உலக டெஸ்ட் கிரிக்கெட்டின் 2வது சாம்பியனை தீர்மானிக்கும் 2023 ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் மாபெரும் இறுதி போட்டி வரும் ஜூன் 7 முதல் 11 வரை இங்கிலாந்தின் லண்டனில் இருக்கும் புகழ்பெற்ற ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. அதில் லீக் சுற்றின் முடிவில் புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்த ஆஸ்திரேலியா முதல் முறையாக தகுதி பெற்றுள்ள நிலையில் 2019/20, 2020/21 ஆகிய அடுத்தடுத்த வருடங்களில் தங்களது சொந்த மண்ணிலும் சமீபத்திய பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடரிலும் தோற்கடித்த இந்தியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வெல்ல பயிற்சிகளை எடுத்து வருகிறது.

மறுபுறம் ஐசிசி தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் அணியாக இருக்கும் இந்தியா கடந்த ஏற்கனவே ஃபைனலில் விராட் கோலி தலைமையில் நியூசிலாந்திடம் தோல்வியை சந்தித்த நிலையில் இம்முறை லீக் சுற்றின் முடிவில் புள்ளி பட்டியலில் 2வது இடம் பிடித்து ஃபைனலுக்கு வந்துள்ளது. எனவே கடந்த ஃபைனலில் சந்தித்த தோல்வியிலிருந்து பாடத்தை கற்றுக்கொண்டு ரோகித் சர்மா தலைமையில் புத்துணர்ச்சியுடன் களமிறங்கி சமீப காலங்களில் தோற்கடித்தது போலவே இப்போட்டியிலும் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி 2013க்குப்பின் ஐசிசி தொடர்களில் சந்தித்து வரும் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க இந்தியா போராட உள்ளது.
கவாஸ்கர் லெவன்:
பொதுவாக சுழலுக்கு சாதகமான இந்திய மைதானங்களில் விளையாட பழகிய இந்திய அணியினர் ஸ்விங் வேகத்துக்கு சாதகமான இங்கிலாந்து மண்ணில் தடுமாறாமல் வெற்றி காண்பதற்கு நல்ல பயிற்சியும் தரமான 11 வீரர்களுடன் களமிறங்குவது அவசியமாகிறது. அந்த நிலையில் காயத்தால் வெளியேறிய ஜஸ்பிரித் பும்ரா, கேஎல் ராகுல், ரிஷப் பண்ட்க்கு பதில் விளையாடப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் காணப்படுகிறது.

குறிப்பாக தோனியை மிஞ்சி இங்கிலாந்து மண்ணில் சதங்களை அடித்து எதிரணியை தெறிக்க விடும் திறமை கொண்ட ரிசப் பணட்டுக்கு பதிலாக இஷான் கிசான் விக்கெட் கீப்பராக விளையாட வேண்டும் என்று சில கருத்துக்கள் காணப்படுகின்றன. ஆனால் இதுவரை அறிமுகமாகாமல் இந்திய மைதானங்களிலேயே திணறக்கூடிய அவருக்கு பதிலாக அனுபவமிக்க கேஎஸ் பரத் விளையாட வேண்டுமென்ற கோரிக்கைகளும் உள்ளன. அதே போல 4வது பவுலராக சுழலுக்கு சாதகமான ஓவல் மைதானத்தில் அஸ்வின் விளையாடுவாரா அல்லது மழை பெய்வதற்கான வானிலை நிலவினால் ஷார்துல் தாகூர் களமிறங்குவாரா என்ற குழப்பமும் ரசிகர்களிடம் காணப்படுகிறது.
இந்நிலையில் இந்த மாபெரும் ஃபைனலில் களமிறங்கும் தன்னுடைய 11 பேர் இந்திய அணியை முன்னாள் ஜாம்பவான் வீரர் சுனில் கவாஸ்கர் தேர்வு செய்துள்ளார். குறிப்பாக இஷான் கிஷானுக்கு பதிலாக கேஎஸ் பரத்தை தேர்வு செய்துள்ள அவர் வறண்ட வானிலை நிலவினால் அஸ்வின் அல்லது ஈரப்பதமான சூழ்நிலை நிலவினால் ஷார்துல் தாகூர் விளையாட வேண்டுமென்று கூறியுள்ளார். இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “பேட்டிங்கை பற்றி பேசும் போது ரோஹித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் என்னுடைய முதல் 2 வீரர்களாக இருப்பார்கள்”

“3வது இடத்தில் புஜாரா 4வது இடத்தில் விராட் கோலி 5வது இடத்தில் அஜிங்க்ய ரகானே ஆகியோர் இருப்பார்கள். 6வது இடத்தில் தான் சில அக்கறை தேவைப்படுகிறது. அந்த இடத்தில் பரத் அல்லது இசான் ஆகியோர் இருப்பதாக நினைத்துக் கொள்கிறேன். பெரும்பாலானவர்கள் பரத் விளையாடுவார் என்று பேசுகின்றனர். என்னை பொறுத்த வரை சமீபத்திய போட்டிகளில் அவர் விளையாடியதால் நான் 6வது இடத்தில் பரத்தை தேர்வு செய்கிறேன்”
“7வது இடத்தில் ரவீந்திர ஜடேஜா இருப்பார். ஒருவேளை போட்டி நாளன்று தெளிவான வானிலை நிலவினால் 7, 8 ஆகிய 2 இடங்களிலும் ஜடேஜா மற்றும் அஸ்வின் விளையாடலாம். எனவே 9, 10, 11 ஆகிய இடங்களில் முகமது ஷமி, முகமது சிராஜ் மற்றும் ஷார்துல் தாக்கூர் இருக்கலாம்” என்று கூறினார். சுனில் கவாஸ்கரின் ஃபைனல் லெவன்:
இதையும் படிங்க: 2007 பாகிஸ்தானுக்கு எதிரான பவுல் அவுட்டில் அந்த ஐடியாவை தோனிக்கு நான் தான் கொடுத்தேன் – பின்னணியை பகிர்ந்த சேவாக்
ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், செடேஸ்வர் புஜாரா, விராட் கோலி, அஜின்கிய ரகானே, கேஎஸ் பரத் (கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், முகமது ஷமி, முகமது சிராஜ், ஷார்துல் தாகூர்.



