தேசிய விளையாட்டு தினம் 2023 ஸ்பெஷல் : இதுவரை இந்திய கிரிக்கெட்டில் நிகழ்ந்த டாப் 6 சிறந்த தருணங்கள்

Sports Day
- Advertisement -

இந்தியாவில் ஆகஸ்ட் 29ஆம் தேதி தேசிய விளையாட்டு தினம் கொண்டாடப்படுகிறது. ஆங்கிலேயரிடம் அடிமைப்படுவதற்கு முன்பிலிருந்தே விளையாட்டில் ஆர்வம் கொண்ட இந்தியர்கள் 1928ஆம் ஆண்டு ஒலிம்பிக்கில் ஹாக்கி விளையாட்டில் தங்கப் பதக்கம் வெல்லும் அளவுக்கு அந்த காலத்திலிருந்தே திறமையானவர்களாக திகழ்ந்து வருகின்றனர். அதே போல கபில் தேவ் தலைமையில் 1983 உலகக் கோப்பையை இந்திய அணி வென்ற போது கிரிக்கெட் என்றால் என்னவென்றே தெரியாமல் இருந்த மொத்த இந்திய மக்களையும் திரும்பிப் பார்க்க வைத்தது.

அப்போதிருந்து சச்சின், கங்குலி, ட்ராவிட், கும்ப்ளே, தோனி, யுவராஜ் போன்ற பல மகத்தான வீரர்கள் அபாரமாக செயல்பட்டு நிறைய வெற்றிகளை பெற்றுக்கொடுத்ததால் இன்று இந்தியாவில் கிரிக்கெட்டை விளையாட்டையும் தாண்டிய ஒரு மதமாக மக்கள் பார்க்கிறார்கள் என்றே சொல்லலாம். இந்நிலைமையில் 2023ஆம் ஆண்டு சர்வதேச அளவிலான இந்திய கிரிக்கெட்டில் நிகழ்ந்த சிறந்த டாப் தருணங்களை பற்றி பார்ப்போம்:

- Advertisement -

1. வருங்கால நாயகன்: கடந்த ஜனவரியில் நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் ஹைதராபாத்தில் நடைபெற்ற போட்டியில் 208 ரன்கள் குவித்து இந்தியாவின் வெற்றியின் முக்கிய பங்காற்றிய சுப்மன் கில் உலகிலேயே இளம் வயதில் இரட்டை சதமடித்த வீரர் என்ற உலக சாதனை படைத்தார். மேலும் அடுத்தடுத்த மாதங்களில் நியூசிலாந்து டி20 தொடரிலும் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரிலும் சதமடித்த அவர் “ஒரே காலண்டர் வருடத்தில் 3 வகையான கிரெட்டிலும் சதமடித்த முதல் இந்திய தொடக்க வீரர்” என்ற வரலாறும் படைத்து வருங்கால நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்துள்ளார்.

2. பார்டர் – கவாஸ்கர் கோப்பை: ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கடந்த பிப்ரவரி, மார்ச் மாதங்களில் சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை 2 – 1 (4) என்ற கணக்கில் இந்தியா வென்றது. குறிப்பாக கிரிக்கெட்டின் அசுரனாக கருதப்படும் ஆஸ்திரேலியாவை தொடர்ச்சியாக மண்ணை கவ்வ வைத்து 2017, 2018/19, 2020/21, 2023* ஆகிய 4 அடுத்தடுத்த பார்டர் – கவாஸ்கர் கோப்பைகளை வென்ற முதல் அணி என்ற சாதனையும் இந்தியா படைத்தது.

- Advertisement -

3. ஓப்பனிங் பேட்ஸ்மேன்: உள்ளூர் மற்றும் ஐபிஎல் தொடரில் அசத்தியதால் ஜூலை மாதம் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் நடைபெற்ற தொடரில் அறிமுகமான யசஸ்வி ஜெய்ஸ்வால் முதல் போட்டியிலேயே 171 ரன்கள் குவித்து இந்தியாவின் இன்னிங்ஸ் வெற்றியில் முக்கிய பங்காற்றினார். அதன் வாயிலாக 90 வருட இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டில் தம்முடைய அறிமுக போட்டியிலேயே அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த இந்திய வீரர் என்ற சௌரவ் கங்குலியின் சாதனையையும் தகர்த்த அவர் வருங்கால நம்பிக்கை நட்சத்திரமாக அவதரித்துள்ளார்.

4. இளம் காளை திலக்: வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான டி20 தொடரில் அறிமுகமாகி சவாலான மைதானங்களில் இதர வீரர்கள் தடுமாறிய போது இந்தியாவின் வெற்றிக்கு போராடிய திலக் வர்மா சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 20 வயதில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த வீரர் என்ற ரோகித் சர்மாவின் சரித்திர சாதனையை உடைத்து வருங்கால காளையாக உருவெடுத்துள்ளார்.

- Advertisement -

5. லெஜெண்ட் அஸ்வின்: அதே வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் நடந்த டெஸ்ட் தொடரில் அசத்திய ரவிச்சந்திரன் அஸ்வின் மொத்தம் 712 விக்கெட்களுடன் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக விக்கெட்களை எடுத்த ஆஃப் ஸ்பின்னர் என்ற ஹர்பஜன் சிங் (711) சாதனையை உடைத்து புதிய சரித்திரம் படைத்து தமிழகத்திற்கும் தமிழக ரசிகர்களுக்கும் மற்றுமொரு பெருமை சேர்த்தார்.

6. பும்ராவின் கம்பேக்: இந்திய அணியின் கருப்பு குதிரையான ஜஸ்பிரித் பும்ரா 11 மாதங்கள் கழித்து ஒரு வழியாக காயத்திலிருந்து குணமடைந்து அயர்லாந்து டி20 தொடரில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்தியாவை வழி நடத்தும் முதல் பவுலர் என்ற மாபெரும் சாதனையுடன் களமிறங்கினார். அதில் அறிமுக டி20 போட்டியிலேயே ஆட்டநாயகன் விருது பெற்ற முதல் இந்திய கேப்டன் என்ற சாதனையும் படைத்த அவர் 2023 உலகக் கோப்பைக்கு முன்பாக முழுமையான கம்பேக் கொடுத்துள்ளார்.

இதையும் படிங்க:2023 ஆசிய கோப்பையில் வெல்லப்போவது இந்தியாவா – பாகிஸ்தானா? முகமது ரிஸ்வான் கொடுத்த நேர்மையான பதில் இதோ

அப்படி சர்வதேச அளவில் நிறைய இந்திய வீரர்கள் சாதனைகள் படைத்த நிலையில் இந்தியாவின் மகத்தான முன்னாள் கேப்டனான தல தோனி ஐபிஎல் தொடரில் சென்னைக்கு 5வது கோப்பையை வென்று கொடுத்ததும் மறக்க முடியாத சிறந்த தருணமாக அமைந்தது.

Advertisement