பொல்லார்ட்க்கு அடுத்த வெ.இ இண்டீஸ் கேப்டன் அறிவிப்பு ! 2 உலககோப்பைக்கு அவர் தான் கேப்டன் – முழு விவரம்

WI
- Advertisement -

மேற்கு இந்திய தீவுகள் எனப்படும் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் வெள்ளைப் பந்து கேப்டனாக இருந்து வந்த நட்சத்திர அதிரடி வீரர் கைரன் பொல்லார்டு ஒட்டுமொத்த சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக திடீரென சில வாரங்களுக்கு முன்பு அறிவித்திருந்தார். கடந்த 2007இல் முதல் முறையாக அறிமுகமான அவர் தனது அதிரடியான ஆட்டத்தால் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியின் மிடில் ஆர்டரில் முக்கிய வீரராக வலம் வந்தார். மேலும் 2019 முதல் கேப்டனாகவும் பொறுப்பேற்ற அவர் கடைசியாக கடந்த பிப்ரவரி மாதம் இந்தியாவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடந்த ஒருநாள், டி20 தொடர்களில் கேப்டனாக செயல்பட்டார்.

Pollard

- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடாமல் 224 வெள்ளை பந்து போட்டிகளில் விளையாடி வரலாற்று சாதனை படைத்த அவர் தற்போது 34 வயது மட்டுமே நிரம்பியுள்ள நிலையில் ஓய்வு பெற்றது பலருக்கும் ஆச்சரியமாக அமைந்தது. இருப்பினும் ஐபிஎல் போன்ற டி20 தொடர்களில் முழு கவனம் செலுத்துவதற்காக இந்த முடிவை அவர் எடுத்துள்ளதாகவும் தெரிய வருகிறது.

அடுத்த கேப்டன்:
அவர் ஓய்வு பெற்றதால் வெஸ்ட் இண்டீஸ் வெள்ளை பந்து கிரிக்கெட்டின் அடுத்த கேப்டன் யார் என்ற கேள்வி இருந்து வந்த நிலையில் மற்றொரு வளர்ந்து வரும் நட்சத்திர வீரர் “நிகோலஸ் பூரன்” தங்களின் அடுத்த முழுநேர வெள்ளைப் பந்து கேப்டன் என வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இவர் ஏற்கனவே பொல்லார்ட் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியின் துணை கேப்டனாக இருந்து வந்த நிலையில் தற்போது அவருக்கு உறுதுணையாக மற்றொரு இளம் தொடக்க வீரர் ஷாய் ஹோப் துணை கேப்டனாக செயல்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Pooran

தற்போது 26 வயது மட்டுமே நிரம்பியிருக்கும் இளம் வீரர் நிகோலஸ் பூரன் கடந்த 2014 ஐசிசி அண்டர்-19 உலகக் கோப்பையில் மிகச் சிறப்பாக செயல்பட்டு 6 போட்டிகளில் 303 ரன்கள் குவித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். அதன் காரணமாக 2016இல் முதல் முறையாக வெஸ்ட் இண்டீஸ் டி20 அணியில் அறிமுகமான அவர் 2019இல் ஒருநாள் கிரிக்கெட்டிலும் அறிமுகமாக களமிறங்கி படிப்படியாக முன்னேறி அதன்பின் கடந்த 2 வருடங்களாக வெஸ்ட் இண்டீஸ் அணியின் முக்கிய வீரராக உருவெடுத்துள்ளார்.

- Advertisement -

2 உலககோப்பை கேப்டன்:
இதுவரை டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட அவர் 37 ஒருநாள் போட்டிகளிலும் 57 டி20 போட்டிகளிலும் விளையாடி 16 அரை சதங்கள் 1 சதம் உட்பட 2000க்கும் மேற்பட்ட ரன்கள் குவித்து நம்பிக்கை நட்சத்திர வீரராக வலம் வருகிறார். மேலும் ஐபிஎல் போன்ற டி20 தொடர்களிலும் அதிரடியாக விளையாடி ரசிகர்களிடையே புகழ் பெற்றுள்ள இவர் ஏற்கனவே கடந்த 2021இல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடந்த 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் போது ஒருசில போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வழி நடத்தியுள்ளார்.

Pooran-1

அந்த நிலைமையில் தற்போது முழுநேர கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ள நிக்கோலஸ் பூரன் வரும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் 2022 டி20 உலகக் கோப்பை மற்றும் வரும் 2023 அக்டோபரில் இந்தியாவில் நடைபெறும் ஐசிசி உலகக்கோப்பை ஆகிய 2 ஐசிசி தொடர்களில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வழி நடத்துவார் என்று அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

- Advertisement -

மிக்பெரிய கெளரவம்:
இது மிகப்பெரிய கௌரவமாக நினைத்து வெஸ்ட் இண்டீஸ் அணியை வழிநடத்தி வெற்றிக்காக பாடுபட உள்ளதாக நிக்கோலஸ் பூரன் கூறியுள்ளார். இதுபற்றி அவர் பேசியது பின்வருமாறு. “வெஸ்ட் இண்டீஸ் கேப்டனாக அறிவிக்கப்பட்டதில் உண்மையாகவே கௌரவமடைகிறேன். இந்த சமயத்தில் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டுக்காக பாடுபட்ட நிறைய ஜாம்பவான்களின் கால் தடங்களில் பயணிக்க விரும்புகிறேன்.

வெஸ்ட் இண்டீஸ் கேப்டனாக அறிவிக்கப்பட்டது எனது கிரிக்கெட் கேரியரில் உச்சபட்ச நிகழ்வாகும். வெஸ்ட் இண்டீஸ் ரசிகர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மகிழ்ச்சி அடையும் வகையில் நமது அணியை வெற்றிப் பாதையில் நடத்த விரும்புகிறேன்” என்று பேசினார்.

இதையும் படிங்க : கேட்டது நியாயமே, ரூல்ச மாத்துங்க ! சஞ்சு சாம்சனுக்கு ஆதரவாக பேசிய டேனியல் வெட்டோரி – எதற்கு தெரியுமா

ஒரு இளம் வீரரான அவர் கேப்டனாக பொறுப்பேற்றதற்கு நிறைய வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரர்களும் ரசிகர்களும் தங்களது ஆதரவையும் மகிழ்ச்சியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் முழுநேர கேப்டனாக வரும் மே 31-ஆம் தேதி நெதர்லாந்து நாட்டில் நடைபெறும் அந்த அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இருந்து நிக்கோலஸ் பூரன் தனது கேப்டன்சிப் பயணத்தை தொடங்க உள்ளார்.

Advertisement