டி20யை மிஞ்சிய திரில்லர், 1 ரன் வித்யாசத்தில் இங்கிலாந்தை சாய்த்த நியூஸிலாந்து, 30 வருட வரலாற்று வெற்றி

- Advertisement -

நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் 267 ரன்கள் வித்தியாசத்தில் வென்று ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. அந்த நிலைமையில் குறைந்தபட்சம் சொந்த மண்ணில் ஒயிட் வாஷ் தோல்வியை தவிர்க்க வேண்டிய கட்டாயத்தில் பிப்ரவரி 24ஆம் தேதியன்று பேசின் ரிசர்வ் மைதானத்தில் துவங்கிய 2வது போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து வழக்கம் போல அதிரடியாக செயல்பட்டு 435/8 ரன்கள் குவித்து டிக்ளர் செய்தது.

அதிகபட்சமாக இளம் வீரர் ஹாரி ப்ரூக் அதிரடியான சதமடித்து 186 (176) ரன்களும் ஜோ ரூட் நிதானமான சதமடித்து 153* (224) ரன்களும் குவித்தனர். நியூசிலாந்து சார்பில் அதிகபட்சமாக மாட் ஹென்றி 4 விக்கெட்டுகளை சாய்த்தார். அதைத்தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்து இங்கிலாந்தின் தரமான பந்து வீச்சுக்கு பதில் சொல்ல முடியாமல் சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்து 209 ரன்களுக்கு சுருண்டு ஃபாலோ ஆன் பெற்றது.

- Advertisement -

வரலாற்று திரில்லர் வெற்றி:
அதிகபட்சமாக கேப்டன் டிம் சௌதீ அதிரடியாக 73 (49) ரன்கள் எடுக்க இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக ஸ்டூவர்ட் பிராட் 4 விக்கெட் எடுத்தார். பின்னர் இங்கிலாந்து ஃபாலோ ஆன் கொடுத்ததை தொடர்ந்து 226 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்ஸை துவங்கிய நியூஸிலாந்து இம்முறை பொறுப்புடன் செயல்பட்டு போராடி 483 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கேன் வில்லியம்சன் சதமடித்து 133 ரன்கள் எடுக்க டாம் லாதம் 83, டேவோன் கான்வே 61, டார்ல் மிட்சேல் 54, டாம் பிளன்டல் 90 என இதர பேட்ஸ்மேன்களும் நல்ல ரன்களை எடுத்தனர்.

இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக ஜாக் லீச் 5 விக்கெட்டுகள் எடுத்தார். இறுதியில் 258 ரன்களை துரத்திய இங்கிலாந்து 4வது நாள் முடிவில் 48/1 என்ற நல்ல தொடக்கத்தை பெற்றது. ஏற்கனவே அடித்து நொறுக்கும் ஆட்டத்தை வெளிப்படுத்தும் அந்த அணிக்கு கடைசி நாளில் 210 ரன்களை துரத்துவதற்கு 9 விக்கெட்டுகள் கைவசம் இருந்ததால் நிச்சயம் நியூசிலாந்து தோற்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடைசி நாளில் உத்வேகத்துடன் பந்து வீசிய நியூசிலாந்து ஓலி ராபின்சன் 2, பென் டூக்கெட் 33, ஓலி போப் 14 என முக்கிய வீரர்களை செட்டிலாக விடாமல் சொற்ப ரன்களில் காலி செய்து ஹரி ப்ரூக்கை 0 ரன்களில் ரன் அவுட் செய்தது.

- Advertisement -

அதனால் 80/5 என தடுமாறிய தனது அணியை நம்பிக்கை நட்சத்திரம் ஜோ ரூட் வழக்கம் போல சிறப்பாக செயல்பட்டு கேப்டன் ஸ்டோக்ஸ் உடன் இணைந்து 6வது விக்கெட்டுக்கு 121 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து மீட்டெடுத்தார். அதனால் வெற்றியை நெருங்கிய இங்கிலாந்துக்கு கேப்டன் பென் ஸ்டோக்ஸை 33 ரன்களில் அவுட்டாக்கிய நெய்ல் வாக்னர் மிகப்பெரிய அச்சுறுத்தலை கொடுத்த ஜோ ரூட்டையும் அடுத்த ஓவரில் 95 ரன்களில் அவுட்டாக்கி திருப்பு முனையை ஏற்படுத்தினார். அதை பயன்படுத்திய நியூசிலாந்து பென் போக்ஸ் 35, ஸ்டூவர்ட் ப்ராட் 11 என லோயர் ஆர்டர் பேட்ஸ்மேன்களையும் காலி செய்து வெற்றிக்கு போராடியது.

இருப்பினும் கடைசி விக்கெட்டுக்கு ஜேக் லீச் 1* (31) ரன் எடுத்து தொல்லை கொடுத்தது போலவே அடுத்து வந்த ஜேம்ஸ் ஆண்டர்சனும் கட்டையை போடும் பேட்டிங் செய்தார். அதனால் பரபரப்பு தொற்றிக் கொண்ட போட்டியில் இங்கிலாந்துக்கு 2 ரன்களும் நியூசிலாந்துக்கு 1 விக்கெட்டும் தேவைப்பட்ட போது 75வது ஓவரின் 2வது பந்தில் லெக் சைட் திசையில் ஒய்ட் போன்ற பந்தை வீசிய நெய்ல் வாக்னர் ஆண்டர்சனை விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுக்க வைத்து வெறும் 1 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்று கொடுத்தார்.

- Advertisement -

அதனால் டி20 கிரிக்கெட்டை மிஞ்சிய இந்த வெற்றியால் 1 – 1 (2) என தொடரை சமன் செய்த நியூசிலாந்து அணியினர் மற்றும் ரசிகர்கள் வெறித்தனமாக கொண்டாடினார்கள். சொல்லப்போனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் பாலோ ஆன் பெற்ற பின் முதல் முறையாக நியூசிலாந்து வெற்றியை பதிவு செய்து புதிய சரித்திரம் படைத்துள்ளது. மேலும் 2001இல் கொல்கத்தாவில் ஆஸ்திரேலியாவை இந்தியா தோற்கடித்த வெற்றிக்குப்பின் 22 வருடங்கள் கழித்து முதல் முறையாக நியூசிலாந்து அதே போன்ற மகத்தான வெற்றி பெற்றுள்ளது.

அந்த பட்டியல்:
1. இங்கிலாந்து : ஆஸ்திரேலியாவுக்கு எதிராக, சிட்னி, 1894
2. இங்கிலாந்து : ஆஸ்திரேலியாவுக்கு எதிராக, லீட்ஸ், 1981
3. இந்தியா : ஆஸ்திரேலியாவுக்கு எதிராக, கொல்கத்தா, 2001
4. நியூஸிலாந்து : இங்கிலாந்துக்கு எதிராக, பேசின் ரிசர்வ், 2023*

இதையும் படிங்க: IND vs AUS :பிட்ச்மேல குறை சொல்லி எந்த பயனும் இல்ல. மொதல்ல அதை நம்புங்க – கே.எஸ் பரத் பேட்டி

அத்துடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற 2வது அணி என்ற சாதனையும் நியூசிலாந்து படைத்துள்ளது. இதற்கு முன் கடந்த 1993ஆம் ஆண்டு அடிலெய்டு நகரில் ஆஸ்திரேலியாவை வெஸ்ட் இண்டீஸ் 1 ரன் வித்தியாசத்தில் முதல் முறையாக தோற்கடித்தது.

Advertisement