ஐபிஎல் 2025 டி20 கிரிக்கெட் தொடரில் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிப் பெறுவதற்காக அனைத்து அணிகளும் போராடி வருகின்றன. அதில் ரிசப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி இதுவரை விளையாடிய 8 போட்டிகளில் 4 வெற்றி 4 தோல்விகளை சந்தித்துள்ளது. அதனால் புள்ளிப்பட்டியலில் 5வது இடத்தில் இருக்கும் அந்த அணி பிளே ஆஃப் சுற்றை நெருங்கி வருகிறது.
அந்த அணிக்கு நம்பிக்கை நட்சத்திரம் நிக்கோலஸ் பூரான் இந்த வருடமும் அதிரடியாக விளையாடி வெற்றிகளில் பங்காற்றி வருகிறார். இதுவரை 8 போட்டிகளில் 378 ரன்கள் குவித்துள்ள அவர் ஆரஞ்சு தொப்பிப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் அசத்தி வருகிறார். முன்னதாக நிக்கோலஸ் பூரான் ஒவ்வொரு போட்டியிலும் அதிரடியாக சிக்ஸர்களை பறக்க விட்டு ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார்.
சிக்ஸரால் காயம்:
அப்படிப்பட்ட அவர் குஜராத்துக்கு எதிராக லக்னோவில் நடைபெற்ற போட்டியில் 61 ரன்கள் அடித்து அசத்தினார். அந்தப் போட்டியில் அவர் பறக்க விட்ட 7 சிக்ஸர்களில் ஒன்று மைதானத்தில் இருந்த ஒரு ரசிகரின் தலையில் பலத்த காயத்தை ஏற்படுத்தியது. அதனால் அந்த ரசிகர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் நபீல் என்ற அந்த ரசிகரை நலம் விசாரிப்பதற்காக நிக்கோலஸ் பூரான் தங்களுடைய அணி நிர்வாகத்தின் உதவியுடன் லக்னோ மைதானத்திற்கு வரவழைத்துள்ளார். பின்னர் அவரை நேரில் சந்தித்து நலம் விசாரித்த பூரான் தம்முடைய தொப்பியை கழற்றி வாழ்த்துச் செய்தியுடன் கையொப்பமிட்டு அந்த ரசிகருக்கு பரிசாக வழங்கி ஆறுதல் தெரிவித்தார். அதை வாங்கிக் கொண்ட அந்த ரசிகர் நன்றி தெரிவித்தார்.
ரசிகர் நெகிழ்ச்சி:
மேலும் தம்மைப் பற்றி கவலைப்படாமல் தொடர்ந்து சிக்சர்கள் அடித்து லக்னோ அணியை வெற்றி பெற வையுங்கள் என்றும் அந்த ரசிகர் வாழ்த்து தெரிவித்தார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “தற்போது அனைத்தும் நன்றாக இருக்கிறது. ஆச்சரியமாக உணர்கிறேன். பூரான் சார் என்னை அழைத்திருந்தார். இங்கே வந்த நான் அவரை சந்தித்தேன்”
இதையும் படிங்க: அஸ்வின் சுயநலமாகிட்டாரு.. தோனியே மனச விட்டாரு.. அந்த வீரர்களை வாங்குன எப்படி ஜெய்ப்பிங்க.. ஸ்ரீகாந்த்
“எப்படி இருக்கிறீர்கள் என்று அவர் என்னிடம் கேட்டார். நாளை நடைபெறும் போட்டியை நான் பார்க்க மீண்டும் வருவேன். அப்போது எனக்கு ஏதேனும் ஆனால் கூட லக்னோ தொடர்ந்து விளையாடி வெல்ல வேண்டும். அன்றைய நாளில் கூட நம்முடைய அணி வென்றது. அதனால் நான் காயத்தைத் தாண்டி மகிழ்ச்சியாக இருந்தேன்” என்று கூறினார். லக்னோ அணி நிர்வாகம் பகிர்ந்துள்ள இந்த வீடியோ தற்போது இதர ரசிகர்களை நெகிழ்ச்சியடைய வைத்து வருகிறது.



