
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தங்களுடைய சொந்த மண்ணில் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. அந்தத் தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் வென்று முன்னிலை வகிக்கிறது. அந்த நிலையில் இரண்டாவது போட்டி முல்தான் நகரில் ஜனவரி 25ஆம் தேதி துவங்கியது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதைத் தொடர்ந்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு கிரைக் ப்ரத்வெய்ட் 9, மைக்கில் லூயிஸ் 4, அமீர் ஜங்கோ 0, காவெம் ஹோட்ஜ் 21 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். போதாக்குறைக்கு சுழலுக்கு சாதகமாக இருந்த ஆடுகளத்தில் அலிக் அதனேஷ் டக் அவுட்டானார். அதை விட 12வது ஓவரில் ஜஸ்டின் க்ரீவ்ஸ் 1, தேவின் 1, கெவின் சின்க்லைர் 0 என 3 பேட்ஸ்மேன்களை நோமன் அலி அடுத்தடுத்து 3 பந்துகளில் காலி செய்தார்.
இதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் ஹாட்ரிக் விக்கெட்டுகள் எடுத்த முதல் பாகிஸ்தான் சுழல் பந்து வீச்சாளர் என்ற மாபெரும் வரலாறு காணாத சாதனையை நோமென் அலி படைத்துள்ளார். இதற்கு முன் ஜாம்பவான் வாசிம் அக்ரம் (2 முறை), அப்துல் ரசாக், முகமது சமி, நாசீம் ஷா ஆகிய வேகப்பந்து வீச்சாளர்கள் பாகிஸ்தானுக்காக ஹாட்ரிக் விக்கெட்டுகளை எடுத்துள்ளார்கள்.
ஆனால் நோமன் அலி தான் பாகிஸ்தான் அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் ஹாட்ரிக் விக்கெட்டுகளை எடுத்த முதல் ஸ்பின்னராக சாதனை படைத்துள்ளார். அதனால் 38-7 என சரிந்த வெஸ்ட் இண்டீஸ் 100 ரன்கள் தாண்டாது என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்போது கடைசி நேரத்தில் நங்கூரமாக விளையாடிய குடகேஷ் மோட்டி அரை சதமடித்து 55, கிமர் ரோச் 25, ஜோமேல் வேரிக்கன் 36* ரன்கள் அடித்து மானத்தை காப்பாற்றினார்கள்.
அதனால் தப்பிய வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்ஸில் போராடி 163 ரன்கள் எடுத்தது. அந்தளவுக்கு சிறப்பாக பந்து வீசி வெஸ்ட் இண்டீஸ் அணியை சுருட்டிய பாகிஸ்தானுக்கு அதிகபட்சமாக நோமன் அலி 6 விக்கெட்டுகளை எடுத்தார். அவருடன் சஜித் கான் 2 விக்கெட்டுகள் எடுத்து கை கொடுத்தார்.
இதையும் படிங்க: ஐபிஎல்’க்கு நிகரான அது தான் என்னோட கம்பேக்கிற்கு காரணம்.. கோலி, ரோஹித்துக்கு பாடமாகும் வருண் பேட்டி
அடுத்ததாக பாகிஸ்தான் அணி பேட்டிங் செய்து வருகிறது. பிட்ச் சுழலுக்கு அதிக சாதகமாக இருப்பதால் அந்த அணியும் இந்த பதிவிடும் போது 53-4 என தடுமாறி வருகிறது. மொத்தத்தில் இந்தியா போல சுழலுக்கு சாதகமான மைதானத்தை உருவாக்கி பாகிஸ்தான் வெற்றி பெற முயற்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.