முட்டாள்கள் மட்டுமே சச்சினை விராட் கோலியுடன் கம்பேர் பண்ணுவாங்க – காரணத்துடன் விளாசும் முன்னாள் பாக் வீரர்

- Advertisement -

நட்சத்திர முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் 2013இல் ஓய்வு பெற்றாலும் இன்றும் சர்வதேச கிரிக்கெட்டின் பேட்டிங் துறையில் இருக்கும் பெரும்பாலான சாதனைகளை தன்வசம் வைத்துள்ளார். அந்தளவுக்கு 1989இல் தம்முடைய 16 வயது பிஞ்சுக் கால்களுடன் சர்வதேச அரங்கில் அறிமுகமாகி ஆரம்ப காலத்திலேயே வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ் போன்ற தரமான பவுலர்களை எதிர்கொண்ட அவர் நாளடைவில் கிளன் மெக்ராத், ஷேன் வார்னே, முத்தையா முரளிதரன் போன்ற உலகின் அனைத்து டாப் பவுலர்களுக்கு எதிராக சிம்ம சொப்பனமாக செயல்பட்டு 30000க்கும் மேற்பட்ட ரன்களையும் 100 சதங்களையும் விளாசி கோகோகோலா கோப்பை முதல் 2011 உலகக்கோப்பை வரை இந்தியாவின் நிறைய வெற்றிகளில் முக்கிய பங்காற்றினார்.

மேலும் இன்று ரோஹித் சர்மா உட்பட நிறைய வீரர்கள் ஒருநாள் கிரிக்கெட்டில் அசால்டாக அடிக்கும் இரட்டை சதம் ஒரு கட்டத்தில் குதிரை கொம்பாக பார்க்கப்பட்டது. அதை 2010இல் முதல் முறையாக தொட்ட அவர் இந்த உலகிற்கே எப்படி இரட்டை சதத்தை அடிக்க வேண்டும் என்ற கலையை கற்றுக் கொடுத்தார் என்றே சொல்லலாம். அந்த வகையில் எத்தனை வீரர்கள் வந்தாலும் சச்சினுக்கு நிகராக வர முடியாது என்பதே நிதர்சனமாகும். இருப்பினும் வல்லவனுக்கு வல்லவர் வரத்தான் செய்வார் என்ற சொல்லுக்கேற்ப நவீன கிரிக்கெட்டில் சச்சினை மிஞ்சும் அளவுக்கு விராட் கோலி சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

- Advertisement -

முட்டாள்களின் ஒப்பீடு:
குறிப்பாக 2008 அண்டர்-19 உலக கோப்பையை வென்று சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான அவர் 2013இல் ஓய்வு பெற்ற சச்சின் இடத்தில் ரன் மெசினாக உலகின் அனைத்து டாப் பவுலர்களையும் எதிர்கொண்டு 25000+ ரன்களையும் 75 சதங்களையும் அடித்து இந்தியாவின் நிறைய வெற்றிகளில் பங்காற்றி வருகிறார். மேலும் ஒருநாள் கிரிக்கெட்டில் சச்சினை மிஞ்சி வேகமாக 10000 ரன்கள் குவித்துள்ள அவர் 100 சதங்கள் சாதனையும் முறியடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் சச்சினை விட விராட் கோலி சிறந்தவர் என்ற கருத்துக்களை இப்போதுள்ள ரசிகர்கள் முன்வைக்கின்றனர்.

ஆனால் சச்சின் விளையாடிய 90களில் ஜிம்பாப்வே உட்பட அனைத்து அணிகளிலும் நிறைந்திருந்த தரமான பவுலர்களை எதிர்கொண்டார். இருப்பினும் விராட் கோலி விளையாடும் இந்த காலகட்டத்தில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற ஒரு சில அணிகளை தவிர்த்து பெரும்பாலான அணிகளில் தரமான பவுலர்கள் இருப்பதில்லை. அது போக விராட் கோலி விளையாடும் இந்த சமயத்தில் ஒரு இன்னிங்ஸ்க்கு 2 புதிய பந்துகள் போன்ற பேட்டிங்க்கு சாதகமாக இருக்கும் அடிப்படை விதிமுறைகள் சச்சின் விளையாடிய காலத்தில் இல்லை.

- Advertisement -

அதனால் விராட் கோலி மட்டுமல்ல சுப்மன் கில் உட்பட வருங்காலத்தில் அசத்தும் யாரையும் சச்சினுடன் ஒப்பிடுவதில் அர்த்தமில்லை என்ற பதிலடிகளும் காணப்படுகின்றன. இந்நிலையில் நவீன கிரிக்கெட்டில் விராட் கோலி சிறந்தவர் என்றாலும் முட்டாள்கள் மட்டுமே சச்சினுடன் அவரை ஒப்பிடுவார்கள் என முன்னாள் பாகிஸ்தான் வீரர் அக்தர் கடுமையாக விமர்சித்துள்ளார். ஏனெனில் இந்த உலகிலேயே மிகவும் அபாயகரமான பவுலர்களை சச்சின் எதிர்கொண்டு மிகச் சிறப்பாக விளையாடியதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு.

“மிகவும் சிறந்த பேட்ஸ்மேனான சச்சினுடன் முட்டாள்கள் மட்டுமே விராட் கோலியை ஒப்பிடுவார்கள். ஏனெனில் கிரிக்கெட்டில் சச்சின் போல தாக்கத்தை ஏற்படுத்திய பேட்ஸ்மேன்கள் அவருக்கு முன்பும் பின்பும் கிடையாது. அவர் மட்டுமே உச்சமாவார். விராட் கோலி தற்சமயத்தில் மகத்தான பேட்ஸ்மேன் என்பதில் சந்தேகமில்லை. இந்த சமயத்தில் நான் சச்சினுக்காக மிகவும் வருந்துகிறேன். ஏனெனில் அவர் இந்த பூமியில் மிகவும் ஆபத்தானவர்களாக இருந்த பவுலர்களை தம்முடைய காலத்தில் எதிர்கொண்டார்”

இதையும் படிங்க:WTC Final : அவர் தான் விக்கெட் கீப்பர் – ஃபைனலில் களமிறங்கும் தனது இந்திய 11 பேர் அணியை தேர்வு செய்த சுனில் கவாஸ்கர்

“குறிப்பாக 90களின் ஆரம்பத்தில் வாசிம் அக்ரம் மற்றும் வக்கார் யூனிஸ் போன்றவர்களை அவர் எதிர்கொண்டார். மேலும் 90களின் இறுதியில் கிளன் மெக்ராத், ஷேன் வார்னே மற்றும் என்னைப் போன்ற பவுலர்கள் தான் அவருக்கு முன்பே இருந்தோம். இருப்பினும் அவர் என்னை உட்பட அனைத்து பவுலர்களையும் அதிரடியாக எதிர்கொண்டார். எனவே சச்சினை தவிர்த்து யாரும் பெரிதாகவும் சிறந்தவராகவும் இருக்க முடியாது” என்று கூறினார்.

Advertisement