WTC Final : எல்லாரும் கேரியர் முடிஞ்சுன்னு சொன்னாங்க ஆனா அவர் சிறப்பான கம்பேக் கொடுத்துருக்காரு – சௌரவ் கங்குலி பாராட்டு

Ganguly
- Advertisement -

இங்கிலாந்தின் லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் 2023 ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் மாபெரும் இறுதிப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 469 ரன்கள் குவித்து ஆரம்பத்திலேயே வெற்றிக்கு தேவையான வலுவான துவக்கத்தை பெற்றது. அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 163 ரன்களும் ஸ்டீவ் ஸ்மித் ரன்களும் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக முகமது சிராஜ் 4 விக்கெட்டுகள் எடுத்தார். அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்தியா வெறும் 296 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக ரகானே 89 ரன்கள் எடுக்க ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக பட் கமின்ஸ் 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.

Rahane 1

- Advertisement -

அதை தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியா 3வது நாள் முடிவில் 123/4 ரன்களை எடுத்து 296 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. அந்த அணிக்கு களத்தில் மார்னஸ் லபுஸ்ஷேன் 41* ரன்களுடன் எடுத்துள்ள நிலையில் 400க்கும் மேற்பட்ட இலக்கை நிர்ணயிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் ஆஸ்திரேலியா வெற்றி பெறுவதற்கு பிரகாச வாய்ப்புள்ளது. முன்னதாக இப்போட்டியில் ரோஹித் சர்மா 15, கில் 13, விராட் கோலி 14, புஜாரா 14 என நல்ல ஃபார்மில் இருக்கும் வீரர்கள் சொற்ப ரன்களில் நடையை கட்டினார்.

சிறப்பான கம்பேக்:
அப்போது 71/4 என திணறிய இந்தியாவை ரகானேவுடன் இணைந்து காப்பாற்ற போராடிய ஜடேஜா 48 ரன்களில் ஆட்டமிழந்தார். அத்துடன் பரத் 5 ரன்னில் அவுட்டானதால் 200 ரன்களை தாண்டுமா என்று ரசிகர்கள் கவலையடைந்த போது தாக்கூருடன் இணைந்து தம்முடைய அனுபவத்தை காட்டிய ரகானே 6வது விக்கெட்டுக்கு 109 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து ஃபைனலில் அரை சதமடித்த முதல் இந்திய வீரராக சாதனை படைத்து 89 ரன்கள் குவித்து ஃபாலோ ஆன் சந்திக்கும் அவமானத்திலிருந்து இந்தியாவை காப்பாற்றி அவுட்டானார்.

கடந்த 10 வருடங்களாக சிறந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக அசத்தி வந்த அவர் கடந்த 2020/21 பார்டர் – கவாஸ்கர் கோப்பையில் 36க்கு ஆல் அவுட்டான பின் நாடு திரும்பிய விராட் கோலிக்கு பதிலாக கேப்டனாக பொறுப்பேற்று சதமடித்து இந்தியாவை வெற்றிப் பாதைக்கு திருப்பினார். மேலும் அடுத்தடுத்த போட்டிகளில் முக்கிய வீரர்கள் காயமடைந்து வெளியேறிய போது இளம் வீரர்களை வைத்து அபாரமாக கேப்டன்ஷிப் செய்த அவர் காபா கோட்டையை தகர்த்து 2 – 1 (4) என்ற கணக்கில் மீண்டும் ஆஸ்திரேலிய மண்ணில் சரித்திர வெற்றியை பெற்றுக் கொடுத்தார்.

- Advertisement -

ஆனாலும் அதன்பின் சதமடிக்காமல் தடுமாறியதால் கடந்த பிப்ரவரியில் கழற்றி விடப்பட்ட அவருக்கு பதிலாக இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுப்போம் என்று தேர்வுக்குழு அறிவித்தது. அதனால் கேரியர் முடிந்ததாக கருதப்பட்டாலும் உள்ளூர் தொடரான ரஞ்சிக்கோப்பையில் போராடிய அவர் இரட்டை சதமடித்து 2023 ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற சென்னை அணியில் மிகச் சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தி வெற்றிகளில் பங்காற்றி ஃபார்முக்கு திரும்பினார். அதனால் காயமடைந்த ஸ்ரேயாஸ் ஐயருக்கு பதிலாக வாய்ப்பு பெற்ற அவர் 18 மாதங்கள் கழித்து இந்த போட்டியில் அசத்தலாக செயல்பட்டு 5000 ரன்களை குவித்த 13வது இந்திய வீரர் என்ற சாதனையும் படைத்து கம்பேக் கொடுத்துள்ளார்.

Ganguly

இந்நிலையில் கேரியர் முடிந்ததாக கருதப்பட்டாலும் உறுதியுடன் போராடிய ரகானே மிகச்சிறந்த கம்பேக் கொடுத்துள்ளதாக சௌரவ் கங்குலி பாராட்டியுள்ளார். மேலும் உறுதியுடன் போராடுபவர்களுக்கு நோ-பால் போன்ற அதிர்ஷ்டம் தாமாக வரும் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “18 மாதங்கள் கழித்து என்ன ஒரு நல்ல இன்னிங்ஸ். 18 மாதங்கள் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து வெளியே இருந்த அவருடைய கேரியர் முடிந்ததாக நிறைய பேர் எழுதினர். இந்திய கிரிக்கெட்டில் ஒரு பேட்ஸ்மேன் கம்பேக் கொடுத்து இப்படி ஸ்டேட்மெண்ட் கொடுப்பது எளிதல்ல”

இதையும் படிங்க:WTC Final : ஒரு பார்ட்னர்ஷிப் அமைஞ்சா ஃபைனலில் 450 ரன்களையே அசால்ட்டா சேசிங் பண்ணிடுவோம் – இந்திய வீரர் உறுதி

“இருப்பினும் இது மகத்தானதாகும். வரலாற்றில் சில கம்பேக் இருந்தாலும் நீண்ட நாட்களாக இது போல் ஒன்று இல்லை. குறிப்பாக ஒருபுறம் விக்கெட் சரிந்தாலும் மறுபுறம் அவர் கடினமாகப் போராடினார். அந்த வகையில் உணவு இடைவெளி வரை அவர் போராடியதற்கு பெருமைப்படலாம். மேலும் கடினமாக உழைத்தால் தாமாகவே அதிர்ஷ்டம் கிடைக்கும் என்பதை இதர இந்திய வீரர்களுக்கு அவர் காண்பித்தார். இந்த பிட்ச்சில் சிறப்பாக பேட்டிங் செய்ததற்கான பாராட்டுக்கள் ரகானேவை சேரும். தாக்கூரும் சிறப்பாக பேட்டிங் செய்தார். அவர்கள் இந்தியாவுக்காக சிறப்பாக போராடினார்கள்” என்று கூறினார்.

Advertisement