PAK vs SA : பாகிஸ்தானின் பரபரப்பான வெற்றி. இந்திய அணியின் அரையிறுதி வாய்ப்பை பாதிக்குமா? – ஒரு முழுஅலசல் இதோ

Shaheen Afridi PAK vs RSA
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் பரபரப்பாக நடைபெற்று வரும் 2022 ஐசிசி டி20 உலக கோப்பையில் 2009க்குப்பின் 2வது கோப்பையை வெல்லும் முனைப்புடன் களமிறங்கிய பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் தன்னுடைய முதல் 2 போட்டிகளில் இந்தியா மற்றும் கத்துக்குட்டி ஜிம்பாப்வேவிடம் அடுத்தடுத்த அதிர்ச்சி தோல்விகளை சந்தித்தது. அதனால் விமர்சனத்திற்குள்ளான பாகிஸ்தானின் அரையிறுதி வாய்ப்பு ஆரம்பத்திலேயே பாதி பறிபோன நிலையில் எஞ்சிய அரைகுறை வாய்ப்புகளையும் தக்க வைத்துக் கொள்ள நவம்பர் 3ஆம் தேதியன்று தென் ஆப்பிரிக்காவை தோற்கடிக்க வேண்டிய கட்டாயத்தில் அந்த அணி களமிறங்கியது.

புகழ் பெற்ற சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் இந்திய நேரப்படி மதியம் 1.30 மணிக்கு துவங்கிய அப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்ததை தொடர்ந்து முகமது ரிஸ்வான் ஆரம்பத்திலேயே 4 (4) ரன்களில் அவுட்டாக அடுத்து வந்த முகமது ஹாரிஸ் அதிரடியாக 2 பவுண்டரி 3 சிக்ஸருடன் 28 (11) ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். அப்போது மறுபுறம் தடவிய கேப்டன் பாபர் அசாம் 6 (15) ரன்களில் அவுட்டான நிலையில் ஷான் மசூட் 2 (6) ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார். அதனால் 43/4 என்ற மோசமான தொடக்கத்தை பெற்ற பாகிஸ்தானுக்கு ஏற்கனவே மிடில் ஆர்டர் திணறுவதால் இப்போட்டியில் தோல்வி உறுதியென்று அந்நாட்டு ரசிகர்கள் கவலையடைந்தனர்.

- Advertisement -

மிரட்டிய பாகிஸ்தான்:
ஆனால் அப்போது களமிறங்கிய முகமது நவாஸ் அதிரடியாக 4 பவுண்டரி 1 சிக்ஸருடன் 28 (22) ரன்களில் அவுட்டானாலும் 6வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்து தென்னாப்பிரிக்க பவுலர்களை அதிரடி சரவெடியாக எதிர்கொண்ட சடாப் கான் – இப்திகார் அஹமத் ஜோடி யாருமே எதிர்பாராத வகையில் அட்டகாசமாக பேட்டிங் செய்து 83 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து சரிந்த பாகிஸ்தானை தூக்கி நிறுத்தியது. அதில் சடாப் கான் 3 பவுண்டரி 4 சிக்ஸருடன் 52 (22) ரன்களும் இப்திகார் அகமது 3 பவுண்டர் 2 சிக்ருடன் 51 (35) ரன்களும் எடுத்து கடைசியில் ஆட்டமிழந்தனர். அதனால் தப்பிய பாகிஸ்தான் 20 ஓவர்களில் 185/9 ரன்கள் குவிக்க தென் ஆப்பிரிக்கா சார்பில் அதிகபட்சமாக அன்றிச் நோர்ட்ஜே 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.

அதை தொடர்ந்து 186 ரன்களை துரத்திய தென்னாப்பிரிக்காவுக்கு முதல் ஓவர்லேயே குவிண்டன் டீ காக் அவுட்டான நிலையில் அடுத்து வந்த ரிலீ ரோசவ் 7 (6) ரன்களில் நடையை கட்டினார். இருப்பினும் கேப்டன் பவுமா 4 பவுண்டரி 1 சிக்சருடன் அதிரடியாக 36 (19) ரன்கள் குவித்து நம்பிக்கை கொடுத்து அவுட்டானார். அதனால் 69/4 என தென் ஆப்பிரிக்கா தடுமாறிய போது மழை வந்ததால் டிஎல்எஸ் விதிமுறைப்படி 14 ஓவரில் 142 ரன்கள் தேவை என்ற புதிய இலக்கு அந்த அணிக்கு உருவாக்கப்பட்டது.

- Advertisement -

அதனால் மேலும் அழுத்தத்தை சந்தித்த தென்னாப்பிரிக்காவுக்கு அடுத்து வந்த ஐடன் மார்க்ரம் 20 (14) ஹென்றிச் க்ளாஸென் 15 (9) ட்ரிஷன் ஸ்டப்ஸ் 18 (18) வேன் பர்னல் என முக்கிய வீரர்கள் பாகிஸ்தானின் தரமான பந்து வீச்சில் சொற்ப ரன்களில் அவுட்டானார்கள். அதன் காரணமாக 14 ஓவரில் 108/9 ரன்களை மட்டுமே எடுத்த தென்னாபிரிக்கா பரிதாபமாக தோற்றது. பாகிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக ஷாகின் அப்ரிடி 3 விக்கெட்டுகளை சாய்த்தார். அதனால் 33 ரன்கள் வித்தியாசத்தில் வாழ்வா – சாவா என்ற இப்போட்டியில் வாழ்வை கண்ட பாகிஸ்தான் பங்கேற்ற 4 போட்டிகளில் 2வது வெற்றியை பதிவு செய்து புள்ளி பட்டியலில் 3வது இடத்திற்கு முன்னேறி அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டது.

இப்போட்டியில் தென் ஆப்பிரிக்கா வென்றிருந்தால் அந்த அணியும் இந்தியாவும் இன்றே நேரடியாக அரையிறுதிக்கு தகுதி பெற்றிருக்கும். ஆனால் கடைசி நேரத்தில் பாகிஸ்தான் வென்றதால் மீண்டும் குரூப் 2 புள்ளி பட்டியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதாவது தற்போதைய நிலைமையில் ஜிம்பாப்வேவுக்கு எதிரான தன்னுடைய கடைசி போட்டியில் இந்தியா வென்றால் சிரமமின்றி அரையிறுதிக்கு சென்று விடும்.

அதே போல் நெதர்லாந்துக்கு எதிரான தன்னுடைய கடைசிப் போட்டியில் தென் ஆப்பிரிக்கா வென்றால் அந்த அணி அரை இறுதிக்கு வந்துவிடும். ஒருவேளை மெடிக்கல் மிராக்கிள் போல இந்தியாவும் தென்னாப்பிரிக்காவும் தங்களுடைய கடைசி போட்டியில் தோற்கும் பட்சத்தில் வங்கதேசத்துக்கு எதிரான தன்னுடைய கடைசி போட்டியில் பாகிஸ்தான் வெல்லும் பட்சத்தில் அந்த அணி அரையிறுதிக்கு சென்று விடும்.

ஏனெனில் தற்போது இந்தியாவை விட பாகிஸ்தானுக்கு ரன்ரேட் அதிகமாக உள்ளது. அதனால் எதிர்பார்க்கப்படுவது போலவே இந்தியாவும் தென் ஆப்பிரிக்காவும் தங்கடைய கடைசி போட்டியில் வெல்வது அந்த அணி அரையிறுதிக்கு செல்ல வழிவகுக்கும். அது நடைபெற்றால் பாகிஸ்தான் தன்னுடைய கடைசி போட்டியில் வென்றாலும் அரை இறுதிக்கு செல்ல முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement