இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் வீரரான மகேந்திர சிங் தோனி கடந்த 2004 ஆம் ஆண்டு கிரிக்கெட்டிற்கு அறிமுகமாகி 2019ஆம் ஆண்டு வரை கிட்டத்தட்ட 16 ஆண்டுகள் இந்திய அணிக்காக விளையாடிய அனுபவம் உடையவர். 90 டெஸ்ட் போட்டிகளில் 350 ஒருநாள் போட்டிகள் மற்றும் 98 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள தோனி இந்திய அணியின் வெற்றிகரமான கேப்டன் என்ற பெயர் எடுத்தவர்.
ஐசிசி நடத்திய மூன்று வகையான உலக கோப்பையும் இந்திய அணிக்கு பெற்று தந்த ஒரே கேப்டன் தோனி தனது ஃபினிஷிங் மூலம் உலகின் மிகச் சிறந்த வீரராக விளங்கினார். அவரைப்பார்த்து கிரிக்கெட்டிற்கு வந்த இளம் வீரர்களும் அவரை உத்வேகமாக கொண்டு விளையாடி வரும் கிரிக்கெட் வீரர்களும் இன்றளவும் உலகம் முழுவதும் உள்ளனர். இந்திய அணியில் விளையாடும் பல வீரர்களுக்கு தோனி முன்னுதாரணமாக இருந்து வருகிறார்.
இந்நிலையில் தோனியை கடவுளாக பார்க்கும் ஒரு கிரிக்கெட் வீரர் குறித்து நிதிஷ் ராணா பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் தோனியை மிகவும் வியந்து பார்க்கிறார். அதுமட்டுமின்றி தூங்கி எழும் போது தான் பார்க்க விரும்பும் நபராக தோனி இருக்க வேண்டும் என அவர் விரும்புவார். இதுகுறித்து என்னிடமே பலமுறை அவர் கூறியிருக்கிறார்.
மேலும் தோனியுடன் ஒப்பிடுவது தவறு என்றும் நான் அதற்கு தகுதியானவர் இல்லை என்றும் பல முறை சொல்லி இருக்கிறார். தோனி தனக்கு கடவுள் போன்றவர் எனவும் பண்ட் என்னிடம் கூறியுள்ளார் என்று நிதீஷ் ராணா தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி மேலும் தொடர்ந்து கூறுகையில் : தற்போது பண்ட் மிக சிறப்பான வீரராக வலம் வர அவருடைய தன்னம்பிக்கை மிகப்பெரிய அளவில் அவருக்கு கைகொடுக்கிறது. ஏனெனில் எந்த பார்மட்டில் விளையாடினாலும் அவர் தன்னுடைய இயல்பான ஆட்டத்தை கைவிடுவதில்லை.
தன் மீதான விமர்சனம் இருக்கும்போதுகூட பொறுமையாக இருந்து தற்போது இந்திய அணிக்காக மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். ஒரு போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்காக நான் நிச்சயம் விளையாடுவேன் என்றும் அந்த போட்டி தனது வாழ்க்கையை மாற்றும் என திடமாக நம்பினார். அதேபோன்று 2019ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் சிறப்பாக அதனை செய்தும் காட்டி உள்ளார் என்று ரிஷப் பண்ட் குறித்து அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.