
இந்திய கிரிக்கெட் அணியில் கடந்த பல ஆண்டுகளாகவே வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் இல்லாமல் இருந்து வந்த வேளையில் ஹார்டிக் பாண்டியா இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டராக செயல்பட்டு வந்தார். இருப்பினும் அவருக்கு அடிக்கடி காயம் ஏற்பட்டு இடையிடையே அணியை விட்டு வெளியேறுவதால் நிலையான ஒரு ஆல்ரவுண்டரை இந்திய அணி தேடி வந்தது.
அந்த முயற்சியில் பல வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்ட வேளையில் தொடர்ச்சியாக அந்த வாய்ப்பை யாரும் பயன்படுத்திக் கொள்ளவில்லை. இந்நிலையில் இந்த ஆண்டு நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணிக்காக மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்த ஆல்ரவுண்டர் நிதீஷ் ரெட்டி இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்று பலரும் பேசி வந்தனர்.
அந்த வகையில் தற்போது வங்கதேச அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. முதல் போட்டியில் அறிமுகமான நிதீஷ் ரெட்டி பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றாலும் தான் விளையாடிய இரண்டாவது போட்டியிலேயே அசத்தலான செயல்பாட்டை வெளிப்படுத்தி அசத்தினார்.
இந்திய அணியில் ஹார்டிக் பாண்டியாவிற்கு பிறகு தான் என்பதை அவர் இந்த போட்டியில் மூலம் நிரூபித்துள்ளார். அந்த வகையில் நேற்று நடைபெற்ற வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியில் இந்திய அணி 41 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்து சிக்கலில் சிக்கிய போது நான்காவது வீரராக களமிறங்கிய அவர் :
பேட்டிங்கில் 34 பந்துகளை சந்தித்து 4 பவுண்டரி மற்றும் 7 சிக்ஸர்கள் என 74 ரன்கள் குவித்து பேட்டிங்கில் அதிரடி காட்டி இருந்தார். அதோடு மட்டுமின்றி பந்துவீச்சின் போதும் 4 ஓவர்களை முழுமையாக வீசிய அவர் வெறும் 23 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
இதையும் படிங்க : டி20 கிரிக்கெட்டில் முதல் முறையாக இந்திய அணி செய்த வரலாற்று சம்பவம் – விவரம் இதோ
இப்படி பேட்டிங்கில் அரைசதமும், பந்துவீச்சில் இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றி கலக்கிய நிதீஷ் ரெட்டி நிச்சயம் ஹார்டிக் பாண்டியாவிற்கு பிறகு இந்திய அணியின் நிரந்த ஆல்ரவுண்டராக மாறுவார் என்பதே பலரது கருத்தாகவும் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.