நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகள் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோதுகின்றன. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக பிப்ரவரி 21ஆம் தேதி வெலிங்டன் நகரில் துவங்கிய இத்தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியா போராடி 383 ரன்கள் அடித்தது.
அந்த அணிக்கு முக்கிய பேட்ஸ்மேன்கள் ஏமாற்றத்தை கொடுத்தாலும் அதிகபட்சமாக கேமரூன் கிரீன் சதமடித்து 174* ரன்கள் எடுக்க நியூசிலாந்து சார்பில் அதிகபட்சமாக மாட் ஹென்றி 5 விக்கெட்டுகள் சாய்த்தார். அதைத் தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்து தடுமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெறும் 179 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி பாலோ ஃஆன் பெற்றது. அந்த அணிக்கு அதிகபட்சமாக கிளன் பிலிப்ஸ் 71 (70), மாட் ஹென்றி 42 (34) ரன்கள் எடுத்தனர்.
சமமாக வெற்றி:
ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக நேதன் லயன் 4 விக்கெட்டுகள் எடுத்தார். அதைத் தொடர்ந்து நியூசிலாந்துக்கு ஃபாலோ ஆன் கொடுக்காமல் 204 ரன்கள் முன்னிலையுடன் ஆஸ்திரேலியா 2வது இன்னிங்ஸில் களமிறங்கியது. குறிப்பாக 204 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் இருந்த ஆஸ்திரேலியா கண்டிப்பாக இந்த போட்டியில் எளிதாக வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் 2வது இன்னிங்ஸில் மனம் தளராமல் சிறப்பாக பந்து வீசிய நியூசிலாந்து 164 ரன்களுக்கு ஆஸ்திரேலியாவை சுருட்டி கை மீறிய போட்டியை தங்கள் பக்கம் சமமாக இழுத்துக் கொண்டு வந்தது. ஆஸ்திரேலிய அணிக்கு அதிகபட்சமாக நேதன் லயன் 41, கேமரூன் க்ரீன் 34 ரன்கள் எடுக்க நியூசிலாந்து சார்பில் அதிகபட்சமாக கிளன் பிலிப்ஸ் 5, மாட் ஹென்றி 3 விக்கெட்டுகளை சாய்த்தனர். குறிப்பாக பகுதி நேர பவுலரான கிளன் பிலிப்ஸ் 16 வருடங்கள் கழித்து சொந்த மண்ணில் 5 விக்கெட்டுகள் எடுத்த நியூஸிலாந்து ஸ்பின்னர் என்ற சாதனையை படைத்து போட்டியில் திருப்பு முனையை உண்டாக்கினார்.
இறுதியில் 369 என்ற கடினமான இலக்கை துரத்தும் நியூசிலாந்துக்கு டாம் லாதமை 8 ரன்களில் காலி செய்த நேதன் லயன் அடுத்து வந்த கேன் வில்லியம்சனையும் 9 ரன்களில் பெவிலியன் அனுப்பினார். போதாகுறைக்கு வில் எங் 15 ரன்களில் டிராவிஸ் ஹெட் சுழலில் அவுட்டானதால் 59/3 என்று ஆரம்பத்திலேயே நியூசிலாந்து தடுமாறியது.
இதையும் படிங்க: பவுலிங்கை விடுங்க.. டெஸ்ட் கிரிக்கெட்டில் பேட்டிங்கில் அரிய சாதனையை நிகழ்த்திய – நாதன் லயன்
ஆனால் அப்போது களமிறங்கிய இளம் வீரர் ரச்சின் ரவீந்தரா ஆஸ்திரேலியாவுக்கு சவாலை கொடுத்து அரை சதமடித்து 56* ரன்கள் எடுத்துள்ளார். அவருக்கு எதிர்புறம் டார்ல் மிட்சேல் 12* ரன்கள் எடுத்து கை கொடுத்து வருகிறார். அதனால் 3வது நாள் முடிவில் நியூஸிலாந்து 111/3 ரன்கள் எடுத்து போராடி வருகிறது. தற்போதைய நிலையில் ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு 7 விக்கெட்டுகளும் நியூசிலாந்தின் வெற்றிக்கு 258 ரன்களும் தேவைப்படுகிறது. எனவே சமமாக இருக்கும் இப்போட்டியின் வெற்றியை 4வது நாளில் சிஎஸ்கே ஐபிஎல் அணிக்காக விளையாடும் ரச்சின் ரவீந்திரா – டார்ல் மிட்சேல் நியூசிலாந்துக்கு பெற்றுக் கொடுப்பார்களா அல்லது ஆஸ்திரேலியா வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.