வீடியோ : சாப்பிட தான் லாய்க்கி – தோல்வி கோபத்தில் சொந்த நட்டு வீரரையே மோசமாக திட்டிய பாக் ரசிகர்

- Advertisement -

ஐக்கிய அரபு நாடுகளில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதி வரும் 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. அதில் இதுவரை நடைபெற்று முடிந்த முதலிரண்டு போட்டிகளில் அற்புதமான செயல்பாடுகளை வெளிப்படுத்திய ஆப்கானிஸ்தான் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்று 2 – 0* (3) என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே தொடரை கைப்பற்றியுள்ளது. குறிப்பாக சர்வதேச கிரிக்கெட்டில் பாகிஸ்தானுக்கு எதிராக முதல் முறையாக ஒரு வெற்றியை பதிவு செய்து ஒரு தொடரையும் வென்று ஆப்கானிஸ்தான் புதிய வரலாறு படைத்துள்ளது. மேலும் கடந்த 2022 ஆசிய கோப்பையில் 1 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை பரிசளித்த பாகிஸ்தானுக்கு அதே சார்ஜா மைதானத்தில் இந்த 2 வெற்றிகளையும் பதிவு செய்துள்ள ஆப்கானிஸ்தான் தக்க பதிலடி கொடுத்துள்ளது.

மறுபுறம் பாபர் அசாம், முகமது ரிஸ்மான் உள்ளிட்ட சீனியர் வீரர்களுக்கு ஓய்வளித்து சமீபத்திய பிஎஸ்எல் தொடரில் அசத்திய இளம் வீரர்களுடன் களமிறங்கிய பாகிஸ்தான் அடுத்தடுத்த படு தோல்விகளால் கடுமையான விமர்சனங்களை சந்தித்துள்ளது. குறிப்பாக ஒரே நேரத்தில் பலமான அணிகளுக்கு எதிராக முதன்மை அணியையும் கத்துக்குட்டிகளுக்கு எதிராக இளம் வீரர்களுடன் கூடிய 2வது தர அணியையும் களமிறக்கி வெற்றி கண்டு வரும் இந்தியாவின் ஸ்டைலை பின்பற்றி ஏமாற்றத்தை சந்தித்த பாகிஸ்தான் கிண்டல்களுக்கு உள்ளாகியுள்ளது.

- Advertisement -

கோபமான ரசிகர்:
ஆனால் பிஎஸ்எல் தொடரில் தார் ரோட் போல அமைக்கப்பட்டிருந்த பிட்ச்களில் அதிரடியாக விளையாடி சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்திய இளம் பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் ஷார்ஜாவில் உள்ள பந்து வீச்சுக்கு சாதகமான பிட்ச்சில் சுமாராக செயல்பட்டது அந்நாட்டு ரசிகர்களை ஏமாற்றமடைய வைத்துள்ளது. குறிப்பாக 36 பந்தில் சதமடித்து சாதனை படைத்த தொடக்க வீரர் சாய்ம் ஆயுப் இந்த தொடரில் அதிரடி காட்ட முடியாமல் திணறி வருகிறார். அதை விட பிஎஸ்எல் தொடரின் ஒரு போட்டியில் அதிரடியாக செயல்பட்ட முன்னாள் வீரர் மொயின் கான் அவர்களது மகன் அசாம் கான் இந்தியாவின் சூரியகுமாரை விட மிகச் சிறப்பாக செயல்படுவதாக மிஸ்பா-உல்-ஹக் பாராட்டியிருந்தார்.

ஆனால் இந்த தொடரின் முதல் போட்டியில் டக் அவுட்டான அவர் 2வது போட்டியில் 1 ரன்னில் அவுட்டாகி தோல்விக்கு முக்கிய காரணமாகும் வகையில் செயல்பட்டார். அத்துடன் சற்று உடல் பருமனாக இருப்பதன் காரணமாக விக்கெட் கீப்பிங் செய்வதிலும் தடுமாறிய அவர் தோல்விகளுக்கு முக்கிய காரணமாக அமைந்தார். அதனால் 2வது போட்டியில் அவுட்டாகி சென்ற போது சார்ஜா மைதானத்தில் இருந்த ஒரு பாகிஸ்தான் ரசிகர் உச்சகட்ட கோபமடைந்து “நல்லா போய் சாப்பிடுங்க நீங்க அதுக்கு தான் லாய்க்கி” என்று வெளிப்படையாகவே சைகை செய்து விமர்சித்தார். கூடவே அருகில் இருந்த ஒரு பாகிஸ்தான் ரசிகர் எப்படியாவது தங்களது அணி வெற்றி பெற வேண்டும் என்று கண்ணீர் விட்டு கடவுளை வேண்டினார்.

- Advertisement -

அதை கேமராமேன் படம் பிடித்த அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இருப்பினும் தங்களது சொந்த நாட்டு வீரரையே உடலை கொச்சைப்படுத்தும் வகையில் சைகை செய்த அந்த ரசிகரின் செயல் பாகிஸ்தான் ரசிகர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக இயற்கையாகவே சற்று உடல் பருமனுடன் இருக்கும் அவர் தனது தந்தையின் செல்வாக்கால் குறுகிய காலத்திலேயே சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார். ஆனாலும் தனது இடத்தை தக்க வைத்துக் கொள்ளும் அளவுக்கு சிறப்பாக செயல்படாத அவர் அதிரடியாக நீக்கப்பட்டார்.

இதையும் படிங்க : வீடியோ : ரசிகர்களை வரவேற்க சேப்பாக்கம் மைதானத்தில் பெயிண்டராக மாறிய தல தோனி

அந்த நிலையில் 2023 பிஎஸ்எல் தொடரில் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்திய காரணத்தால் நீண்ட நாட்களுக்குப் பின் தேர்வான அவர் மீண்டும் இப்படி சுமாராக செயல்பட்டு வருகிறார். இதை தொடர்ந்து ஏற்கனவே தொடரை இழந்து விட்ட பாகிஸ்தான் மார்ச் 27ஆம் தேதியன்று இரவு 9.30 மணிக்கு நடைபெறும் கடைசி போட்டியில் எப்படியாவது வென்று குறைந்தபட்சம் ஒயிட் வாஷ் அவமான தோல்வியை தவிர்க்கும் முனைப்புடன் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement