ஐபிஎல் 2022 தொடரில் எப்படியாவது கோப்பையை வென்று விட வேண்டும் என்ற முனைப்புடன் களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு நாக்-அவுட் வரை முன்னேறி பரிதாபமாக வெளியேறியது. இந்த வருடம் தென் ஆப்பிரிக்கா போன்ற சர்வதேச அணியை வழிநடத்திய அனுபவம் கொண்ட புதிய கேப்டன் டுப்லஸ்ஸிஸ் தலைமையில் புத்துணர்ச்சியுடன் களமிறங்கிய அந்த அணி மும்பையின் உதவியுடன் 4-வது அணியாக பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று அசத்தியது. அதன்பின் நடந்த எலிமினேட்டர் போட்டியில் லக்னோவை ரஜத் படிதார் 114* ரன்கள் அதிரடியில் தோற்கடித்த அந்த அணி ராஜஸ்தானுக்கு எதிராக நடந்த குவாலிபயர் 2 போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் பரிதாபமாக தோற்று வரலாற்றில் 15-வது முறையாக கோப்பையை வெல்லும் வாய்ப்பை இழந்து வீட்டுக்கு கிளம்பியது.

ஏமாற்றிய விராட்:
இந்த வருடம் பெங்களூருவின் வெளியேற்றத்திற்கு அதன் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலியின் சுமரான பேட்டிங் முக்கிய காரணமாகும். ஏனெனில் ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள் அடித்த பேட்ஸ்மேன் என்ற சாதனை படைத்துள்ள அவர் 16 போட்டிகளில் வெறும் 341 ரன்களை 22.73 என்ற சுமாரான சராசரியில் 115.99 என்ற மோசமான ஸ்டிரைக் ரேட்டில் மட்டுமே எடுத்தார். மேலும் வரலாற்றிலேயே முதல் முறையாக இந்த வருடம் 3 முறை கோல்டன் டக் அவுட்டான அவர் குவாலிபயர் 2 போட்டியில் வெறும் 7 (8) ரன்களை மட்டுமே எடுத்து மீண்டும் ஒரு நாக் – அவுட் போட்டியில் ஏமாற்றினார்.
இத்தனைக்கும் கடந்த 2013 – 2021 வரை கேப்டனாக அந்த அணியை வழிநடத்தி முழுமூச்சுடன் முதல் கோப்பையை வெல்ல போராடிய போதிலும் தோல்வியடைந்த அவர் “விராட் கோலி கேப்டனாக இருக்கும் வரை கோப்பையை வெல்ல முடியாது” என்பது போன்ற விமர்சனங்களை சந்தித்த காரணத்தால் 2021இல் இந்திய கேப்டன் பதவியில் இருந்து விலகிய போது பெங்களூரு கேப்டன் பதவியையும் ராஜினாமா செய்தார். மேலும் கடைசியாக கடந்த 2019இல் சதமடித்த அவர் அதன்பின் டெஸ்ட், ஒருநாள், டி20 மற்றும் ஐபிஎல் என கடந்த 3 வருடங்களாக 100க்கும் மேற்பட்ட போட்டிகளில் சதமடிக்க முடியாமல் திணறி வந்தார். அதனால் கேப்டன்ஷிப் சுமையின்றி சுதந்திர பறவையாக இந்த ஐபிஎல் தொடரில் முதல் முறையாக விளையாடிய அவர் ஃபார்முக்கு திரும்பி எதிரணிகளை வெளுத்து வாங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

பிரேக் எடுங்க:
ஆனால் முன்பை விட இரு மடங்கு மோசமாக பேட்டிங் செய்த அவரின் ஆட்டத்திலும் உடலிலும் முகத்திலும் ஓடிஓடி ஏற்பட்ட களைப்பு தெளிவாக தெரிந்தது. அதனால் உடனடியாக ஐபிஎல் தொடரை விட்டு வெளியேறி 2 – 3 மாதங்கள் ஓய்வெடுத்து புத்துணர்ச்சியுடன் பார்முக்கு திரும்பும் முடிவை எடுக்குமாறு ரவி சாஸ்திரி போன்ற முன்னாள் வீரர்கள் கேட்டுக்கொண்டனர். ஆனால் விளையாடினால் தானே பார்முக்கு திரும்ப முடியும் என்று தெரிவித்த அவர் விமர்சனத்திற்கு பின்வாங்காமல் தொடர்ந்து விளையாடிய போதிலும் இறுதி வரை எந்த மாற்றமும் பலனும் கிடைக்கவில்லை. இந்நிலையில் சில காலங்கள் விராட் கோலி தனது பேட்டை பையில் வைத்துவிட்டு ஓய்வெடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டதாக முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் அவரை அறிவுறுத்தியுள்ளார்.
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இது அவர் தனது பேட்டை பையில் பேக்கிங் செய்து விட்டு குடும்பத்துடன் அமர்ந்து மகிழ்ச்சியாக இருக்க வேண்டிய தருணம். அதற்காக கிரிக்கெட், விளம்பரங்கள் போன்றவற்றை தவிர்த்து விட்டு அவர் எங்கு செல்வார் என்று எனக்கு தெரியாது. ஆனால் ஒரு சில வாரங்கள் அவை அனைத்தையும் ஒதுக்கி வைத்துவிட்டு ஓய்வெடுத்து புத்துணர்ச்சி அடைந்தபின் பேட்டை கையில் எடுக்க வேண்டும். அவரை போன்ற ஒரு புகழ்பெற்ற வீரருக்கு இது எளிதான தருணமல்ல. 2 – 3 வருடங்களுக்கு முன்பு களத்துக்கு வந்தால் விராட் கோலி சதமடிப்பார் என்ற நிலை இருந்தது. ஆனால் களமிறங்கும் போதெல்லாம் சதமடிப்பார் என்ற அற்புதமான நிலைமையை அவர் கடந்து வந்து விட்டார்”

“இப்போது தடுமாறுவதும் வாழ்க்கையின் ஒரு அங்கமே. உங்கள் வாழ்க்கையின் அனைத்து தருணங்களும் எளிதாகவே அமையாது. அவருக்கு நிம்மதி பெருமூச்சு தேவைப்படுகிறது. அவருக்கு விளையாட்டிலிருந்து சற்று இடைவெளி தேவைப்படுகிறது. எனவே உங்கள் குடும்பத்தினருடன் விமானத்தில் இங்கிலாந்து போன்ற நாடுகளுக்கு சென்று புத்துணர்ச்சி அடைந்தபின் மீண்டும் பந்துகளை அடிக்கத் தொடங்குங்கள்” என்று கூறினார்.
இதையும் படிங்க : அந்த 3 இந்திய வீரர்கள் வருங்கால அம்பயர்களானால் தீர்ப்பு சரியா கொடுப்பாங்க – சைமன் டௌஃபல்
ஐபிஎல் 2022 தொடரில் பெங்களூரு வெளியேறியுள்ளதால் தற்போது வீட்டுக்கு திரும்பியுள்ள விராட் கோலி வரும் ஜூன் 9 – 19 வரை சொந்த மண்ணில் இந்தியா பங்கேற்கும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஓய்வு எடுக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



