இலங்கைக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நியூசிலாந்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. அத்தொடரின் முதல் போட்டியில் வென்ற இலங்கை ஆரம்பத்திலேயே முன்னிலை வகிக்கிறது. அந்த சூழ்நிலையில் இரண்டாவது போட்டி கால்லே நகரில் செப்டம்பர் 26ஆம் தேதி துவங்கியது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதை தொடர்ந்து களமிறங்கிய இலங்கை தங்களுடைய முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து போதும் போதும் என்று சொல்லும் அளவுக்கு அபாரமாக விளையாடி 602-5 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் நியூசிலாந்துக்கு எதிராக முதல் முறையாக 500 ரன்கள் கடந்து இலங்கை சாதனை படைத்தது. அத்துடன் நியூசிலாந்துக்கு எதிராக அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்து இலங்கை மற்றுமொரு சாதனை படைத்தது.
இலங்கை மேஜிக்:
அந்த அணிக்கு அதிகபட்சமாக தினேஷ் சண்டிமால் 116, கமிண்டு மெண்டிஸ் 182*, குசால் மெண்டிஸ் 106* என 3 பேட்ஸ்மேன்கள் சதமடித்து அசத்தினார்கள். நியூஸிலாந்துக்கு அதிகபட்சமாக கிளன் பிலிப்ஸ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதைத்தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்துக்கு டாம் லாதம் 2, டேவோன் கான்வே 9 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர்.
அதே போல நம்பிக்கை நட்சத்திரம் கேன் வில்லியம்சன் 7, ரச்சின் ரவீந்திரா 10, டேரில் மிட்சேல் 13, டாம் பிளன்டல் 1, கிளன் பிலிப்ஸ் 0 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தனர். அதனால் வெறும் 88 ரன்களுக்கு ஆல் அவுட்டான நியூசிலாந்துக்கு அதிகபட்சமாக மிட்சேல் சான்ட்னர் 29 ரன்கள் எடுத்தார். இதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இலங்கைக்கு எதிராக முதல் முறையாக நியூஸிலாந்து 100 ரன்களுக்குள் ஆல் அவுட்டானது.
நியூஸிலாந்து பரிதாபம்:
அத்துடன் இலங்கைக்கு எதிராக நியூஸிலாந்து தங்களின் வரலாறு காணாத குறைந்தபட்ச ஸ்கோரை (88) பதிவு செய்து மோசமான சாதனை படைத்துள்ளது. இதற்கு முன் கடந்த 1992ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிராக 102 ரன்களுக்கு ஆல் அவுட்டானதே நியூசிலாந்தின் முந்தைய குறைந்தபட்ச ஸ்கோராகும். அந்தளவுக்கு பந்து வீச்சில் மேஜிக் நிகழ்த்திய இலங்கைக்கு அதிகபட்சமாக பிரபத் ஜெயசூர்யா 6, நிசான் பெரிஸ் 3 விக்கெட்டுகளை எடுத்தனர்.
இதையும் படிங்க: இந்திய அணிக்கு வரும் மாயங்க் யாதவ்.. 2 பேரோட சப்போர்ட் இருக்கும்போது யாராலும் தடுக்க முடியாது – விவரம் இதோ
அதனால் 514 ரன்கள் முன்னிலை பெற்ற இலங்கை டெஸ்ட் கிரிக்கெட்டில் நியூசிலாந்துக்கு எதிராக ஒரு போட்டியில் அதிக ரன்கள் முன்னிலை பெற்று அசத்தியுள்ளது. இதைத்தொடர்ந்து மீண்டும் பேட்டிங் செய்யாத இலங்கை அணி நியூசிலாந்துக்கு பாலோ ஆன் கொடுத்துள்ளது. அதனால் மீண்டும் பேட்டிங் செய்யும் நியூசிலாந்து 3வது நாள் உணவு இடைவெளியில் 3-1 என்ற ஸ்கோருடன் தோல்வியை தவிர்க்க போராடி வருகிறது.



