2022 டி20 உ.கோ’யில் சுமாரான பார்மில் களமிறங்கப் போகும் மோசமான கனவு 11 பேர் அணி – வித்யாச பதிவு

Finch
- Advertisement -

சர்வதேச டி20 கிரிக்கெட்டின் சாம்பியனை தீர்மானிக்கும் ஐசிசி டி20 உலகக் கோப்பை வரும் அக்டோபர் 16 முதல் நவம்பர் 13 வரை ஆஸ்திரேலியாவில் கோலாகலமாக நடைபெறுகிறது. இத்தொடரில் விளையாடுவதற்காக அந்தந்த நாடுகள் கடந்த ஒரு வருடமாக பங்கேற்ற இருதரப்பு தொடர்களில் சோதனைகளை நடத்தி அதில் நல்ல பார்மில் இருக்கும் தரமான வீரர்களை தேர்வு செய்துள்ளது. இருப்பினும் உலகக் கோப்பை உட்பட எந்த கிரிக்கெட் போட்டியாக இருந்தாலும் தரம், திறமை என்பதைத் தாண்டி அந்த சமயத்தில் ஒரு வீரர் எந்தளவுக்கு பார்மில் இருக்கிறார் என்பதே வெற்றியை தீர்மானிக்கும்.

ICC T20 World Cup

- Advertisement -

ஆனால் சில வீரர்கள் ஏற்கனவே சிறப்பாக செயல்பட்டு நல்ல பெயரையும் நிலையான இடத்தையும் பிடித்திருப்பார்கள் என்பதால் சுமாரான பார்மில் இருந்தாலும் களமிறங்கி விளையாடுவார்கள். அது போன்ற வீரர்கள் பெரும்பாலும் வெற்றிக்கு உதவாமல் சுமாராகவே செயல்படுவார்கள். அந்த வகையில் இந்த உலக கோப்பையில் சுமாரான ஃபார்மில் இருந்தாலும் முதன்மை வீரர்களாக இருப்பதால் களமிறங்க காத்திருக்கும் சிறந்த 11 பேர் கொண்ட மோசமான கனவு அணியை பற்றி பார்ப்போம்:

1. ஆரோன் பின்ச் (கேப்டன்): அதிரடி தொடக்க வீரரான இவர் 2021இல் முதல் முறையாக ஆஸ்திரேலியாவுக்கு டி20 உலகக் கோப்பையை வென்று இந்த வருடம் சொந்த மண்ணில் கேப்டனாக கோப்பையை தக்க வைக்க களமிறங்குகிறார். ஆனால் சமீப காலங்களாகவே சுமாரான பார்மில் ரன்கள் குவிக்க திண்டாடும் இவர் 35 வயதிலேயே கடந்த மாதம் ஒருநாள் கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றார்.

Finch

இருப்பினும் உலகக் கோப்பையை வென்ற கேப்டன் என்ற கௌரவத்தால் இந்த தொடரில் விளையாடும் இவர் சமீபத்தில் நடந்த இந்தியாவுக்கு எதிரான தொடரில் 3 போட்டிகளில் வெறும் 60 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

- Advertisement -

2. தெம்பா பவுமா: தொடக்க வீரரான இவர் தென் ஆப்பிரிக்காவின் கேப்டனாக களமிறங்க காத்திருக்கும் நிலையில் நடைபெற்று முடிந்த இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் 3 போட்டிகளிலும் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் அந்நாட்டில் கடுமையான விமர்சனங்களை சந்தித்துள்ள இவர் கேப்டனாக அறிவிக்கப்பட்டு விட்டதால் நிச்சயம் சுமாரான பார்மல் களமிறங்கப் போகிறார்.

Bavuma

3. ஷாகிப் அல் ஹசன்: வங்கதேசத்தின் மிகச் சிறந்த ஆல்-ரவுண்டரான இவர் அந்த அணி வெற்றி பெறுவதற்கு சிறப்பாக செயல்பட்டாக வேண்டியுள்ளது. ஆனால் நடைபெற்று முடிந்த ஆசிய கோப்பையில் வெறும் 35 ரன்களை மட்டுமே எடுத்த இவர் பேட்டிங்கில் மோசமான பார்மில் தவித்தாலும் கேப்டனாக இந்த உலகக் கோப்பையில் வங்கதேசத்தை வழிநடத்த களமிறங்க உள்ளார்.

- Advertisement -

4. கிளன் மேக்ஸ்வெல்: அதிரடி ஆல்-ரவுண்டரான இவர் ஆஸ்திரேலியா சொந்த மண்ணில் கோப்பையை தக்க வைக்க சிறப்பாக செயல்பட வேண்டியது அவசியமாகிறது. ஆனால் கடைசி 6 இன்னிங்சில் முறையே 1, 0, 6, 0, 1, 8 என இரட்டை இலக்க ரன்களை கூட எட்ட முடியாமல் தவிக்கும் இவர் படுமோசமான பார்மில் திண்டாடினாலும் துருப்புச்சீட்டு வீரராக கருதப்படுவதால் நிச்சயம் களமிறங்க உள்ளார்.

Maxwell

5. குஷ்தில் ஷா: பினிசிங் செய்து கொடுப்பார் என்று பாகிஸ்தான் நம்பிக் கொண்டிருக்கும் இவர் சமீபத்திய ஆசிய கோப்பை உட்பட பெரும்பாலான போட்டிகளில் தோல்வியை பரிசளித்து வருகிறார். குறிப்பாக இங்கிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் நடந்த டி20 தொடரில் 5 போட்டிகளில் 63 ரன்களை மட்டுமே எடுத்த இவரால் பாகிஸ்தான் மிடில் ஆர்டர் தடுமாறினாலும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டதால் இந்த உலக கோப்பையில் களமிறங்க உள்ளார்.

- Advertisement -

6. ஆசிப் அலி: சோயப் மாலிக்கை கழற்றிடிவிட்டு இவருக்கு பாகிஸ்தான் நிர்வாகம் வாய்ப்பளித்துள்ள நிலையில் இவரும் நடைபெற்று முடிந்த இங்கிலாந்து டி20 தொடரில் சொந்த மண்ணில் 4 போட்டிகளில் 34 ரன்களை எடுத்து தோல்விக்கு காரணமாகும் வகையில் செயல்பட்டார். நியூசிலாந்தில் தற்போது நடைபெற்று வரும் முத்தரப்பு தொடரிலும் 3 போட்டியில் வெறும் 29 ரன்களை மட்டுமே எடுத்த இவரும் சுமாரான பார்மல் தவிக்கிறார்.

Mohammad-Nabi

7. முகமத் நபி: ஆப்கானிஸ்தானின் ஆல்-ரவுண்டரான இவர் அந்நாட்டின் ஜாம்பவனாக போற்றப்படும் நிலையில் சமீபத்திய ஆசிய கோப்பையில் 4 இன்னிங்சில் வெறும் 16 ரன்கள் மட்டுமே எடுத்தார். அதேப்போல் பந்து வீச்சிலும் பழைய பன்னீர்செல்வமாக அல்லாமல் தடுமாறும் இவர் கேப்டனாக இருப்பதால் நிச்சயம் உலக கோப்பையில் களமிறங்கப் போகிறார்.

8. ஹர்ஷல் பட்டேல்: சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரு காலண்டர் வருடத்தில் அதிக ரன்கள் மற்றும் சிக்சர்களை கொடுத்த ரன் மெஷின் பவுலராக மோசமான உலக சாதனைகளை படைத்துள்ள இவர் பும்ரா விலகியதாலும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டதாலும் இந்த உலகக்கோப்பையில் முதன்மை பவுலராக களமிறங்கி இந்தியாவுக்கு பின்னடைவை ஏற்படுத்த காத்திருக்கிறார்.

Chahal

9. யுஸ்வேந்திர சஹால்: கடந்த உலக கோப்பையில் அதிரடியாக கழற்றி விடப்பட்ட இவர் 2022 ஐபிஎல் தொடரில் ஊதா கோப்பையை வென்று கம்பேக் கொடுத்து இந்த உலக கோப்பையில் தேர்வாகியுள்ளார்.

இருப்பினும் சமீபத்திய ஆசிய கோப்பையில் வெறும் 3 விக்கெட்டுகள் மட்டுமே எடுத்த இவர் ஆஸ்திரேலிய தொடரில் 2 விக்கெட்களை 9.12 என்ற எக்கனாமியில் வீசி மோசமான பார்மில் இருக்கிறேன் என்பதைக் காட்டினார். ஆனாலும் முதன்மை சுழல்பந்து வீச்சாளர் என்ற பெயருடன் இந்த உலக கோப்பையில் இந்தியாவுக்காக விளையாட உள்ளார்.

Rahman

10. முஷ்தபிசூர் ரகுமான்: இளம் நம்பிக்கை நட்சத்திரமான இவர் ஆசிய கோப்பையில் 2 போட்டியில் வெறும் 1 விக்கெட் மட்டுமே எடுத்த நிலையில் நடைபெற்று வரும் நியூசிலாந்து முத்தரப்பு தொடரிலும் சுமாராகவே செயல்பட்டு வருகிறார். இருப்பினும் முதன்மை வேகப்பந்து வீச்சாளர் என்பதால் வங்கதேசத்துக்காக இவர் களமிறங்க உள்ளார்.

11. முகமத் ஹஸ்னைன்: இங்கிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் நடந்த டி20 தொடரில் 4 விக்கெட்டுகளை மட்டும் எடுத்த இவரும் கச்சிதமாக பந்து வீச முடியாமல் ரன்களை வாரி வழங்குகிறார். இருப்பினும் ஷாஹீன் அப்ரிடி, ஹரிஷ் ரவூப் ஆகியோரைக் கொண்ட பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சு கூட்டணியில் விளையாடுவதற்காக அறிவிக்கப்பட்டுள்ள இவரும் சுமாரான பார்மில் இருந்தும் களமிறங்க தயாராகியுள்ளார்.

Advertisement