
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் இந்தியா 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. அத்தொடரின் முதல் போட்டியில் இந்தியாவை 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா தோற்கடித்தது. அதனால் இத்தொடரில் 1 – 0* என்ற கணக்கில் ஆஸ்திரேலியா முன்னிலை பெற்று ஆரம்பத்திலேயே அசத்தியுள்ளது.
மறுபுறம் மழையால் 26 ஓவர்களாக குறைக்கப்பட்ட அப்போட்டியில் பேட்டிங்கில் சொதப்பிய இந்தியா 136 ரன்கள் மட்டுமே எடுத்தது தோல்விக்கு காரணமானது. முன்னதாக அப்போட்டியில் இந்திய அணிக்காக நிதிஷ் ரெட்டி ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமாக களமிறங்கினார். ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணிக்காக ஓரளவு நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் இந்தியாவுக்காக டி20 போட்டிகளில் அறிமுகமானார்.
அந்த வாய்ப்பில் ஓரளவு நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்திய அவருக்கு கடந்த ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் அறிமுகமாகும் வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பில் மிகச் சிறப்பாக பேட்டிங் செய்த நிதிஷ் ரெட்டி காபாவில் சதமடித்து இந்தியாவை தோல்வியிலிருந்து காப்பாற்றினர். அதனால் ஒருநாள் கிரிக்கெட்டிலும் அசத்துவார் என்ற நம்பிக்கையுடன் அவருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
பெர்த் மைதானத்தில் அவருக்கு முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா அறிமுகத் தொப்பியை வழங்கி வாழ்த்தினார். அப்போது அறிமுகமான முதல் நாளைப் போலவே கடைசி வரை ஒரே அணுகுமுறையுடன் விளையாடினால் ஆல் டைம் கிரேட் பிளேயராக வருவீர்கள் என்று சொல்லி ரோஹித் அவரிடம் தொப்பியை கொடுத்தார். இது பற்றி அவர் வாழ்த்தியது பின்வருமாறு.
“தொப்பி நம்பர் 260 நித்திஷ் ரெட்டி. இந்திய அணிக்கு வரவேற்கிறேன். எந்த விதத்தில் எந்த அணுகுமுறையைப் பின்பற்றி விளையாட விரும்புகிறோம் என்பதை வைத்தே நீங்கள் உங்களுடைய கேரியரில் நல்ல துவக்கத்தைப் பெற்றுள்ளீர்கள். இந்திய அணியுடன் இந்த நீண்ட பயணத்தில் நீங்கள் ஒரே அணுகுமுறையை கொண்டிருப்பீர்கள் என்று 110% உறுதியாக நம்புகிறேன்”
“நீங்கள் ஆல் டைம் கிரேட் பிளேயராக வருவீர்கள் என்று நான் நம்புகிறேன். ஏனெனில் நேற்று பேசிய போது இந்திய அணியில் அனைத்து இடங்களிலும் இருக்க விரும்புவதாக நீங்கள் சொன்னீர்கள். அதையே நீங்கள் செய்ய வேண்டும் என்பதை நாங்கள் விரும்புகிறோம். அதற்காக வாழ்த்துக்கள். உங்களைச் சுற்றி இந்திய அணி இருக்கும் என்று 110% உறுதியாக நம்புகிறேன்”
இதையும் படிங்க: அகர்கர் மாறனும்.. தெளிவா சொல்லிருந்தா ஷமி ஏன் மீடியாவில் உண்மையை சொல்லப் போறாரு? அஸ்வின் பேட்டி
“உங்களுக்கு எந்த உதவி தேவைப்பட்டாலும் அதற்காக ஆதரிக்க அனைவரும் இருக்கிறார்கள் உங்களுக்கு நல்வாழ்த்துக்கள். சிறப்பான கேரியர் அமையட்டும்” என்று கூறினார். அவரது கையால் தொப்பியை வாங்கி அறிமுகமான நிதிஷ் ரெட்டி 2 அடுத்தடுத்த சிக்ஸருடன் 19* (10) ரன்கள் குவித்து அசத்தியது குறிப்பிடத்தக்கது.