நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அங்கு 3 டி20 போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. அத்தொடரில் முதல் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்ட நிலையில் 2வது போட்டி கிறிஸ்ட்சர்ச் நகரில் அக்டோபர் 20ஆம் தேதி இந்திய நேரப்படி முற்பகல் 11.45 மணிக்கு துவங்கியது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூஸிலாந்து முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
அதைத் தொடர்ந்து ஆட்டத்தைத் துவங்கிய இங்கிலாந்துக்கு பில் சால்ட் அதிரடியாக விளையாடினார். எதிர்ப்புறம் ஜோஸ் பட்லர் 4 ரன்னில் அவுட்டான நிலையில் அடுத்து வந்த ஜேக்கப் பெத்தல் அதிரடி காட்ட முயற்சித்து 24 (12) ரன்னில் பெவிலியன் திரும்பினார். மறுபுறம் தொடர்ந்து அசத்திய சால்ட் 33 பந்துகளில் அரை சதத்தை அடித்து அசத்தினார்.
இங்கிலாந்து அதிரடி:
அவருடன் மிடில் ஆர்டரில் இணைந்த கேப்டன் ஹாரி ப்ரூக் நியூசிலாந்து பவுலர்களை அடித்து நொறுக்கினார். அவருடன் சேர்ந்து மறுபுறம் தம்முடைய பங்கிற்கு நியூசிலாந்தை வெளுத்து வாங்கிய சால்ட் 129 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 11 பவுண்டரி 1 சிக்ஸருடன் 85 (56) ரன்கள் விளாசி அவுட்டானார். அவருக்குப் பின் அதிரடியாக விளையாடிய ப்ரூக் 22 பந்தில் அரை சதத்தை தொட்டார்.
தொடர்ந்து பட்டாசாக விளையாடிய அவர் 6 பவுண்டரி 5 சிக்சருடன் 78 (35) ரன்களை 222.86 ஸ்ட்ரைக் ரேட்டில் விளாசி அவுட்டானார். இறுதியில் ஷாம் கரன் 8* (3), டாம் பாட்டன் 29* (12) ரன்கள் விளாசி அபார ஃபினிஷிங் செய்ததால் 20 ஓவரில் இங்கிலாந்து 236/4 ரன்கள் குவித்தது. நியூசிலாந்துக்கு அதிகபட்சமாக கைல் ஜெமிசன் 2 விக்கெட்டுகள் எடுத்தார்.
10 விக்கெட்டும் கேட்ச்களாக:
அடுத்ததாக விளையாடிய நியூசிலாந்து ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாட முயற்சித்து 18 ஓவரில் 171 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிரடியாக விளையாட முயற்சித்த அந்த அணிக்கு யாருமே பெரிய ரன்கள் எடுக்கவில்லை. அதிகபட்சமாக கேப்டன் மிட்சேல் சான்ட்னர் 36 (15) ரன்கள் எடுத்தார். இங்கிலாந்துக்கு அடில் ரசித் 4, பிரைடன் கார்ஸ், லியாம் டாசன், லுக் வுட் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.
இதையும் படிங்க: ஃபிக்ஸிங் செய்து தடை பெற்ற வீரரை.. 1955க்குப்பின் 38 வயதில் அறிமுகமாக்கி.. சாதனை வீரராக்கிய பாகிஸ்தான்
குறிப்பாக நியூசிலாந்து அணியின் 10 விக்கெட்டுகளையும் இங்கிலாந்து கேட்ச் முறையில் எடுத்தது. இதன் வாயிலாக ஒரு சர்வதேச டி20 போட்டியில் 13வது முறையாக ஒரு அணியின் 13 விக்கெட்டுகளும் கேட்ச்சாக விழுந்த அரிதான நிகழ்வு இப்போட்டியில் அரங்கேறியுள்ளது. இப்போட்டியில் 65 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இங்கிலாந்து 1 – 0* (3) என்ற கணக்கில் தொடரில் முன்னிலை பெற்றது.



