IND vs NZ : பேட்டிங், பந்து வீச்சில் முழு மூச்சுடன் போராடிய வாஷிங்டன் சுந்தர் – இந்தியாவின் தோல்விக்கான காரணம் இதோ

Washington Sundar.jpeg
- Advertisement -

நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை 3 – 0 என்ற கணக்கில் வென்ற இந்தியா அடுத்ததாக 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் களமிறங்கியுள்ளது. கேப்டன் ரோகித் சர்மா உள்ளிட்ட சீனியர்கள் ஓய்வெடுக்கும் நிலையில் ஹர்திக் பாண்டியா தலைமையில் இளம் வீரர்களுடன் களமிறங்கியுள்ள இந்தியா ஜனவரி 27ஆம் தேதியன்று ராஞ்சியில் துவங்கிய முதல் போட்டியில் டாஸ் வென்று முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்துக்கு 43 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து அதிரடி தொடக்கம் கொடுத்த பின் ஆலனை 4 பவுண்டரி 2 சிக்சருடன் 35 (23) ரன்களில் அவுட்டாக்கிய வாஷிங்டன் சுந்தர் அடுத்து வந்த மார்க் சாப்மேனை டக் அவுட் செய்தார்.

இருப்பினும் மறுபுறம் அதிரடி காட்டிய டேவோன் கான்வேயுடன் அடுத்ததாக களமிறங்கி கம்பெனி கொடுக்கும் வகையில் பேட்டிங் செய்த கிளன் பிலிப்ஸ் 3வது விக்கெட்டுக்கு 60 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த போது 17 (22) ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனாலும் ஒருபுறம் சிறப்பாக செயல்பட்டு அரை சதமடித்த டேவோன் கான்வே 7 பவுண்டரி 1 சிக்சருடன் 52 (35) ரன்கள் எடுத்து அவுட்டான நிலையில் மைக்கேல் பிரேஸ்வெல் 1, மிட்சேல் சாட்னர் 7 என மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றத்தை கொடுத்தனர்.

- Advertisement -

சொதப்பிய இந்தியா:
ஆனால் 5வது இடத்தில் களமிறங்கி அதிரடி காட்டிய டார்ல் மிட்சேல் கடைசி நேரத்தில் வெறித்தனமாக செயல்பட்டு 3 பவுண்டரி 5 சிக்சருடன் 59* (30) ரன்கள் விளாசி அபார பினிஷிங் கொடுத்ததால் 20 ஓவர்களில் நியூசிலாந்து 176/6 ரன்கள் அடித்தது. இந்தியா சார்பில் அதிகபட்சமாக வாஷிங்டன் சுந்தர் 2 விக்கெட்டுகள் எடுத்தார். அதை தொடர்ந்து 177 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு சுழலுக்கு சாதகமாக இருந்த பிட்ச்சில் ஆரம்பத்திலேயே இஷான் கிசான் 4 (5) ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்த நிலையில் அடுத்து வந்த ராகுல் திரிப்பாதி டக் அவுட்டாகி பெரிய பின்னடைவை கொடுத்தார்.

அந்த சமயத்தில் பொறுப்பை காட்டாத சுப்மன் கில் குருட்டுத்தனமான ஷாட் அடித்து 7 (6) ரன்னில் அவுட்டானதால் 15/3 என ஆரம்பத்திலேயே இந்தியா சரிந்தது. இருப்பினும் அடுத்து ஜோடி சேர்ந்த சூர்யகுமார் யாதவ் – ஹர்திக் பாண்டியா ஆகியோர் பொறுப்புடனும் அதிரடியாகவும் செயல்பட்டு 4வது விக்கெட்டுக்கு 68 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவை ஓரளவு மீட்டெடுத்தனர். ஆனால் அந்த முக்கிய நேரத்தில் அதிரடியாக விளையாடிய சூரியகுமார் 6 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 47 (34) ரன்களில் அவுட்டான போது அடுத்த ஓவரிலேயே பாண்டியாவும் 21 (20) ரன்களில் அவுட்டாகி ரசிகர்களை ஏமாற்றினார்.

- Advertisement -

போதாக்குறைக்கு தீபக் ஹூடா 10, சிவம் மாவி 2, குல்தீப் யாதவ் 0 என அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் வந்த வாக்கிலேயே பெவிலியான திரும்பினர். இறுதியில் பவுலிங் போலவே பேட்டிங்கிலும் கடைசி நேரத்தில் சரவெடியாக செயல்பட்டு போராடிய வாஷிங்டன் சுந்தர் 5 பவுண்டரி 3 சிக்சருடன் அரை சாதமடித்து 50 (28) ரன்கள் விளாசி கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார்.

இறுதியில் 20 ஓவர்களில் 155/9 ரன்கள் மட்டுமே எடுத்த இந்தியா 21 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோற்றது. அதனால் 1 – 0* (3) என்ற கணக்கில் முன்னிலை பெற்று ஒருநாள் தொடர் கேள்விக்கு பதிலடி கொடுத்துள்ள நியூசிலாந்துக்கு அதிகபட்சமாக பிரேஸ்வெல், சாட்னர், லாக்கி பெர்குசன் ஆகியோர் தலா 2 விக்கெட் சாய்த்தனர். இப்போட்டியில் டாஸ் வென்று பந்து வீசிய இந்தியாவுக்கு சுழலுக்கு சாதகமாக இருந்த ஆடுகளத்தில் வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், தீபக் ஹூடா ஆகிய ஸ்பின்னர்கள் தாக்கத்தை ஏற்படுத்தினர்.

- Advertisement -

ஆனால் அரஷ்தீப் சிங், ஹர்டிக் பாண்டியா போன்ற வேகப்பந்து வீச்சாளர்கள் வள்ளலாக செயல்பட்டதால் 150 ரன்கள் மட்டுமே எடுக்க வேண்டிய நியூசிலாந்து எக்ஸ்ட்ரா 25 ரன்கள் எடுத்தது தோல்விக்கு ஒரு காரணமாக அமைந்தது. அதை விட ஆடுகளம் சுழலுக்கு சாதகமாக இருக்கிறது என்பதை தெரிந்தும் ஆரம்பத்திலேயே இஷான் கிசான், சுப்மன் கில் போன்ற டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் பொறுப்பின்றி ஆட்டமிழந்தது இந்தியாவின் தோல்வியை உறுதி செய்தது.

இதையும் படிங்க: ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் நம்பர் ஒன் பிடித்த 6 இந்திய பந்து வீச்சாளர்களின் பட்டியல்

ஏனெனில் அதனால் ஏற்பட்ட அழுத்தத்தாலும் விக்கெட்டுகள் கை வசம் இல்லாத காரணத்தாலும் ரன் ரேட் எகிறியது. அதனால் மிடில் ஆர்டரில் சூரியகுமார் போன்ற வீரர்களால் வெற்றி பெற வைக்க முடியவில்லை.

Advertisement