
ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் எட்டாம் தேதி கொல்கத்தாவில் இருக்கும் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் 21வது போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் லக்னோவுக்கு எதிராக டாஸ் வென்ற கொல்கத்தா முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய லக்னோ அணிக்கு ஐடன் மார்க்ரம் – மிட்சேல் மார்ஷ் ஆகியோர் ஆரம்பத்திலேயே ஜோடி சேர்ந்து கொல்கத்தா பவுலர்களை புரட்டி எடுத்தனர்.
பவர் பிளே கடந்தும் அதிரடியாக விளையாடிய இந்த ஜோடி 10 ஓவரில் 99 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல துவக்கத்தைக் கொடுத்த போது மார்க்ரம் 47 (28) ரன்களில் ராணா வேகத்தில் போல்ட்டானார். அடுத்ததாக வந்த நிக்கோலஸ் பூரான் தமது ஸ்டைலில் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடினார். எதிர்ப்புறம் நிலைத்து விளையாடிய மார்ஷ் அரை சதத்தை கடந்து அசத்தினார்.
மிடில் ஓவர்களில் அதிரடியாக விளையாடிய இந்த ஜோடி இரண்டாவது விக்கெட்டுக்கு 71 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த போது மார்ஷை 81 (48) ரன்களில் ரசல் அவுட்டாக்கினார். ஆனால் மறுபுறம் நேரம் செல்ல செல்ல அதிரடியை அதிகப்படுத்திய நிக்கோலஸ் பூரான் அதே ரசலுக்கு எதிராக 18வது ஓவரில் 4, 0, 4, 6, 4, 6 என 24 ரன்கள் விளாசி சதத்தை நெருங்கினார்.
எதிர்ப்புறம் வந்த அப்துல் சமத் 6 ரன்னில் அவுட்டானார். மறுபுறம் தொடர்ந்து அசத்திய பூரான் சதத்தை அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 19, 20வது ஓவரில் ஹர்ஷல் படேல், வைபவ் அரோரோ ஆகியோர் கொஞ்சம் கட்டுப்பாட்டுடன் பௌலிங் செய்தனர். அதனால் கடைசி 2 ஓவரில் 11 ரன்கள் மட்டுமே அடித்த பூரான் சதத்தை நழுவ விட்டார்.
இருப்பினும் 7 பவுண்டரி 8 சிக்ஸர்களை பறக்க விட்ட அவர் 87* (36) ரன்களை 241.67 ஸ்ட்ரைக் ரேட்டில் விளாசி நல்ல ஃபினிஷிங் கொடுத்தார். அவருடைய ஆட்டத்தால் 20 ஓவரில் லக்னோ 238-3 ரன்கள் குவித்து அசத்தியது. கொல்கத்தாவுக்கு அதிகபட்சமாக ஹர்ஷித் ராணா 2 விக்கெட்டுகளை சாய்த்தார்.
இதையும் படிங்க: ஹார்டிக் பாண்டியானா சும்மாவா.. முதல் இந்திய வீரராக டி20 போட்டிகளில் அசத்தல் சாதனை – விவரம் இதோ
இந்தப் போட்டியையும் சேர்த்து ஐபிஎல் தொடரில் பூரான் 1198 பந்துகளில் 2000 ரன்கள் குவித்துள்ளார். இதன் வாயிலாக ஐபிஎல் வரலாற்றில் பந்துகள் அடிப்படையில் 2வது வேகமாக 2000 ரன்கள் அடித்த வீரர் என்ற வீரேந்திர சேவாக் சாதனையை உடைத்துள்ள அவர் புதிய சாதனை படைத்துள்ளார். அந்தப் பட்டியல்:
1. ஆண்ட்ரே ரசல்: 1120
2. நிக்கோலஸ் பூரான்: 1198*
3. விரேந்தர் சேவாக்: 1211
4. கிறிஸ் கெயில்: 1251
5. ரிஷப் பண்ட்: 1306