இந்திய அணிக்கு 2011 உலககோப்பை வென்ற பயிற்சியாளர் மீண்டும் நியமனம் – ரசிகர்கள் மகிழ்ச்சி

Dravid
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் தற்போதைய சூழ்நிலையில் வரும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற முனைப்புடன் அனைத்து முன்னணி அணிகளும் தயாராகி வருகின்றன. அந்த வகையில் கடந்த 2007 டி20 உலகக் கோப்பையை வென்றபின் அடுத்த உலகக் கோப்பையை வெல்ல முடியாமல் தவித்து வரும் இந்தியா கடைசியாக கடந்த வருடம் துபாயில் நடந்த டி20 உலகக் கோப்பையில் விராட் கோலி தலைமையில் பரம எதிரியான பாகிஸ்தானிடம் வரலாற்று தோல்வியை சந்தித்து லீக் சுற்றுடன் வெளியேறியது. இருப்பினும் இம்முறை 5 ஐபிஎல் கோப்பைகளை வென்றுள்ள ரோகித் சர்மா தலைமையில் சமீபத்திய தொடர்களில் இங்கிலாந்து போன்ற வலுவான அணிகளையும் தோற்கடித்த இந்தியா கோப்பையை வெல்லும் என்ற நம்பிக்கை ரசிகர்களிடம் காணப்படுகிறது.

அதற்கு தயாராக ஐபிஎல் முடிந்ததும் தென் ஆப்பிரிக்கா, அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகளை எதிர்கொண்டு வெற்றிகளை பெற்ற இந்தியா அடுத்ததாக வலுவான வெஸ்ட் இண்டீசை அதன் சொந்த மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் எதிர்கொள்கிறது. அதைத் தொடர்ந்து இம்முறை 20 ஓவர் போட்டிகளாக நடைபெறும் ஆசிய கோப்பை தொடரிலும் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகளுக்கு எதிராக மீண்டும் சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் இந்தியா களமிறங்க காத்திருக்கிறது.

- Advertisement -

பணிச்சுமை பயிற்சியாளர்:
முன்னதாக நவீன கிரிக்கெட்டில் டெஸ்ட், ஒருநாள், டி20 என 3 வகையான இந்திய அணியிலும் விளையாடும் வீரர்கள் அதுபோக ஐபிஎல் தொடரிலும் விளையாட வேண்டியுள்ளதால் அதிகப்படியான பணிச்சுமைக்கு உள்ளாகிறார்கள். நாளடைவில் அதுவே அவர்களின் ஆட்டத்தையும் பாதித்து இந்தியாவின் வெற்றியிலும் எதிரொலிக்கிறது. எடுத்துக்காட்டாக விராட் கோலி போன்ற உலகத்தரம் வாய்ந்த ஒருவர் தற்போது பணிச்சுமைக்கு உள்ளாகி பார்மை இழந்து கடுமையான விமர்சனங்களை சந்தித்து அதற்காக இடையிடையே ஓய்வெடுத்து வருகிறார்.

அதேபோல் ரோகித் சர்மா உள்ளிட்ட முக்கிய வீரர்களும் சமீப காலங்களில் நிறைய தொடர்களில் ஓய்வெடுக்கிறார்கள். எனவே பணிச்சுமை முக்கிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளதை கருத்தில் கொண்ட பிசிசிஐ அதை சீராக்கி இந்திய வீரர்கள் புத்துணர்ச்சியுடன் விளையாடுவதற்கு புதிதாக பயிற்சியாளரை நியமித்துள்ளது. ஆம் அதிகப்படியான போட்டிகளில் விளையாடும் இந்திய வீரர்களின் மனநிலையை சீரான நிலையில் வைக்க உதவும் வகையில் பிரபல மனநல பயிற்சியாளர் பேடி அப்டோன் இந்திய அணியுடன் சேர்க்கப்பட்டுள்ளார்.

- Advertisement -

உலககோப்பை வென்றவர்:
சர்வதேச அளவில் நிறைய கிரிக்கெட் அணிகளில் மனநல பயிற்சியாளராக செயல்பட்டு புகழ் பெற்றுள்ள இவர் ஏற்கனவே கடந்த 2008 – 2011 வரையிலான காலகட்டத்தில் இந்திய அணியுடன் செயல்பட்டுள்ளார். குறிப்பாக கடந்த 2011இல் எம்எஸ் தோனி தலைமையில் 28 வருடங்கள் கழித்து சொந்த மண்ணில் உலக கோப்பையை வென்ற இந்திய அணியில் அப்போதைய தலைமை பயிற்சியாளர் கேரி கிறிஸ்டன் உடன் அவர் இணைந்து பணியாற்றியதை ரசிகர்கள் மறந்திருக்க முடியாது.

அந்த வகையில் தற்போதைய தலைமை பயிற்சியாளராக இருக்கும் ராகுல் டிராவிட் உடனும் ஏற்கனவே இந்திய அணியில் இணைந்து பணியாற்றியுள்ள அவர் ஐபிஎல் தொடரிலும் ராஜஸ்தான், டெல்லி போன்ற அணிகளில் மனநல பயிற்சியாளராக செயல்பட்ட அனுபவத்தை கொண்டுள்ளார்.

- Advertisement -

வரும் அக்டோபர் மாதம் ஆஸ்ட்ரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பை வரை குறுகிய காலத்திற்கு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள அவர் ஜூலை 27இல் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக நடைபெறும் 3-வது ஒருநாள் போட்டியிலிருந்து இந்திய அணியுடன் இணைந்துள்ளார்.
ஏற்கனவே இந்திய அணியில் இணைந்து பணியாற்றியதால் பெரிய அளவில் மாற்றத்தை உணராத அவர் தனது பணியைக் குறித்து பேசியது பின்வருமாறு :

“இந்திய அணியுடன் வரும் டி20 உலகக்கோப்பை வரை இணைந்து மனநிலை பயிற்சியாளராக செயல்பட உள்ளேன். இந்திய அணியுடன் 11 வருடங்களுக்கு முன்பே கேரி க்ரிஸ்டன் பயிற்சியாளராக இருந்தபோது இணைந்து பணியாற்றியுள்ளேன். ஒரு உலக கோப்பை, உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் அணி, 8 ஐபிஎல் அணிகள் மற்றும் 3 பிளே ஆஃப் என சமீபத்திய வருடங்களில் எனது பயிற்சியாளர் வாழ்க்கை பயணித்தது”

இதையும் படிங்க : IND vs WI : 3 ஆவது போட்டியிலும் இடமில்லை. ஏன் அவரை மட்டும் டீம்ல சேக்கவே மாட்றீங்க – ரசிகர்கள் கோபம்

“தற்போது இந்திய அணியுடன் மீண்டும் இணைந்துள்ளதில் மகிழ்ச்சி அடைகிறேன். அதேப்போல் ராகுல் டிராவிட் உடனும் ஏற்கனவே நிறைய வருடங்கள் இணைந்து பணியாற்றியுள்ளேன்” என்று பெருமிதத்துடன் கூறியுள்ளார். சமீப காலங்களில் பணிச்சுமை மற்றும் புத்துணர்ச்சியின்மை காரணமாக நிறைய முக்கிய இந்திய வீரர்கள் கடும் சவாலை எதிர்கொள்ளும் இந்த சூழ்நிலையில் தரமான அனுபவமுள்ள மனநல பயிற்சியாளரை பிசிசிஐ நியமித்துள்ள முடிவு ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

Advertisement