- Advertisement -
உலக கிரிக்கெட்

15க்கு 0.. 274 ரன்ஸ்.. பாபர் அசாம் சொதப்பல்.. பாகிஸ்தானை சுருட்டிய வங்கதேசம் வரலாற்று வெற்றிக்கு அடித்தளம்

பாகிஸ்தானுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் வங்கதேசம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. அத்தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தானை 10 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேசம் தோற்கடித்தது. அதனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் பாகிஸ்தானுக்கு எதிராக முதல் முறையாக வெற்றியை பதிவு செய்து வங்கதேசம் புதிய சாதனை படைத்தது.

மறுபுறம் வங்கதேசத்துக்கு எதிராக டிக்ளர் செய்த பின்பும் தோல்வியை சந்தித்த முதல் அணியாக பாகிஸ்தான் மோசமான உலக சாதனை படைத்தது. அந்த நிலையில் இத்தொடரின் இரண்டாவது போட்டி ஆகஸ்ட் 30ஆம் தேதி ராவில்பிண்டி நகரில் துவங்கியது. மழையால் முதல் நாள் ரத்து செய்யப்பட்ட அப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

- Advertisement -

பாபர் அசாம் சொதப்பல்:

அதைத் தொடர்ந்து களமிறங்கிய பாகிஸ்தானுக்கு முதல் ஓவரிலேயே அப்துல்லா ஷபிக் டக் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார். இருப்பினும் மற்றொரு துவக்க வீரர் சாய்ம் ஆயுப் – கேப்டன் ஷான் மசூட் ஆகியோர் அடுத்ததாக ஜோடி சேர்ந்து நங்கூரமாக விளையாடினர். அந்த வகையில் இரண்டாவது விக்கெட்டுக்கு 107 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து பாகிஸ்தானுக்கு நல்ல துவக்கத்தை கொடுத்த இந்த ஜோடியில் ஷான் மசூட் 57, சாய்ம் ஆயுப் 58 ரன்கள் குவித்து அவுட்டானார்கள்.

அதைத் தொடர்ந்து களமிறங்கிய முன்னாள் கேப்டன் பாபர் அசாம் நிதானமாக விளையாட முயற்சித்தார். ஏற்கனவே சுமாரான ஃபார்மில் இருக்கும் அவர் இப்போட்டியில் சதமடித்து தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நன்கு செட்டிலான அவர் ஷாகிப் அல் ஹசன் சுழலில் 31 (77) ரன்களில் அவுட்டானார்.

- Advertisement -

அடித்தளம் போட்டுள்ள வங்கதேசம்:

இதையும் சேர்த்து கடைசியாக விளையாடிய 15 டெஸ்ட் இன்னிங்ஸில் ஒரு அரை சதம் கூட அடிக்காத பாபர் அசாம் வெறும் 320 ரன்களை 21.32 என்ற சராசரியில் எடுத்து சொதப்பலாக பேட்டிங் செய்து வருகிறார். அவரைத் தொடர்ந்து விளையாடிய பாகிஸ்தான் பேட்ஸ்மேன்களில் ஆகா சல்மான் 54 ரன்கள் எடுத்தார். ஆனால் அவரைத் தவிர்த்து சௌட் ஷாக்கீல் 16, முகமது ரிஸ்வான் 29, குர்ராம் சேஷாத் 12 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர்.

இதையும் படிங்க: இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் விளையாட நினைத்த சூரியகுமார் யாதாவிற்கு ஏற்பட்ட சோகம் – நடந்தது என்ன?

இறுதியில் பாகிஸ்தானை 274 ரன்களுக்கு ஆல் அவுட் செய்து அசத்திய வங்கதேசம் சார்பில் அதிகபட்சமாக மெஹதி ஹசன் 5, தஸ்கின் அகமது 3 விக்கெட்டுகளை சாய்த்தனர். அதைத்தொடர்ந்து களமிறங்கிய வங்கதேசம் 2வது நாள் முடிவில் 10-0 ரன்கள் எடுத்துள்ளது. அந்த வகையில் இப்போட்டியிலும் பாகிஸ்தானை ஒரு நாளுக்குள் ஆல் அவுட்டாக்கிய வங்கதேசம் மீண்டும் வரலாற்று வெற்றியை பெற்று தொடரை வெல்வதற்கான வலுவான அடித்தளத்தை அமைத்துள்ளது என்றே சொல்லலாம்.

- Advertisement -