நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அங்கு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. அதில் 2025 சாம்பியன்ஸ் ட்ராபி உட்பட சமீபத்திய தொடர்களில் தோல்விக்கு காரணமான முகமது ரிஸ்வான், பாபர் அசாம் உள்ளிட்ட நட்சத்திர வீரர்களை பாகிஸ்தான் கழற்றி விட்டது. அவர்களுக்கு பதிலாக சல்மான் ஆகா தலைமையில் இளம் வீரர்களுடன் பாகிஸ்தான் களமிறங்கியது.
ஆனால் அவரது தலைமையிலும் முதலிரண்டு போட்டிகளில் பாகிஸ்தான் தோல்வியே சந்தித்தது. இருப்பினும் 3வது போட்டியில் ஹசன் நவாஸ் அதிரடியில் 205 ரன்களை 16 ஓவரிலேயே சேசிங் செய்த பாகிஸ்தான் அட்டகாசமான வெற்றி பெற்றது. அதனால் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக 200 ரன்களை துரத்திய அணியாகவும் பாகிஸ்தான் உலக சாதனை படைத்தது.
நியூஸிலாந்து பதிலடி:
அதன் காரணமாக பாகிஸ்தான் அணி எழுச்சி கண்டுள்ளதாக அந்நாட்டு ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தனர். அந்த நிலையில் வெற்றியாளரை தீர்மானிக்கும் நான்காவது போட்டி மௌண்ட் மௌங்கனி நகரில் மார்ச் 23ஆம் தேதி இந்திய நேரப்படி முற்பகல் 11.45 மணிக்கு துவங்கியது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது.
அதைத்தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் பாகிஸ்தான் பவுலர்களை புரட்டி எடுத்து 220-6 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக டிம் ஃசைபர்ட் 50, ஃபின் ஆலன் 44, கேப்டன் மைக்கேல் சாப்மேன் 46* ரன்கள் குவித்து அசத்தினார்கள். பாகிஸ்தானுக்கு அதிகபட்சமாக ஹரிஷ் ரவூப் 3, அப்ரார் அஹ்மத் 2 விக்கெட்டுகளை எடுத்தனர். அடுத்ததாக களமிறங்கிய பாகிஸ்தானுக்கு கடந்த போட்டியில் சதத்தை அடித்த ஹசன் நவாஸ் 1 முகமத் ஹரிஷ் 1, கேப்டன் சல்மான் ஆகா 1, சடாப் கான் 1 ரன்னில் அவுட்டானார்கள்.
பாகிஸ்தான் தோல்வி:
அதனால் 26-4 என ஆரம்பத்திலேயே சரிந்த பாகிஸ்தானுக்கு மிடில் ஆர்டரில் இர்பான் கான் 24, அப்துல் சமத் 44 ரன்கள் எடுத்து போராடி அவுட்டானார்கள். அடுத்து வந்த வீரர்கள் வந்த வாக்கிலேயே ஒற்றை இலக்கத்தில் பெவிலியன் திரும்பினார்கள். அதனால் 16. 2 ஓவரிலேயே 105 ரன்களுக்கு பாகிஸ்தானை சுருட்டி வீசிய நியூசிலாந்து 115 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றி பெற்று 3 – 1* (5) என்ற கணக்கில் கோப்பையை முன்கூட்டியே கைப்பற்றியது.
இதையும் படிங்க: 2025 ஐ.பி.எல் தொடருக்கான வர்ணனையாளர் குழுவில் இருந்து நீக்கப்பட்ட இர்பான் பதான் – காரணம் என்ன?
அந்த அணிக்கு அதிகபட்சமாக ஜேக்கப் டுஃபி 4, ஜாக் போல்க்ஸ் 3 விக்கெட்டுகள் எடுத்தனர். மறுபுறம் பாகிஸ்தான் போராடாமலேயே மீண்டும் படுதோல்வியை சந்தித்தது. அதனால் நியூஸிலாந்தில் ஆக்லாந்துக்கு வெளியே வண்டி ஓடாதா? என்று பாகிஸ்தான் அணியை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கலாய்க்கின்றனர். ஏனெனில் உலகிலேயே மிகவும் சிறிய பவுண்டரிகளைக் கொண்ட ஆக்லாந்து மைதானத்தில் நடைபெற்ற கடந்தப் போட்டியில் வென்ற பாகிஸ்தான் மற்ற மைதானங்களில் நடந்த 3 போட்டிகளிலும் தோற்றுள்ளது.