தல தோனியின் வழியில் நானும் அந்த முடிவினை எடுத்துள்ளேன் – வாய் ஜாலம் காட்டிய ரியான் பாரக் (கலாய்க்கும் ரசிகர்கள்)

MS Dhoni Riyan Parag
- Advertisement -

இந்தியாவின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஐபிஎல் தொடரின் 16வது சீசன் வரும் 2023ஆம் ஆண்டு கோடைகாலத்தில் இந்தியாவிலேயே நடைபெறுகிறது. இத்தொடருக்கான வீரர்கள் ஏலம் வரும் டிசம்பர் 23ஆம் தேதியன்று கொச்சியில் நடைபெறும் நிலையில் அதற்கு முன்பாக அனைத்து அணிகளும் தாங்கள் தக்க வைத்த மற்றும் விடுவித்த கிரிக்கெட் வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அந்த வரிசையில் 2008க்குப்பின் இந்த வருடம் சஞ்சு சாம்சன் தலைமையில் அசத்தலாக செயல்பட்டு ஃபைனலுக்கு சென்று கோப்பையை தவற விட்ட ராஜஸ்தான் அடுத்த வருடம் அதை மீண்டும் முத்தமிடுவதற்காக ஜோஸ் பட்லர் உள்ளிட்ட முக்கிய வீரர்களை தக்க வைத்துள்ளது.

அதே சமயம் டார்ல் மிட்சேல் போன்ற சுமாராக செயல்பட்ட வீரர்களை விடுவித்துள்ள அந்த அணி நிர்வாகம் இளம் வீரர் ரியன் பராக்கை மீண்டும் தக்க வைத்துள்ளது ரசிகர்களுக்கு ஆச்சரியமாக அமைந்துள்ளது. ஏனெனில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த இவர் இந்த வருடம் ஏற்கனவே 3.80 கோடிக்கு தக்க வைக்கப்பட்ட நிலையில் 14 இன்னிங்ஸில் வெறும் 183 ரன்களை 16.64 என்ற மோசமான சராசரி எடுத்து சுமாராகவே செயல்பட்டார். அத்துடன் 2019 முதல் 160, 86, 93, 183 என இப்போது வரை களமிறங்கிய எந்த சீசனிலுமே அவர் சிறப்பாக செயல்பட்டதில்லை.

- Advertisement -

வாய் ஜாலம்:
ஆனால் 2019 முதல் சீசனிலேயே ஒரு போட்டியில் 50 ரன்களை விளாசி வெற்றி பெற வைத்த இவர் ஐபிஎல் வரலாற்றில் இளம் வயதில் அரை சதமடித்த பேட்ஸ்மேன் என்ற சாதனை படைத்தார். அந்த ஒரு இன்னிங்ஸால் மயங்கை ராஜஸ்தான் நிர்வாகம் அவரிடம் ஏதோ திறமை இருப்பதாக நினைத்து தொடர்ந்து பெரிய தொகைக்கு தக்க வைத்து வருகிறது. ஆனால் சிறுபிள்ளைத்தனமாக அந்த வாய்ப்புகளை வீணடித்து வரும் அவர் 6, 7 ஆகிய கடினமான இடங்களில் களமிறங்கி 4 வருடங்களில் 2 அரை சதங்கள் மட்டுமே அடித்துள்ளார்.

அதை விட ஒவ்வொரு போட்டி முடிவிலும் என்னமோ பெரிதாக சாதித்தது போல் விராட் கோலி போல திமிராக ட்வீட் போடுவது, தவறான கேட்ச் பிடித்தும் என்னமோ நடுவர் வேண்டுமென்றே அவுட் கொடுக்காதது போல் அதிருப்தியை வெளிப்படுத்தியது, இப்படி நடந்து கொள்ளக் கூடாது என்று அறிவுரை வழங்கிய மேத்யூ ஹெய்டன் போன்ற ஜாம்பவான்களை மறைமுகமாக கலாய்த்தது என இந்த வருடம் அவர் செய்த வேலைகளை ஏராளமான ரசிகர்கள் விமர்சித்து கிண்டலடித்தார்கள். இந்நிலையில் 6, 7 ஆகிய இடங்களில் விளையாடி ஏராளமான போட்டிகளை வெற்றிகரமாக குவித்து வரலாற்றின் மகத்தான ஜாம்பவான் பினிஷராக போற்றப்படும் தோனியின் இடத்தில் விளையாடும் தாம் அவரைப் போலவே தமது அணிக்கு பினிஷிங் செய்யும் வேலையை துவங்கியுள்ளதாக ரியன் பராக் கூறியுள்ளார்.

- Advertisement -

இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “டி20 கிரிக்கெட்டில் கடைசி நேரத்தில் களமிறங்கி அதிரடியாக விளையாடுவது மிகவும் கடினமான வேலையாகும். டி20 போட்டிகளில் இருப்பதிலேயே 6, 7 ஆகிய இடங்கள் தான் மிகவும் கடினமாகும். வரலாற்றில் சிலர் மட்டுமே அந்த இடத்தில் அசத்தியுள்ளார்கள். சொல்லப்போனால் வரலாற்றில் எம்எஸ் தோனி மட்டுமே அதில் மாஸ்டராக செயல்பட்டார் என்று நான் சொல்வேன். அவர் செய்ததை தற்போது என்னுடைய ஆரம்பகட்ட கேரியரில் நான் செய்து வருகிறேன்”

“நான் இன்னும் மாஸ்டராக செயல்படவில்லை. ஆனால் அவரை நெருங்கிய செயல்பாடுகளை வெளிப்படுத்துவதாக உணரும் நான் எனது வழியில் விளையாடுகிறேன். வெளியில் இருப்பவர்கள் என்னைப் பற்றி என்ன வேண்டுமானாலும் பேசலாம். ஆனால் என்னுடைய வேலை எவ்வளவு கடினம் என்பதை என்னுடைய அணி நிர்வாகம் புரிந்து கொண்டு என்னை முழுமையாக நம்புகிறது. அணிக்குள் என்ன நடக்கிறது மற்றும் நான் எவ்வாறு செயல்படுகிறேன் என்பதை வெளியில் இருப்பவர்கள் 90% அறிய மாட்டார்கள்”

“அனைவரும் முடிவை மட்டும் பார்த்து விட்டு என்னை மதிப்பிடுகிறார்கள். ஆனால் ராஜஸ்தான் நிர்வாகம் பயிற்சியில் நான் வெளிப்படுத்திய என்னுடைய திறமையை அறிந்து புரிந்துள்ளது. அதனாலேயே அவர்கள் என்னை நம்பி 4 வருடங்கள் வாய்ப்பளித்தார்கள். எனவே இந்த 5வது வருடத்தில் அவர்களது நம்பிக்கை பாத்திரமாக செயல்படுவேன்” என்று கூறினார். ஆனால் 6, 7 ஆகிய இடங்களில் விளையாடுவதால் மட்டும் நீங்கள் தோனியை நெருங்கி ஃபினிஷர் ஆகிவிட முடியாது என்று தெரிவிக்கும் ரசிகர்கள் வாயில் மட்டும் பேசாமல் முதலில் நன்னடத்தையை வெளிப்படுத்தி பேட்டில் பேசுமாறு சமூக வலைதளங்களில் கலாய்க்கிறார்கள்.

Advertisement