இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் கடந்த பிப்ரவரி 7-ஆம் தேதி துவங்கிய ஐசிசி-யின் பத்தாவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரானது மார்ச் 8-ஆம் தேதி நிறைவடைய இருக்கிறது. இந்த தொடரின் லீக் சுற்று ஆட்டங்கள் முடிவடைந்த வேளையில் எட்டு அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றன. அந்த வகையில் தற்போது சூப்பர் 8 சுற்று ஆட்டங்களும் முடிவடைந்த நிலையில் தென்னாப்பிரிக்கா, இந்தியா, இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன.
பாகிஸ்தான் வீரர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள அபராதம் :
அடுத்ததாக நடைபெற இருக்கும் இரண்டு அரையிறுதி போட்டியில் வெற்றி பெறும் இரண்டு அணிகள் இறுதிப்போட்டியில் விளையாடும். இந்நிலையில் இந்த டி20 உலக கோப்பை தொடரில் சல்மான் அலி ஆகா தலைமையில் விளையாடிய பாகிஸ்தான் அணி லீக் சுற்று போட்டிகளில் வெற்றி பெற்று சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றிருந்தது.
இருந்தாலும் சூப்பர் 8 சுற்றில் தோல்வியடைந்து அரையிறுதி வாய்ப்பை இழந்தது. கடைசியாக இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் அவர்கள் வெற்றி பெற்றிருந்தாலும் ரன் ரேட் அடிப்படையில் நியூசிலாந்து அணி அரையிறுதிக்கான வாய்ப்பை உறுதி செய்திருந்தது. இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் மோசமான செயல்பாடு காரணமாக பாதிக்கப்பட்ட அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தங்களது சொந்த அணி வீரர்களுக்கு அபராதம் விதித்துள்ளது.
ஏற்கனவே பாகிஸ்தான் வீரர்களின் மோசமான செயல்பாடு அந்த அணியின் ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருந்த வேளையில் மிகவும் அதிருப்தியடைந்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இந்த உலக கோப்பை தொடரில் விளையாடிய அனைத்து வீரர்களுக்கும் சுமார் தலா 5 மில்லியன் பாகிஸ்தான் ரூபாய் (இந்திய மதிப்பில் தோராயமாக 16 லட்சம் ரூபாய்) அபராதம் விதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க : மண்டியிட்டு வானத்தை பார்த்து வேண்டியது ஏன்? செலிப்ரேஷன் குறித்து பேசிய – சஞ்சு சாம்சன்
இந்த தொகையானது வீரர்களின் சம்பளத்திலிருந்து நேரடியாக பிடித்தம் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அபராதத்திற்கு முக்கிய காரணமே பாகிஸ்தான் அணி இந்திய அணியுடன் தோல்வியடைந்தது தான் என்றும் சிலர் கூறிவருகின்றனர். மேலும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் மூத்த வீரர்களை நீக்கிவிட்டு இளம் வீரர்களை கொண்ட வலுவான அணியை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் வலுத்து வருவது குறிப்பிடத்தக்கது.



