பாகிஸ்தான் மண்ணில் தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெறுகிறது. விரைவில் துவங்கும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபிக்கு தயாராகும் நோக்கத்தில் நடைபெறும் அந்தத் தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி நியூசிலாந்து அசத்தியது. அந்த சூழ்நிலையில் அத்தொடரின் இரண்டாவது போட்டி பிப்ரவரி 10ஆம் தேதி லாகூரில் நடைபெற்றது. அந்தப் போட்டியில் நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் மோதின.
அந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணிக்கு கேப்டன் தெம்பா 20 ரன்களில் அவுட்டானார். மறுபுறம் அறிமுகமாக களமிறங்கிய துவக்க வீரர் மேத்தியூ பிரட்ஸ்கே அதிரடியாக விளையாடினார். அவருடன் அடுத்ததாக ஜோடி சேர்ந்த ஜேசன் ஸ்மித் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்திய போது 40 ரன்களில் ரன் அவுட்டானார்.
உலக சாதனை அறிமுகம்:
அடுத்ததாக வந்த கெயில் வேரின் 1 ரன்னில் அவுட்டானாலும் மறுபுறம் தொடர்ந்து அட்டகாசமாக விளையாடிய மேத்யூ சதத்தை அடித்து 11 பவுண்டரி 5 சிக்ஸருடன் 150 (148) ரன்கள் விளாசி பெவிலியன் திரும்பினார். இதன் வாயிலாக ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகப் போட்டியிலேயே அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த வீரர் என்ற உலக சாதனையை அவர் படைத்தார். இதற்கு முன் வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் தேஷ்மண்ட் ஹைன்ஸ் 1978ஆம் ஆண்டு தனது அறிமுகப் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 148 ரன்கள் எடுத்ததே முந்தைய சாதனை.
இறுதியில் வியான் முல்தர் தம்முடைய பங்கிற்கு அரை சதத்தை அடித்து 64 ரன்கள் எடுத்த உதவியுடன் 50 ஓவரில் 304-6 ரன்களை எடுத்தது. நியூசிலாந்துக்கு அதிகபட்சமாக மாட் ஹென்றி, வில்லியம் ஓ’ரோர்கே தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். அடுத்ததாக 305 ரன்களை துரத்திய நியூசிலாந்துக்கு வில் எங் 19 ரன்களில் அவுட்டானார்.
வில்லியம்சன் அபாரம்:
ஆனால் மறுபுறம் டேவோன் கான்வே நிதானம் கலந்த அதிரடியை வெளிப்படுத்தினார். அவருடன் ஜோடி சேர்ந்த நம்பிக்கை நாயகன் கேன் வில்லியம்சன் அபாரமாக விளையாடி ரன்களை குவித்தார். அந்த வகையில் 2வது விக்கெட்டுக்கு 187 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து நியூசிலாந்தை வெற்றிப் பாதைக்கு அழைத்து வந்த அந்த ஜோடியில் கான்வே சதத்தை நழுவ விட்டு 97 ரன்களில் அவுட்டானார்.
அவருடன் விளையாடிய கேன் வில்லியம்சன் சதத்தை அடித்தும் ஓயாமல் 133* (113) ரன்கள் குவித்து ஃபினிஷிங் செய்தார். இறுதியில் கிளன் பிலிப்ஸ் 28* ரன்கள் எடுத்த உதவியுடன் 48.4 ஓவரில் 308-4 ரன்களை எடுத்த நியூசிலாந்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. தென்னாப்பிரிக்காவுக்கு அதிகபட்சமாக சேனுரான் முத்துசாமி 2 விக்கெட்டுகள் எடுத்தும் தோல்வியை தவிர்க்க முடியவில்லை.
இதையும் படிங்க: விராட் கோலி இந்தியாவை விட்டு லண்டனுக்கு குடி பெயர்கிறாரா? வைரல் புகைப்படம் பற்றி பீட்டர்சன் விளக்கம்
இந்த வெற்றியால் முத்தரப்பு தொடரின் ஃபைனலுக்கு நியூசிலாந்து தகுதி பெற்றுள்ளது. மேலும் ஒருநாள் கிரிக்கெட்டில் 2வது வேகமாக 7000 ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனையை கேன் வில்லியம்சன் படைத்துள்ளார். அந்தப் பட்டியல் (இன்னிங்ஸ்):
1. ஹாசிம் அம்லா: 150
2. கேன் வில்லியம்சன்: 159*
3. விராட் கோலி: 161



