
ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது இந்தியாவில் நடைபெற்று முடிந்த 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் 14 ஆட்டங்களில் விளையாடி வெறும் 6 வெற்றிகளை மட்டுமே பெற்று 12 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் எட்டாம் இடத்தை பிடித்து வெளியேறியது. கடந்த 2023 ஆம் ஆண்டு சாம்பியன் பட்டத்தை வென்ற சி.எஸ்.கே அணி அதன்பிறகு மூன்று ஆண்டுகளாக படுமோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தி ஏமாற்றத்தை அளித்து வருகிறது.
அதிலும் குறிப்பாக ருதுராஜ் கெய்க்வாட்டின் தலைமையின் கீழ் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது மிகவும் மோசமான ஆட்டங்களை வெளிப்படுத்தி பரிதாப நிலையில் உள்ளது. தோனி கேப்டனாக இருந்தபோது பலம் வாய்ந்த அணியாக திகழ்ந்த சி.எஸ்.கே அணி இப்படி ருதுராஜ் கெய்க்வாட் தலைமையில் சரிவை சந்தித்து வருவது பலரது மத்தியிலும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.
அதோடு சி.எஸ்.கே அணியின் எதிர்காலம் இன்னும் மோசமாக மாறும் என்றும் சில விமர்சகர்கள் தங்களது கணிப்புகளை வெளியிட்டு வருகின்றனர். இவ்வேளையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் ஏலத்தில் சி.எஸ்.கே அணி செய்த சில தவறுகள் தான் தற்போது சி.எஸ்.கே அணியின் தடுமாற்றத்திற்கு காரணம் என்று குறிப்பிட்டுள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது :
என்னை பொருத்தவரை சி.எஸ்.கே அணி ஏல உத்திகளில் மறுபரிசீலனை செய்ய வேண்டும். ஏனெனில் கார்த்திக் சர்மா மற்றும் பிரஷாந்த் வீர் ஆகியோரை சி.எஸ்.கே அணி 14 கோடிக்கு மேல் செலவழித்து வாங்கியது தவறு. ஏனெனில் அறிமுகம் இல்லாத வீரர்களுக்கு தலா 14 கோடி வழங்குவதை விட அனுபவம் மற்றும் இளமையும் உடைய வீரர்களை தேர்வு செய்திருக்க வேண்டும்.
இதையும் படிங்க : தொடர்ச்சியான ஐ.பி.எல் போட்டிகளால் கூடுதல் வீரர்களை இந்திய அணியில் சேர்த்த பி.சி.சி.ஐ – காரணம் என்ன?
அந்த வகையில் ஆர்.சி.பி அணிக்காக வாங்கப்பட்ட வெங்கடேஷ் ஐயர் மற்றும் குஜராத் அணிக்காக வாங்கப்பட்ட ஜேசன் ஹோல்டர் ஆகியோரை சி.எஸ்.கே அணி வாங்கியிருந்தால் நிச்சயம் மிகச் சிறப்பாக இருந்திருக்கும். வெங்கடேஷ் ஐயர் மற்றும் ஜேசன் ஹோல்டர் ஆகியோர் எதிர்பார்த்ததை விட மிக குறைவான விலைக்கு சென்றனர். அவர்களை சென்னை அணி வாங்கியிருந்தால் பிளேயிங் லெவனும் பலப்பட்டு இருக்கும் என அஸ்வின் கூறியது குறிப்பிடத்தக்கது.