாக வென்று சரித்திரம் படைத்தது. அந்த சூழ்நிலையில் இரண்டாவது போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
முதல் நாள் ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்ட நிலையில் 2வது நாள் பேட்டிங் செய்யத் துவங்கிய பாகிஸ்தான் தடுமாற்றமாக விளையாடி 274 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணிக்கு அதிகபட்சமாக சாய்ம் ஆயுப் 58, கேப்டன் ஷான் மசூட் 57 ரன்கள் அடித்து நல்ல துவக்கத்தை கொடுத்தனர். ஆனால் மிடில் ஆர்டரில் ஆகா சல்மான் 54 ரன்கள் எடுத்ததை தவிர்த்து பாபர் அசாம், முகமது ரிஸ்மான் உள்ளிட்ட மற்ற வீரர்கள் பெரிய ரன்கள் எடுக்கவில்லை.
அசத்தும் வங்கதேசம்:
அந்தளவுக்கு பந்து வீச்சில் அசத்திய வங்கதேசம் சார்பில் அதிகபட்சமாக மெகதி ஹசன் 5, தஸ்கின் அகமது 3 விக்கெட்டுகளை சாய்த்தனர். அதைத்தொடர்ந்து பேட்டிங் செய்த வங்கதேசத்திற்கு சத்மான் இஸ்லாம் 10, ஜஹிர் ஹசன் 1, கேப்டன் சாந்தோ 4, மோனிமுல் ஹைக் 1 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். போதாக்குறைக்கு அனுபவ வீரர்கள் ஷாகிப் அல் ஹசன் 2, கடந்த போட்டியின் நாயகன் முஸ்பிக்கர் ரஹீம் 3 ரன்களில் அவுட்டானார்கள்.
அதனால் 26-6 என சரிந்த வங்கதேசம் 100 ரன்கள் தாண்டாது என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்போது ஜோடி சேர்ந்த லிட்டன் தாஸ் மற்றும் மெஹதி ஹசன் ஆகியோர் நிதானமாக விளையாடி வங்கதேசத்தை சரிவிலிருந்து மீட்டனர். நேரம் செல்ல செல்ல நங்கூரமாக விளையாடி பாகிஸ்தானுக்கு சவாலை கொடுத்த அந்த ஜோடியில் இருவருமே அரை சதமடித்தனர்.
வங்கதேசம் சாதனை:
அந்த வகையில் அழுத்தமான சூழ்நிலைகளில் அசத்திய அந்த ஜோடி 7வது விக்கெட்டுக்கு 165 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து வங்கதேசத்தை காப்பாற்றினர். அதில் லிட்டன் தாஸ் சதமடித்து 138 ரன்களும் மெஹதி ஹசன் 78 ரன்களும் குவித்து அவுட்டானார்கள். அவர்களது உதவியால் தப்பிய வங்கதேசம் 262 ரன்கள் குவித்தது. இதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் 50க்கும் குறைவான ரன்களுக்குள் 6 விக்கெட்டுகளை இழந்த பின் அதிகபட்ச ஸ்கோர் அடித்த அணி என்ற தனித்துவ உலக சாதனையை வங்கதேசம் படைத்துள்ளது.
இதையும் படிங்க: 4 ஓவர்ஸ் 0 ரன்ஸ்.. 1.4 ஓவரில் முடித்த ஹாங்காங்.. இந்திய வம்சாவளி வீரர் அரிதான உலக சாதனை
இதற்கு முன் கடந்த 1967ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் 41-6 என சரிந்தும் கடைசியில் 255 ரன்கள் அடித்ததே முந்தைய சாதனையாகும். இப்போட்டியில் பாகிஸ்தானுக்கு அதிகபட்சமாக குர்ராம் சேஷாத் 6 விக்கெட்டுகளை எடுத்தார். அதன் பின் 12 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய பாகிஸ்தான் மூன்றாவது நாள் முடிவில் 9-2 தடுமாறி வருகிறது. களத்தில் சாய்ம் ஆயுப் 6* ரன்களுடன் உள்ளார்.



