
ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடர் செப்டம்பர் ஒன்பதாம் தேதி ஐக்கிய அரபு நாடுகளில் துவங்குகிறது. இம்முறை டி20 தொடராக நடைபெறும் அத்தொடரில் இந்திய அணி குரூப் ஏ பிரிவில் இடம் பிடித்துள்ளது. அந்தப் பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், அமீரகம் மற்றும் ஓமன் அணிகள் இடம் பிடித்துள்ளன. அதில் அதிக வெற்றிகளைப் பெறும் அணிகள் சூப்பர் 6 சுற்றுக்கு தகுதி பெறும்.
அத்தொடரில் உலகின் நம்பர் ஒன் டி20 அணியாக ஜொலிக்கும் இந்தியா சிறப்பாக விளையாடி கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ஆசியக் கோப்பையில் இந்தியா போன்ற நட்சத்திர வீரர்களைக் கொண்ட பெரிய அணிக்கு எதிராக விளையாட ஆர்வத்துடன் காத்திருப்பதாக ஓமன் கேப்டன் ஜடின்டர் சிங் தெரிவித்துள்ளார். மேலும் சூரியகுமார் யாதவ் போன்ற நட்சத்திர வீரர்களை சந்திக்க காத்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்தியா, பாகிஸ்தான் போன்ற பெரிய அணிகளுக்கு எதிராக விளையாடுவது தங்களுடைய கனவு நிஜமான தருணம் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “குரூப் ஏ பிரிவில் இருப்பது மிகப்பெரிய சவால். ஆனால் அது ஆசிர்வாதமாகவும் இருக்கும். ஏனெனில் இந்தியா, பாகிஸ்தான் போன்ற அணிகளுக்கு எதிராக விளையாடும் போட்டிகள் எளிதில் கிடைக்காது”
“அது போன்ற சவால்கள் தான் உங்களை நல்ல கிரிக்கெட்டராக வளர உதவும். தனிப்பட்ட முறையில் நான் சூரியகுமார் யாதவ், சுப்மன் கில், சாய்ம் ஆயுப், பஃகார் ஜமான் வீரர்களை சந்தித்து பேசுவதற்காக எதிர்நோக்கியுள்ளேன். ஏனெனில் அவர்களுடைய மனநிலை மற்றும் தயாராகும் முறைகளில் நீங்கள் நிறைய கற்றுக்கொள்ளலாம். எங்களுடைய இளம் வீரர்கள் அவர்களுடன் களத்தில் விளையாடுவதை உத்வேகமாக எடுத்துக் கொள்வார்கள் என்று சொல்வேன்”
“அபிஷேக் ஷர்மா, திலக் வர்மா ஆகியோருக்கு எதிராக நான் விளையாடியுள்ளேன். அவர்கள் இருவருமே திறமை மற்றும் பணிவுமிக்கவர்கள். கடந்த 2024 எமெர்ஜிங் ஆசியக் கோப்பையில் விளையாடிய போது அவர்களிடம் விளையாட்டு, அனுபவம், வெவ்வேறு சூழல்களில் விளையாடுவது, மனநிலை, தயாராகும் முறைகள் குறித்து பேசினேன்”
இதையும் படிங்க: அந்த சீசனில் மட்டும் இந்தியாவுக்காக ஐபிஎல்லை.. கமின்ஸ், ஸ்டார்க் மாதிரி பும்ரா தியாகம் பண்ணனும்.. பரத் அருண்
“இம்முறை அதை விடப் பெரிய இடத்தில் அவர்களை மீண்டும் சந்திக்க எதிர்நோக்கியுள்ளேன். ஒருநாள் இந்தியா மற்றும் பாகிஸ்தான் போன்ற பெரிய அணிகளுக்கு எதிராக நான் கேப்டனாக செயல்படுவேன் என்று நினைத்ததில்லை. உலக கிரிக்கெட்டில் நட்சத்திர வீரர்களாக இருப்பவர்களுடன் களத்தை பகிர்ந்து கொள்வது எங்களுக்கு கனவு நிஜமான தருணமாக இருக்கும். அது எனக்கு பொறுப்பாகவும் மற்றும் எங்கள் அணிக்கு உத்வேகமாகவும் இருக்கும்” என்று கூறினார். இதைத் தொடர்ந்து செப்டம்பர் 12, 19 தேதிகளில் பாகிஸ்தான், இந்தியா அணிகளை ஓமன் எதிர்கொள்வது குறிப்பிடத்தக்கது.