
இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்துக்கு எதிராக 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகின்றது. அத்தொடரின் முதல் போட்டியில் வென்ற இந்தியா ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்ற நிலையில் 2வது போட்டி ஜனவரி 14ஆம் தேதி ராஜ்கோட் மைதானத்தில் நடைபெற்றது. மதியம் 1:30 மணிக்கு துவங்கிய அப்போட்டியில் டாஸ் வென்ற நியூஸிலாந்து முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி போராடி 50 ஓவரில் 284/7 ரன்கள் குவித்தது. இந்திய அணிக்கு 70 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல துவக்கத்தைக் கொடுத்த ரோஹித் சர்மா 24, கேப்டன் சுப்மன் கில் 56 ரன்களை குவித்தனர். ஆனால் மிடில் ஆர்டரில் விராட் கோலி 23, ஸ்ரேயாஸ் ஐயர் 8 ரன்கள் எடுத்து அவுட்டானதால் 118/4 என இந்தியா தடுமாறியது.
அப்போது நங்கூரமாக விளையாடிய கேஎல் ராகுல் அற்புதமான சதமடித்து 112* (92) ரன்கள் குவித்து இந்திய அணியை காப்பாற்றினார். அவருடன் ரவீந்திர ஜடேஜா 27, நிதிஷ் ரெட்டி 20 ரன்கள் எடுத்து கை கொடுத்தனர். நியூசிலாந்துக்கு அதிகபட்சமாக கிறிஸ்டியன் கிளார்க் 3 விக்கெட்டுகளை சாய்த்தார். அடுத்ததாக 285 என்ற இலக்கைத் துரத்திய நியூசிலாந்துக்கு டேவோன் கான்வே 22, ஹென்றி நிக்கோலஸ் 10 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார்கள்.
அதனால் 46/2 என ஆரம்பத்திலேயே தடுமாறிய நியூசிலாந்துக்கு அடுத்ததாக டேரில் மிட்சேல் – வில் எங் ஜோடி சேர்ந்து நிதானமாக விளையாடினார்கள். ஆரம்பத்தில் விக்கெட்டை விடக்கூடாது என்ற நோக்கத்துடன் மெதுவாக விளையாடிய அந்த ஜோடியில் இருவருமே அரை சதமடித்தார்கள். நேரம் செல்ல செல்ல அதிரடியாக விளையாடிய அந்த ஜோடி 3வது விக்கெட்டுக்கு 162 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து நியூசிலாந்து வெற்றிப் பாதைக்கு அழைத்து வந்தது.
அப்போது வில் எங் 87 (98) ரன்களில் அவுட்டானார். ஆனால் மறுபுறம் இந்தியாவுக்கு சிம்ம சொப்பனமாக மாறிய டேரில் மிட்சேல் சதமடித்து அசத்தினார். அவருடைய தரமான சதத்தை விராட் கோலி கைதட்டி பாராட்டினார். அவருடன் அடுத்து வந்த கிளன் பிலிப்ஸ் அதிரடியாக 32* (25) ரன்கள் குவித்தார். இறுதியில் கடைசி வரை அவுட்டாகாத மிட்சேல் 131* (117) ரன்கள் குவித்ததால் 47.3 ஓவரிலேயே 286/3 ரன்களை எடுத்து நியூசிலாந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதையும் படிங்க: எம்.எஸ் தோனியும் இல்ல.. ரிஷப் பண்டும் இல்ல.. முதல் இந்திய விக்கெட் கீப்பராக கே.எல் ராகுல் – நிகழ்த்திய சாதனை
அதனால் 1 – 1* (3) என்ற கணக்கில் இத்தொடரை சமன் செய்துள்ள நியூஸிலாந்து அணி இந்தியாவுக்கு பதிலடி கொடுத்துள்ளது. அத்துடன் 8 வருடங்கள் கழித்து இந்தியாவை அதனுடைய சொந்த மண்ணில் ஒரு ஒருநாள் போட்டியில் தோற்கடித்து நியூசிலாந்து அசத்தியுள்ளது. கடைசியாக 2017இல் இந்தியாவில் வென்ற நியூசிலாந்து அதன் பின் சந்தித்த 8 தொடர்ச்சியான தோல்விகளை உடைத்துள்ளது.