93/6 டூ 204/8.. 18 சிக்ஸ்.. வெ.இ உலக சாதனை போராட்டம் வீண்.. நியூஸிலாந்து கடைசி பந்தில் வெற்றி

WI vs NZ 2
- Advertisement -

நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அங்கு 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றது. அத்தொடரின் முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் 7 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. அடுத்ததாக 2வது போட்டி நவம்பர் 6ஆம் தேதி ஆக்லாந்து மைதானத்தில் இந்திய நேரப்படி முற்பகல் 11.45 மணிக்கு நடைபெற்றது.

அப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய நியூஸிலாந்து 20 ஓவரில் 207/5 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக மிடில் ஆர்டரில் வெஸ்ட் இண்டீஸ் பவுலர்களை முரட்டுத்தனமாக அடித்த மார்க் சேப்மன் 6 பவுண்டரி 7 சிக்ஸருடன் 78 (28) ரன்கள் குவித்து அசத்தினார்.

- Advertisement -

நியூஸிலாந்து அசத்தல்:

அவருடன் டிம் ராபின்சன் 39 (25), டேரில் மிட்சேல் 28* (14), கேப்டன் மிட்சேல் சான்ட்னர் 18* (8), டேவோன் கான்வே 16, ரச்சின் ரவீந்திரா 11, மைக்கேல் ப்ரேவிஸ் 5 ரன்கள் எடுத்தனர். வெஸ்ட் இண்டீஸ்க்கு அதிகபட்சமாக ரோஸ்டன் சேஸ் 2 விக்கெட்டுகள் எடுத்தார். அடுத்ததாக விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு ப்ரண்டன் கிங் ஆரம்பத்திலேயே டக் அவுட்டானார்.

மறுபுறம் அதிரடி காட்டிய அலிக் அதனாஸ் 33 (25) ரன்களில் அவுட்டானார். எதிர்புறம் நிதானமாக விளையாடிய கேப்டன் சாய் ஹோப் 24 (26) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தையே கொடுத்தனர். மிடில் ஆர்டரில் ஆகிம் அகஸ்தி 7, ரோஸ்டன் சேஸ் 6, ஜேசன் ஹோல்டர் 16 ரன்களில் அவுட்டானதால் 93/6 என வெஸ்ட் இண்டீஸ் திணறியது.

- Advertisement -

உலக சாதனை போராட்டம் வீண்:

அதனால் தோல்வியின் பிடியில் சிக்கிய அந்த அணிக்கு ரோவ்மன் போவல் நியூசிலாந்து பவுலர்களை சிக்ஸர்களாக அடித்தார். அவருடன் ஜோடி சேர்ந்த ரொமாரியா செபார்ட் 62 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து ஒரு பவுண்டரி 4 சிக்ஸருடன் 34 (16) ரன்கள் குவித்து போராடி அவுட்டானார். அடுத்து வந்த மேத்தியூ போர்ட்ஜ் தமது பங்கிற்கு அதிரடி காட்டியதால் வெற்றியை நெருங்கிய வெஸ்ட் இண்டீஸ்க்கு கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்டது.

ஜெமிசன் வீசிய அந்த ஓவரில் போர்ட்ஜ் 2 பவுண்டரி அடித்தார். ஆனால் 4வது பந்தில் போவெல் 1 பவுண்டரி 6 சிக்ஸருடன் 45 (16) ரன்களில் அவுட்டாகி சென்றார். கடைசி 2 பந்தில் வெஸ்ட் இண்டீஸ் 2 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதனால் போர்ட்ஜ் 2 பவுண்டரி 2 சிக்ஸருடன் 29* (12) ரன்கள் குவித்தும் வெஸ்ட் இண்டீஸை 20 ஓவரில் 204/8 ரன்களுக்கு சுருட்டிய நியூஸிலாந்து 3 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.

இதையும் படிங்க: 4வது டி20யில் இந்தியா 167 ரன்ஸ்.. ரோஹித்தை முந்திய சூரியகுமார் வெளிநாடுகளில் வரலாற்று சாதனை

அதனால் 1 – 1* (5) என தொடரை சமன் செய்த நியூசிலாந்துக்கு அதிகபட்சமாக கேப்டன் மிட்சேல் சான்ட்னர் 3, இஸ் சோதி 3 விக்கெட்டுகள் எடுத்தனர். இப்போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் 18 சிக்சர்கள் அடித்தும் போராடி தோற்றது. இருப்பினும் ஒரு சர்வதேச டி20 போட்டியின் சேசிங்கில் அதிக சிக்ஸர்கள் அடித்த அணி என்ற உலக சாதனையை வெஸ்ட் இண்டீஸ் சமன் செய்வது. இதற்கு முன் 2023 செயின்ட் ஜார்ஜ் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக இங்கிலாந்தும் 18 சிக்சர்கள் அடித்துள்ளது.

Advertisement