WTC Final : ரகானேவின் டெக்னிக் சரில்ல, அதிர்ஷ்டத்துல அடிச்சுட்டாரு – விமர்சித்த முன்னாள் இந்திய வீரரை கலாய்க்கும் ரசிகர்கள்

Rahane
- Advertisement -

இந்தியாவுக்கு எதிராக லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் 2023 ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் மாபெரும் இறுதிப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 469 ரன்கள் குவித்தது. டிராவிஸ் ஹெட் 163, ஸ்டீவ் ஸ்மித் 121 என முக்கிய வீரர்கள் சதமடிக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக முகமது சிராஜ் 4 விக்கெட்டுகளை எடுத்தார். அதைத்தொடர்ந்து பதிலடி கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்தியா கேப்டன் ரோஹித் சர்மா 15, கில் 13, விராட் கோலி 13, புஜாரா 13 என முக்கிய வீரர்களின் விக்கெட்டுகளை இழந்து 71/4 என்ற மோசமான தொடக்கத்தை பெற்று திண்டாடியது.

- Advertisement -

அப்போது காப்பாற்ற போராடிய ரவீந்திர ஜடேஜாவும் 48 ரன்களில் அவுட்டாக கேஎஸ் பரத் பொறுப்பின்றி 5 ரன்களில் பெவிலியன் திரும்பினார். அதனால் 200 ரன்களை தாண்டாது என்று கருதப்பட்ட இந்தியாவை 6வது விக்கெட்டுக்கு 109 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து காப்பாற்றிய அஜிங்க்ய ரகானே 89 ரன்களும் சர்துள் தாக்கூர் 51 ரன்களும் எடுத்து ஃபாலோ ஆன் அவமானத்தை சந்திப்பதிலிருந்து காப்பாற்றி 296 ரன்கள் எடுக்க உதவினர். அதைத்தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியா 3வது நாள் முடிவில் 123/4 ரன்கள் குவித்து 296 ரன்கள் முன்னிலை பெற்று வெற்றியை பிரகாசப்படுத்தியுள்ளது.

டெக்னிக் சரில்ல:
முன்னதாக இந்த போட்டியில் ரோகித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட முக்கிய வீரர்கள் சொதப்பிய நிலையில் சமீபத்திய ரஞ்சி மற்றும் ஐபிஎல் தொடர்களில் சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தி 18 மாதங்கள் கழித்து தேர்வான ரகானே நங்கூரமாக நின்று கிளாஸ் பேட்டிங்கை வெளிப்படுத்தி இந்தியாவை ஃபாலோ ஆன் மற்றும் இன்னிங்ஸ் தோல்வியை சந்திக்கும் அவமானத்திலிருந்து காப்பாற்றினார். பொதுவாக கடினமாக உழைத்தால் அதிர்ஷ்டமும் தாமாக வரும் என்று சொல்வதை போல இந்த போட்டியில் மன உறுதியுடன் போராடிய அவருக்கு ஆரம்பத்திலேயே நோ-பால் அதிர்ஷ்டமும் அரை சதம் கடந்த பின் சில கேட்ச் அதிர்ஷ்டமும் கிடைத்தது.

Rahane 1

அதை பொன்னாக மாற்றிய அவர் ஃபைனலில் அரை சதமடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனை படைத்தது ஓரளவு மானத்தை காப்பாற்றியதால் நிறைய ரசிகர்களும் முன்னாள் வீரர்களும் பாராட்டு தெரிவிக்கின்றனர். ஆனால் இந்த போட்டியில் ரகானேவின் பேட்டிங் டெக்னிக் தமக்கு 100% திருப்தியளிக்கவில்லை என்று தெரிவிக்கும் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா சில அதிர்ஷ்டங்களை பயன்படுத்தி அசத்தியதுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் யூடியூப் பக்கத்தில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“அஜிங்க்ய ரகானே தம்முடைய பேட்டிங் டெக்னிக்கில் சில மாற்றங்களை செய்தார். குறிப்பாக 2 கால்களையும் வெள்ளை கோட்டுக்கு உள்ளே வைத்திருந்த அவர் மிகவும் மெதுவாக பேட்டிங் செய்தது நல்ல விஷயமாகும். ஆனால் அவர் எப்போதுமே முன்னோக்கி சென்று அடிக்கவில்லை. அதில் எனக்கு 50 – 50 மட்டுமே திருப்தியளிக்கிறது. மேலும் அது விளையாடுவதற்கு சரியான வழி என்பதை 100% என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அது ஒரு வழியாகும். விராட் கோலி பேட்டிங் செய்தது மற்றொரு வழியாகும். அவர் விக்கெட் எடுக்கும் பந்தில் அவுட்டானது உண்மை தான்”

Aakash Chopra

“ஆனால் அந்த வழியில் நீங்கள் சிறப்பாக விளையாட முடிந்திருக்கும் அல்லவா? மார்னஸ் லபுஸ்ஷேனும் அந்த முன்னங்கால் டெக்னிக்கை பயன்படுத்தி விளையாடினார். அதனால் தான் அவர் அதிகமாகவும் அடித்தார். இருப்பினும் ரகானே இப்போட்டியில் சிறப்பாகவே பேட்டிங் செய்தார். ஆனால் கடைசியில் அவுட்டான அவருக்கு சில அதிர்ஷ்டமும் கிடைத்தன. குறிப்பாக பட் கமின்ஸ் அவுட்டாக்கியும் ரகானே – தாக்கூர் ஆகிய இருவருக்கும் எதிராக நோபால் வீசினார். அதை பயன்படுத்திய அவர்கள் ஃபாலோ ஆன் பெறுவதிலிருந்து காப்பாற்றினர்” என்று கூறினார்.

இதையும் படிங்க:WTC Final : எல்லாரும் கேரியர் முடிஞ்சுன்னு சொன்னாங்க ஆனா அவர் சிறப்பான கம்பேக் கொடுத்துருக்காரு – சௌரவ் கங்குலி பாராட்டு

அதை பார்க்கும் ரசிகர்கள் புஜாரா, கில் ஆகியோர் நீங்கள் சொல்வது போல் முன்னங்காலில் விளையாடி பந்தை அடிக்காமல் கிளீன் போல்டான டெக்னிக் மட்டும் சிறப்பாக இருந்ததா? என்று அவருக்கு பதிலடி கொடுக்கின்றனர். மேலும் அதிர்ஷ்டத்தால் இந்தியாவுக்கு விளையாடும் வாய்ப்பைப் பெற்றுத் சொதப்பிய நீங்கள் அதிர்ஷ்டத்துடன் இந்தியாவை காப்பாற்ற போராடிய ரகானேவை பாராட்டு மனமில்லை என்றாலும் இப்படி விமர்சிக்காதீர்கள் என்றும் ஆகாஷ் சோப்ராவை ரசிகர்கள் காலாய்கின்றனர்.

Advertisement