230 ரன்ஸ்.. சிம்ம சொப்பனமாக செயல்பட்ட போப்.. இந்திய மண்ணில் மாபெரும் சாதனை.. இங்கிலாந்து சவாலான இலக்கு

- Advertisement -

ஹைதராபாத் நகரில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதி வரும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. ஜனவரி 25ஆம் தேதி துவங்கிய 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்து 246 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் பென் ஸ்டோக்ஸ் போராடி 70 ரன்கள் எடுத்தார்.

இந்திய அணியில் அதிகபட்சமாக ரவிச்சந்திரன் மற்றும் ரவீந்திர ஜடேஜா தலா 3 விக்கெட்டுகள் எடுத்தனர். அதைத்தொடர்ந்து களமிறங்கிய இந்தியா தங்களுடைய சொந்த மண்ணில் நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 436 ரன்கள் குவித்து அசத்தியது. அதிகபட்சமாக அதிரடியாக விளையாடிய ஜெய்ஸ்வால் 80 (76), கேஎல் ராகுல் 86, ரவீந்திர ஜடேஜா 87, அக்சர் படேல் 44, கேஎஸ் பரத் 41 ரன்கள் எடுத்தனர்.

- Advertisement -

போப் சாதனை:
இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக ஜோ ரூட் 4 விக்கெட்டுகள் எடுத்தார். அதைத்தொடர்ந்து 190 ரன்கள் பின்தங்கிய நிலையில் களமிறங்கிய இங்கிலாந்துக்கு ஜாக் கிராவ்லி 31, பென் டுக்கெட் 47, ஜோ ரூட் 2, ஜானி பேர்ஸ்டோ 10, பென் ஸ்டோக்ஸ் 6 என முக்கிய பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி பெரிய ஏமாற்றத்தை கொடுத்தனர். இருப்பினும் மறுபுறம் தொடர்ந்து அசத்திய ஓலி போப் சதமடித்து இந்தியாவுக்கு சவாலை கொடுத்தார்.

அவருடன் சேர்ந்து விளையாடி இன்னிங்ஸ் தோல்வியை தவிர்த்த பென் ஃபோக்ஸ் முக்கியமான 34 ரன்கள் எடுத்து அவுட்டானார். அதே போல கடைசியில் ரீகன் அகமது 28, டாம் ஹார்ட்லி 34 ரன்கள் எடுத்து இந்தியாவுக்கு பெரிய தொல்லையை கொடுத்து ஒரு வழியாக ஆட்டமிழந்தனர். ஆனால் அவர்களுடன் ஜோடி சேர்ந்து மறுபுறம் இந்தியாவுக்கு சிம்ம சொப்பனமாக மாறிய ஓலி போப் இரட்டை சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 21 பவுண்டரியுடன் 196 ரன்களில் பும்ரா வேகத்தில் போல்டானார்.

- Advertisement -

இதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய மண்ணில் ஒரு போட்டியின் 2வது இன்னிங்ஸில் அதிக ரன்கள் (196) அடித்த இங்கிலாந்து வீரர் என்ற மாபெரும் சாதனையை ஓலி போப் படைத்துள்ளார். இதற்கு முன் கடந்த 2012ஆம் ஆண்டு அகமதாபாத் நகரில் நடந்த டெஸ்ட் போட்டியில் முன்னாள் கேப்டன் அலெக்ஸ்டர் குக் 176 ரன்கள் அடித்ததே முந்தைய சாதனையாகும்.

இதையும் படிங்க: விராட் கோலி தனது கேரியரில் ஒருமுறை கூட அங்க போனதில்ல.. எல்லாரும் அவர பாத்து கத்துக்கணும்.. ரோஹித் பாராட்டு

இறுதியில் அவருடைய போராட்டமான பேட்டிங்கால் தப்பிய இங்கிலாந்து 420 ரன்கள் குவித்து ஆல் அவுட்டானது. இந்தியா சார்பில் அதிகபட்சமாக பும்ரா 4, ரவிச்சந்திரன் அஸ்வின் 3 விக்கெட்டுகளை எடுத்தனர். இதனால் இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெறுவதற்கு 231 என்ற சவாலான இலக்கை நிர்ணயத்துள்ளது. கடைசி 2 நாட்களில் மைதானம் எப்படியும் சுழலுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் இது இந்தியாவுக்கு கடினமாகவே பார்க்கப்படுகிறது.

Advertisement